Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் யாருக்குப் பொருந்தும்?

நன்றி குங்குமம் டாக்டர்

இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் என்பது இடைக்கால விரத முறையாகும். அதாவது, உண்ணுதல் மற்றும் உண்ணாவிரதம் இரண்டுக்கும் இடையில் மாறி மாறி சாப்பிடுவதை உள்ளடக்கிய ஒருவித உணவுத் திட்டமாகும். இந்த இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை நம் நாட்டுக்கு புதிதல்ல, நம் முன்னோர்கள் காலத்திலேயே இயல்பாக இருந்த ஒன்றுதான்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிட்டு, மற்ற நேரங்களில் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருப்பதுதான் இடைக்கால விரத முறையாகும். உதாரணமாக காலையிலும் இரவிலும் சாப்பிடாமல் இருந்து, மதியமும் மாலையிலும் சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகளை உள்ளடக்கி உள்ளது. இது சமீபகாலமாக உடல் நல ஆரோக்கியத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய அணுகுமுறை அல்ல, ஆனால் இது பலருக்கும் பலன் தந்துள்ளது. எனவே, இதற்கான அடிப்படைகள் என்ன இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதை நமக்கு விளக்குகிறார் உள் மருத்துவ மூத்த ஆலோசகர் மருத்துவர் அஸ்வின் கருப்பன், க்ளீனிகிள்ஸ் மருத்துவமனை.

இடைக்கால விரதம் என்றால் என்ன?

இடைக்கால விரதம் என்பது உண்ணும் முறைகளின் நேரத்தைக் கணக்கிடுவதற்கான ஒரு வழி முறையாகும். இது ஒருவர் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ அல்ல, அவர் எப்போது சாப்பிடுகிறார் மற்றும் சாப்பிடும் முறையை பற்றியது.

இடைக்கால விரதம் செயல்படும் முறை

குறிப்பிட்ட நேரத்திற்கு எதையும் சாப்பிடாமல், தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருந்து, சாப்பிடும் நேரத்தில் வழக்கமான உணவை சாப்பிடுவது. இதன் செயல்முறையாகும். அதாவது, அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பெரும்பாலானோருக்கு தினசரி மூன்று வேளைக்கான உணவு கிடைக்கவில்லை. அதனால் அவர்களின் உடல் பல மணிநேரம், பல நாட்கள் கூட உண்ணாமல் இருக்கப் பழகின. பின்னர், உணவு கிடைக்கும்போது நன்றாக சாப்பிட்டனர். இதுதான் இதன் அடிப்படையாகும்.

இந்த செயல்முறையினால், உடல் எடை கட்டுக்குள் இருப்பதோடு, வேறு பல நன்மைகளும் கிடைக்கின்றன. குறிப்பாக, சிதைந்த செல்களை சீரமைத்து, புதிய செல்கள் உருவாகும். சிதைந்த செல்கள் சரியாகாமல் அப்படியே தங்கும்போதுதான் புற்றுநோய், அல்சைமர் போன்ற பல நோய்கள் உருவாகிறது. செல்களுக்கு அதிக வேலை தராமல் விரதம் இருந்து ஓய்வு தரும்போது, அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. இதனால் நோய்களின்றி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகுக்கிறது. எனவேதான் தற்போது இந்த இடைக்கால விரதம் பிரபலமடைந்து வருகிறது.

இடைக்கால விரத முறைகள்

இடைக்கால விரதத்தைப் பொறுத்தவரை பல முறைகளில் உள்ளது. உங்களுக்கான சிறந்தது எது என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் மிகவும் பிரபலமானது 16/8 என்ற முறையாகும். அதாவது, 16 மணி நேரம் விரதம் இருந்து 8 மணிநேர முறையில் சாப்பிட வேண்டும். இது பொதுவானது. இதையே பலரும் கடைபிடித்து வருகிறார்கள்.

மற்றொரு முறை 5:2 முறையாகும். இதில் ஐந்து நாட்களுக்கு வழக்கம்போல சாப்பிட்டு, மற்ற இரண்டு நாட்களுக்கு, தண்ணீர், சர்க்கரை இல்லாத பால், காபி போன்ற கலோரி இல்லாத உணவுகளை உட்கொள்வதால், வாரத்திற்கு சுமார் 500-600 கலோரி வரை குறைக்கலாம்.

