பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடிஇஎஸ் ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்தது. இதற்காக கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025ஐ தாக்கல் செய்யவும் கர்நாடக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு ஓவர் ைடம் சேர்த்து 10 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதி அமலில் உள்ளது. அதில் திருத்தம் செய்து 12 மணி நேரம் வேலை பார்க்கலாம் என மசோதாவை அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டு இருந்தது. இதை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் பணி 2 ஷிப்டு முறைக்கு வழிவகுக்கும், ஊழியர்களின் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த அறிவிப்பை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம்(கேஐடியு) வலியுறுத்தி வந்தது.
பல்வேறு தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதுதொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜி.மஞ்சுநாத் அறிவித்தார். இதற்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதுபோல் கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட்டும், 12 மணி நேர வேலை திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கே.ஐ.டி.யு. தெரிவித்துள்ளது.