Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

களரிப்பயிற்றால் மாறுபட்ட நபராக உணர்ந்தேன்!

நன்றி குங்குமம் தோழி

“தேர்வில் தோல்வி அடைந்தேனே தவிர வாழ்க்கையில் அல்ல” என தன்னம்பிக்கையுடன் உரைக்கிறார் காஜல் வஸ்தவா. UPSC தேர்வில் தன் கடைசி வாய்ப்பிலும் தோல்வியடைந்து மனம் உடைந்த நிலையில் களரிப்பயிற்றுக் கலையில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு தன்னை மீட்டெடுத்திருக்கிறார். மேலும் இவர் ‘தவசி மூவ்மென்ட்’ (TAVASI Movement) எனும் இயக்கத்தின் மூலம் இந்தியாவின் பாரம்பரிய கலையான களரிப் பயிற்றுக் கலையை உலகெங்கிலும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தோல்வியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு தன்னம்பிக்கையோடு வெற்றிக்கண்ட தன் வெற்றிக் கதையை நம்முடன் பகிர்கிறார் காஜல்.

“நொய்டா பெருநகரில் அமைந்துள்ள என் வீட்டின் எட்டாவது தளத்தின் பால்கனியில் இருந்து கீழே குதித்துவிடலாமா என வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டேன். பல வருடங்களாக UPSC தேர்வுக்கு தயாராகி தோல்விகளை மட்டுமே சந்திச்சேன். மேலும் தேர்வு எழுதுவதற்கான என் கடைசி வாய்ப்பினையும் தவறவிட்டேன். என்னுடைய தோல்வியை வீட்டில் சொல்ல பயமா இருந்தது. மாடியிலிருந்து கீழே குதிக்க நினைத்ததுகூட என் தோல்வியை நினைத்து இல்லை. என்னை நான் நிரூபிக்கிற முயற்சியில் நான் ரொம்பவே சோர்வடைந்துவிட்டேன். உடனடியா ஒரு அமைதி தேவைப்பட்டது.

UPSC முதல் தேர்விலேயே தோல்வியை சந்தித்தேன். அடுத்தமுறையும் என்னால் தேர்ச்சிப்பெற முடியவில்லை. அப்போதே என் பெற்றோரிடம் பலரும் நான் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதாக தெரிவித்தனர். அதனால் நான் சாப்பாடு கூட சரியாக சாப்பிடாமல் சிக்கனமாக இருந்தேன். கூடுதலாக சிறிது நேரம் தூங்கிவிட்டால், அந்த நேரத்தில் படித்திருக்கலாமே என்ற குற்றவுணர்வு எனக்குள் வந்துவிடும். பயம், பதட்டம் அதிகரித்து, உடல் எடை அதிகரித்தது மட்டுமில்லாமல், தைராய்டு, பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம் போன்ற உபாதைகளுக்கு ஆளானேன். என் நண்பர்கள் பலரும் திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டிலான நிலையில் நான் என் 32 வயதில் ஒரு சிறிய அறையில் புத்தகங்களுடன் அமர்ந்திருந்தேன்.

அடுத்த தேர்வின் போது, குடல்வால் அழற்சி ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் பரிந்துரை செய்த போது, நான் அதை தள்ளிப்போட்டுவிட்டு தேர்வுக்கு சென்றேன். ஆனால் தேர்வு எழுத செல்லும் பாதி வழியிலேயே உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனே எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தேர்வு எழுத வேண்டிய நேரத்தில் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சமயம் வரை UPSC தேர்வில் தேர்ச்சிப் பெறுவதை தவிர வேறு திட்டங்கள் ஏதும் என்னிடமில்லை.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தேர்வுக்கு தயாரானேன். இவ்வாறு ஒவ்வொரு முறையும் முயற்சி செய்து, 6வது முறை தேர்வின் போது மாக் டெஸ்ட்டில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் மெயின் தேர்வில் என்னால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. தேர்வு முடிவுகளும் நான் தோல்வியுற்றதை காட்டியது. இதனால் சோர்வடைந்த நான் எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளலாமென்று பால்கனியில் நின்றிருந்தபோது, என் சகோதரி தடுத்து என்னை அணைத்தபடி ஆறுதல் சொன்னாள்.

