Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்சி, புதுகையில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு; 2,180 காளைகள் சீறிப்பாய்ந்தன: 930 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்ைட மண்டையூர், முக்கானிப்பட்டி மற்றும் திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 2,180 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. மருத்துவ பரிசோதனைக்கு பின் 670 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்ைட வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் மற்றும் இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அப்போது அதிமுகவை சேர்ந்த சிலர், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தவுடன் தான் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாடிவாசலில் இருந்து காளைகளை அவிழ்த்து விடுவதில் சிறிது நேரம் தாமதமானது. பின்னர் இருதரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. சிறிது நேரத்தில் ஜல்லிக்கட்டு களத்துக்கு வந்து மாஜி அமைச்சர் விஜயபாஸ்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சேர், எவர்சில்வர் பாத்திரம், வெள்ளிக்காசு மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி கவுதம் தலைமையில் 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி முக்கானிப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த முக்கானிப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் பங்கேற்றன. 230 வீரர்கள் காளைகளை அடக்கினர். காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இங்கு பீரோ, கட்டில், சேர், எவர்சில்வர் பாத்திரம், ரொக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை டவுன் டிஎஸ்பி ராகவி தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நவலூர் குட்டப்பட்டு

திருச்சி நவலூர்குட்டப்பட்டில் அடைக்கல அன்னை, அரவாயி அம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக திருச்சி, தஞ்சை, புதுகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 850 காளைகள் அழைத்து வரப்பட்டன. 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. களத்தில் சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி ேபாட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.