இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம்: விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு
சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான்சாகச நிகழ்ச்சி காரணமாக விமான அட்டவணையில் மாற்றம் குறித்து சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்துள்ளது. இது குறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை: இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன்காரணமாக இன்று 1 முதல் வரும் 8ம் தேதி வரை சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு சில பயண அறிவிப்பை வெளியிடுகிறது. விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் தேவைப்படுக்கிறது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. அதன்படி, முதன்முதலாக அக்டோபர் 1ம் தேதி, 13.45 முதல் 15.15 வரை மூடப்படும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்கும். விமானப் பயண அட்டவணைகளை சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் அவர்களின் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, பயனிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம், இந்திய விமானப்படையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. பயணிகள் தங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.