அடுத்ததாக, சிறந்த உடல் கட்டமைப்பை விரும்புபவர்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும்முறை. இதில் நம் வசதி மற்றும் வாழ்க்கை முறைக்கேற்ப ஏதாவது ஒரு முறையை பின்பற்றலாம். அதுபோன்று, ஒரு நாளுக்கு ஒரு உணவு அணுகுமுறை இன்னும் கட்டுப்பாடானது. இதனால், தினசரி கலோரிகள் அனைத்து ஒரே உணவில் உட்கொள்ளும்படி இருக்கும். பொதுவாக 1 மணி நேர இடைவெளியில். இந்த முறைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நன்மைகளை வழங்குகின்றன, ஆனால் இதில், அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மற்றும் காலப்போக்கில் நிலையானதாக இருக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்து வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். எனவே, குறுகிய கால விரத முறையுடன் துவங்கி படிப்படியாக அடுத்த அடுத்த நிலைகளுக்கு தயார்படுத்திக் கொள்வது நன்மை செய்யும்.

இடைக்கால விரதத்தின்போது என்ன சாப்பிடலாம்?

இடைக்கால விரதம் என்பது எப்போது சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல, என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் உள்ளடக்கியது. எனவே, நாம் எடுத்துக்கொள்ளும் உணவு விரதத்தின் நன்மைகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். அதனால், என்ன சாப்பிடுவது என்பதை தெரிந்து சாப்பிடுவது நல்லது. அந்தவகையில், காய்கறிகள், பழங்கள், குறைந்த கலோரி கொண்ட புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை விரத காலத்தில் ஆற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை தின்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை சோர்வை ஏற்படுத்துவதோடு, விரதத்தின் முழுப் பலனையும் பெறுவதைத் தடுக்கும்.

இடைக்கால விரதப் பலன்கள்

இடைக்கால விரதத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை:குடல் ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மை: செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்துகிறது, உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது. எடை இழப்பு: வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், இயற்கையாக கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலமும் கொழுப்பு இழப்பை

ஆதரிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட இன்சுலின் உணர்திறன்: சிறப்பான இன்சுலின் செயல்பாட்டால், டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். குறைக்கப்பட்ட அழற்சி: நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கலாம், பல்வேறு நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.

இடைக்கால விரதம் சரியானதா?

இடைக்கால விரதம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்றாலும், அது அனைவருக்கும் ஏற்றது அல்ல. இடைக்கால விரதம் குறித்த நன்மை மற்றும் தீமைகள் குறித்து அறிய ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் எடை உள்ளிட்டவை குறித்து கண்காணிப்பது அவசியம் ஆகும். அவ்வாறு அதை கண்காணிக்கும்போது அதில் தேவையான மாற்றங்களைச் செய்வதும் அவசியம்.

*கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள்

*குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்

*உணவுப் பிரச்னை உள்ளவர்கள்

*நீரிழிவு போன்ற நாள்பட்ட பிரச்னை உள்ளவர்கள்

*குறைந்த உடல் எடை அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்.இதை கடைபிடிக்கக் கூடாது.

இந்த விரத முறையைத் தொடங்குவதற்கு முன் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசித்து, இது உங்கள் உடல்நலத் தேவைகளுக்கு பாதுகாப்பானது மற்றும் பொருத்தமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்..

பக்க விளைவுகள்

இடைக்கால விரதம் நன்மைகளை அளிக்கும் அதே வேளையில், சில நபர்களுக்கு அது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அவை வருமாறு:

*பசி மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் சரியாக சமநிலையில் இல்லாவிட்டால் சோர்வு மற்றும் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

*உணவு உண்ணும் காலங்களில் அதிகமாகச் சாப்பிடுவது, எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

*தூக்க முறைகளில் இடையூறுகள் ஏற்படலாம்.

*கவனமாக பின்பற்றாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இடைக்கால விரதம் என்பது நீங்கள் எப்படி, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதை பொருத்து நன்மையோ, தீமையோ ஏற்படலாம். எனவேதான், இது சிறந்த ஆரோக்கியத்திற்கு தேவையான ஊக்கமாக இருந்தாலும், அனைவருக்குமானது இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெற்று, அது சரியானதாக, உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக இருந்தால், அது ஒரு கேம்-சேஞ்சராக மாறலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்