Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய தாய் யானைக்கு தீவிர சிகிச்சை: குட்டி வேறு யானை கூட்டத்துடன் சேர்ந்ததாக தகவல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி அங்கும் இங்கும் அலைகின்றன. இதற்கிடையே, நேற்று காலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது வனப்பகுதியில் உடல் நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்து கிடப்பதையும், அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை நடமாடுவதையும் கண்டனர்.

இது குறித்து உடனடியாக வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் குலால் யோகேஷ் முன்னிலையில் பேரில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தாய் யானையை சுற்றி சுற்றி வரும் குட்டியானையை பராமரித்தனர்.

இதற்கிடையே, அப்பகுதிக்கு வந்த மற்ற யானை கூட்டம் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க குட்டி யானையை சத்தம் போட்டு தன் கூட்டத்துடன் சேர்த்து அழைத்துச் சென்றன. இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணி மேற்கொண்டு வருவதாகவும், உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு சுமார் 45 வயது இருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.