‘நீ தோற்றுப்போகல, உன்னால் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகி நாட்டுக்காக சேவை செய்யமுடியவில்லை என்றாலும், உனக்காக வேறு சில வாய்ப்புகள் காத்துட்டு இருக்கு’ என்றாள். அவளின் பேச்சு எனக்குள் மறுபடியும் தன்னம்பிக்கை துளிர்விட செய்தது. பேனாவை எடுத்தேன், ஒரு தாளில், ‘TAVASI - My Movement Of Courage’ என்று எழுதினேன். அந்த வார்த்தைகள்தான் இன்று களரிப்பயிற்றுக் கலையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது” என்றவர், தொடர்ந்து பேசியதில் களரிப்பயிற்றுக் கலையில் தனக்கு பேரார்வம் ஏற்பட்டது குறித்து பகிர்ந்தார்.

“சிறுவயது முதலே, லத்திகேலா எனும் ஒரு வகையான குச்சி சண்டையால் ஈர்க்கப்பட்டேன். ஒருமுறை யோகா பயிற்சியாளர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது களரிப்பயிற்றுக் கலையை பற்றியும், அதன் மூலம் பல்வேறு தற்காப்புக் கலையின் நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம் என்று என்னிடம் கூறியிருந்தார். அதனை நினைவுகூர்ந்து, UPSC தேர்வுக்காக தயார் செய்யும் நிலையிலும் களரிப்பயிற்று கற்றுக்கொள்ள குருகுலம் ஒன்றில் சேர்ந்தேன். இந்தப் பயிற்சி செய்யும் போதெல்லாம் அமைதியை உணர்ந்தேன். தேர்வுக்கு தயாராகும் பயணத்தில், சோர்வடையும் போது எல்லாம் இந்தக் கலைதான் என்னை காத்து வந்தது. முதல் நாளிலிருந்தே இந்தக் கலையை விடக்கூடாதென முடிவு செய்தேன்.

களரிப்பயிற்றில் ஈடுபடும் போது செய்யக்கூடிய உடல் வளைவுகளும் தோரணைகளும் நுணுக்கங்களாலும் எனக்கிருந்த ஸ்பான்டைலிட்டிஸ் எனும் முதுகெலும்பு அழற்சி, தைராய்டு போன்ற பிரச்னைகள் சரியானது. உடல் எடை சீரானது. மனநலமும் மேம்பட்டது. மனதளவில் உடைந்திருந்த என்னை குணப்படுத்துவது போல உணர்ந்தேன். கற்றுக்கொள்ள தொடங்கியதில் இருந்து எந்த நிலையிலும் நான் இந்தக் கலையை விடவில்லை. முற்றிலும் மாறுபட்ட நபராக உணர்ந்தேன்.

மிகவும் கடினமான கலை என்றாலும் அதில் நான் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன். என் குருவான ஷின்டோ மேத்யூ இதில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தன்னம்பிக்கை அளித்தார். நான் பயிற்சி பெற்ற குருகுலத்தில் உதவி ஆசானாக சேர்ந்தேன். சிறப்பு வாய்ந்த இக்கலையை பற்றி தெரியாமல் இருந்திருந்தால் நான் இன்று உயிரோடு வாழ்ந்திருக்க முடியாது. இந்தக் கலைதான் என்னை காப்பாற்றியுள்ளது. நான் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை என்பதை நினைத்து இப்போது பெருமையடைகிறேன்’’ என்றவர் தன் ‘தவசி’ இயக்கத்தின் மூலம், பயிற்சி பட்டறைகளை நடத்தி இக்கலையை மக்களிடம் ஊக்குவித்து வருகிறார்.

“களரிப்பயிற்று வாழ்வியலின் வழக்கமான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது. வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியும் இந்த தற்காப்புக் கலையினை விளையாடலாம். இதில் பல வகை மற்றும் கற்றல் நிலைகள் உள்ளன. மைதாரி, உடல் கட்டுப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். கோல்தாரி, மர ஆயுதங்களை பயிற்சி செய்தல், அங்கதாரி, உலோக ஆயுதங்களை கொண்டு பயிற்சி செய்தல், வெறும்கை கைகளை மட்டும் கொண்டு சண்டையிடும் நுட்பம்.

களரிப்பயிற்று உடல் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். தொடர்ந்து இக்கலையை பயிற்சி செய்வதன் மூலம் ஒருவரின் பொறுமைத்தன்மை மேம்படுகிறது. உடலின் நோயெதிர்ப்புத்தன்மை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. உடல்-மனம் சமநிலை பராமரிக்கப்பட்டு சமூக-உணர்ச்சி மேம்பாட்டையும் ஊக்குவிக்கிறது” என்கிறார் காஜல்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்