நன்றி குங்குமம் டாக்டர்
சமையலுக்கு சுவையும், மனமும் கொடுக்கும் சோம்பு(பெருஞ்சீரகம்) தனித்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. அதே சமயம், சோம்பினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளும் அதிகம். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம். பொட்டாசியம் சத்து நிறைந்த சோம்பு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதன் மூலமாக இதய நலன் காக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்கள் தினசரி சோம்பு டீ அருந்தி வரலாம். அல்லது இரவில் சோம்பை ஊற வைத்து, காலையில் அதை வடிகட்டி அருந்தலாம்.
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தினசரி உணவில் சோம்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது நன்மை அளிக்கும். ஏனெனில் இது பால் சுரப்பை தூண்டக் கூடியது ஆகும். சோம்பு உடலில் கழிவுகளை அகற்றுகிறது. பெருஞ்சீரகத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய எண்ணெய் சத்து இருக்கிறது. நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை தூய்மையானதாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. உணவு நஞ்சாகி, வயிற்று வலியாக அவதி அடைபவர்கள் பெருஞ்சீரக தண்ணீர் அருந்தலாம்.
உணவகங்களில் சோம்பு ஏன்?
உணவகங்களில் உணவை முடித்தவுடன், பில் கவுன்டரில் அல்லது உணவு மேஜையில் ஒரு கிண்ணத்தில், பச்சை அல்லது வெள்ளை நிறப் பெருஞ்சீரகம் இருப்பதை பார்த்திருப்போம். உணவு உண்ட பின் பலரும் அதை வாயில் போட்டு மெல்லும் வழக்கத்தை கொண்டிருப்போம். இது வெறும் வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல், பென்சோன் போன்ற எண்ணெய்கள், செரிமான நொதிகளை தூண்டி, உணவை விரைவாகச் செரிக்க உதவுகின்றன. சோம்பு வாய் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. நமது வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், நம் உணவுக் குழாயில் பாக்டீரியாக்கள் குடி கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த பாக்டீரியாக்களை எதிர்த்துப் போரிடும் பண்பு பெருஞ்சீரகத்திற்கு இருக்கிறது. நாம் சாப்பிட்ட பிறகு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. எனவேதான், ஹோட்டல்களில் சாப்பிட்ட பிறகு விருந்தினர்களுக்கு சோம்பு தரப்படுகிறது. உணவுக்கு பிறகு அரை டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை மென்று சாப்பிடுவது போதுமானது.


