அருமனை, நவ.27: அருமனை அருகே கடையால் பிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தற்போது அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான சுமார் 20 சென்ட் நிலம் பிலாந்தோட்டம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சுரேஷ்குமார், அவரது சகோதரர்கள், அக்காள் கீதாகுமாரி ஆகியோருக்கு சரி பாதியாக பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு குழித்துறை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸ்காரர் சுரேஷ்குமார் தனியாக கட்டிடம் கட்ட பில்லர் அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது அக்காள் கீதாகுமாரி கோர்ட் தீர்ப்பு வரும்வரை கட்டிடம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
ஆனால் சுரேஷ்குமார் எதனையும் பொருட்படுத்தாமல் கட்டிடம் கட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த கீதாகுமாரி, அவரது மகள் ரெஜிதா ஆகியோர் நேற்று காலை கட்டிட பணி நடந்து வரும் இடத்துக்கு சென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கடையாலுமூடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகளுடன் பேச்சுவார்த்ைத நடத்தினர். இதையடுத்து கட்டிட பணி மேற்கொள்ளும் காண்டிராக்டரிடம் நிலம் குறித்து கோர்ட்டில் வழக்கு நடப்பதால் தீர்ப்பு வரும் வரை கட்டிட பணி செய்யக்கூடாது என கூறினர். இதனால் கட்டிட பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து தாய், மகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

