Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிட்வா புயல் மழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாப்பது எப்படி? காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம், டிச.6: காஞ்சி

புரம் மாவட்டத்தில் டிட்வா புயல் மழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக அறியப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவுப்படி, பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை கண்காணித்திட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மைத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களைச்சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும், மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும், பூச்சி நோய் தாக்குதலை தொடர்ந்து கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு மேல் இருந்தால் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும்.

நெற்பயிரில் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு (மஞ்சள் நோய்) காணப்பட்டால் 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டர் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 20 சதவீதம் கூடுதலாக அளிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்டுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு விவரங்களை வட்டார வேளாண்மை அலுவலர்களுக்குத் தெரிவித்து, உரிய ஆலோசனைகளை பெற்று பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தோட்டக்கலைப்பயிர்களில் செடிகள், மரங்களைச் சுற்றி மண் அணைத்தல், ஊன்றுதலுக்கான குச்சிகளை நட்டு கட்டுதல், வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்லாண்டுப் பயிர்களில் அதன் தலைப்பகுதியின் சுமையை(மட்டை, ஓலை) குறைத்து காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். பசுமைக்குடில், நிழல்வலைக்குடில்களில் அதன் அடிப்பாகத்தை நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். சூரிய சக்தியினால் இயங்கும் பம்ப்செட்டுகளில் சோலார் பேனல்கள் அகற்றப்பட அல்லது அதன் சாய்வு கோணத்தினை 0 டிகிரி ஆக மாற்றி வைக்க வேண்டும். சூரியசக்தி மின் வேலி அமைப்பின் சுவிட்சினை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.