Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குதிகால் வலி காரணமும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

பாதத்தை தரையில் வைக்கவே பயப்படும் அளவுக்கு குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் பல பேர் உள்ளனர். காலையில் எழுந்தவுடன் ஓர் அங்குலம் கூட அடி எடுத்து வைக்க முடியாதபடி அதிக வலி ஏற்படும். சிலருக்கு எரிச்சலும் மதமதப்பும் சேர்ந்து இருக்கும். படி ஏறவும் சிரமப்படுவர். ஆனால் இந்த சிரமம் எல்லாமே சில நிமிடங்களுக்குத்தான். வலியைப் பொறுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் குறைந்துவிடும்.

பிறகு அன்றாட வேலைகளை எப்போதும் போல பார்க்கலாம். சிலருக்கு உட்கார்ந்து ஓய்வு எடுத்துவிட்டு நடந்தாலும் வலி ஏற்படும். வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிரால் வலி ஏற்படும் இந்த பிரச்னைக்கு குதிகால் வாதம் (பிளாண்டார் பேசியைட்டிஸ்) என்று பெயர். இந்த குதிகால் வலி ஏற்பட என்ன காரணம், இதற்கு சிகிச்சை முறைகள் என்பதைப் பற்றி பகிர்கிறார் மருத்துவர் துரை.நீலகண்டன்.

காரணங்கள்: நமது பாதத்தில் குதிகால் எலும்பிலிருந்து கட்டை விரலை நோக்கிச் செல்லும் திசுக்கொத்து உள்ளது. இந்த திசுக்கொத்து நமது உடல் எடையைத் தாங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மொத்தத்தில் 14 சதவீதம் உடல் எடையை அது தாங்குகிறது. இதனை அதிகமாகப் பயன்படுத்தும்போது அந்தத் திசுக்கொத்து குதிகால் எலும்போடு இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, உள்வீக்கம் உருவாகிறது இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

சிலருக்கு குதிகால் எலும்பு திசுக்கொத்து சேருமிடத்தில் எலும்பு வளர்ச்சி ஏற்படும். இதற்கு கால்கேனியல் ஸ்பர் என்று பெயர். இதனாலும் குதிகால் வலி ஏற்படலாம்.

மேலும் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் அதிகமாதல், முடக்குவாதம், காசநோய், தட்டைப் பாதம், பிறவிக்குறைபாடு உள்ள பாதம், எலும்புத் திண்மைக் குறைவு நோய் போன்ற பல காரணங்களாலும் குதிகால் வலி ஏற்படும்.

யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவர்நாம் நடப்பதற்கு கெண்டைக்கால் தசை, குதிகால் ஜவ்வு, குதிகால் எலும்பு, பாதத் திசுக்கொத்து, பாதத்தில் உள்ள தசைகள் உதவுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றின் வேலை சரியாக இல்லையென்றாலும் வலி உண்டாகிறது.உடல் பருமன் அதிகமானால் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பவர்கள் பிறவியிலேயே தட்டையான பாதம் உள்ளவர்கள் பலவீனமான கெண்டைக்கால் தசை கணுக்கால் மேல்நோக்கிய இயக்கக் குறைபாடு உள்ளவர்களுக்கு குதிகால் வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பரிசோதனையும் சிகிச்சையும்:

மருத்துவர், நோயாளி கூறும் வலியின் வரலாறு மற்றும் தன்மையை வைத்து அறியலாம். சிறப்பு ரத்தப் பரிசோதனையின் மூலம் HLA, B27, ருமடாய்டு காரணி, யூரிக் அமில அளவு மற்றும் கிருமித் தொந்தரவு வாய்ப்பை அறியமுடியும்.

சிகிச்சை முறைகள்:

பெரும்பாலும் குதிகால் வலி தானாகவே சரியாகக்கூடிய மிகச் சாதாரண பிரச்னையே. இருந்த போதிலும் தாங்க முடியாத வலி மற்றும் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் மருத்துவரின் உதவி தேவைப்படலாம். முதலில் வாழ்வியல் முறையை மாற்றலாம், அதாவது உடல் எடையைக் குறைத்தல், தகுந்த காலணிகளை அணிதல், குதிகால் பயிற்சி, தொடர்ந்து நிற்பதைத் தவிர்த்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

ஓய்வு மற்றும் மிதமான வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். வலி அதிகமாக இருப்பின் பாதிக்கப்பட்ட திசுக்கொத்தில் ஸ்டீராய்டு ஊசி செலுத்தி வலியைக் குறைக்கலாம். இயன்முறை மருத்துவ முறையில் (அல்ட்ராசோனிக் தெரபி) மூலம் பயன் பெறலாம்.தீராத குதிகால் வலிக்கு சில நேரங்களில் திசுப்படலக் கீறல் பயன்தரும்.

பயன் தரும் பயிற்சிகள்

குதிகால் திசுக் கொத்தை துண்டின் மூலம் நீட்டிக்கச் செய்யும் பயிற்சி

நின்றுகொண்டு கெண்டைக்கால் தசையை நீட்டிக்கச் செய்யும் பயிற்சி

கணுக்கால் திசுக்கொத்தை நீட்டிக்கச் செய்யும் பயிற்சி. குதிகால் திசுக்கொத்தை வருடுதல் போன்ற பயிற்சிகள் நல்ல பலனைத் தரும்.