நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
அகமெனும் அட்சயப் பாத்திரம்
எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு ( Borderline Personality Disorder )
எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு எனப்படும் Borderline Personality Disorder பற்றி பார்த்துவருகிறோம். இந்த BPD - க்கும் இதர மனக்கோளாறுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று கடந்த இதழில் சொன்னேன். அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1.பிறருக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தும் ஆளுமை கோளாறுகளான Anti -Social Disorder, Narcissitic disorder, Psychopath போன்றவற்றில் பாதிப்பு கொண்டவர் தனக்கு பாதிப்பு இருப்பதை உணர்வதில்லை. ஆனால், BPD பாதிப்பு கொண்டவர் தான் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகக் கோபப்படுகிறோம், சில நேரம் வழக்கத்துக்கு மாறாக ஏதோவொரு உந்துதலின் வாயிலாக செயல்படுகிறோம் என்பதை சண்டை /பிரச்சனை முடிந்தபின் உணர்ந்து கொள்வார். வருத்துவார்.
2.தனது கட்டுப்பாடற்ற நடத்தைகளை இவர் வெளிப்படையாகக் காட்டிவிடுகிறார். தந்திரமாக மறைப்பதில்லை. பிற மனநலக் கோளாறுகள் கொண்டவர்களால் பெரும்பாலும் அவ்வாறு உணர முடிவதில்லை.3.அடிப்படையில் கருணையும் மனிதாபிமானமும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டு. அக்கறையோடு அவர்களை கவனித்து, அவர்களுக்கு சாதகமான வகையில் செயலாற்றினால் அவர்களுடைய நடத்தையைக் கட்டுப்படுத்த இயலும்.பிற கோளாறுகளில் இந்த வாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவு.
4. தொகுப்பு 1, 2 இல் இடம் பெற்றுள்ள சில ஆளுமைக் கோளாறுகள் தன்னைப் பற்றி உயர்வு மனநிலையைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே BPD மூன்றாம் தொகுப்புக் கோளாறுகளைப் போல் தன்னைப் பற்றி தாழ்வான எண்ணத்தைக் கொண்டுஇருக்கிறது.5.உளவியல் ஆரம்பக்கட்ட சோதனைகளில் சில நேரம் BPD யும் NPD (Narcissistic) இரண்டும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ள நேரிடுகிறது. ஆனால் NPD போலியான ஒன்றை உறுதியாக நம்புகிறது. அதையே பிறரையும் நம்பச் சொல்லி மனத்திரிபு (Manipulate) செய்கிறது. ஆனால், BPD தனக்கான அடையாளம் கிடைக்கவில்லை எனக் கோபம் கொண்டு உணர்வுகளின் உந்துதலால் தீவிரமாக செயல்படுகிறது.
6.Psychopath, NPD, Anti social பாதிப்பு உள்ளவர்கள், தான் நிலையான தன்மையில் அமைதியாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொள்கிறார்கள்.இதனால் அடுத்தவர்களை குழப்பி எது உண்மை என்ற தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் BPD பாதிப்பு கொண்டவர்கள் தங்களையே அப்படியான தடுமாற்றமான நிலைக்குத் தள்ளிக் கொள்கிறார்கள்.
எனவே BPD பாதிப்பு கொண்டவர்கள் தாங்களே சிகிச்சை பெற முன்வருவார்கள் என்பதனால் சிகிச்சை அளிப்பது எளிது. பிறரோடு நல்ல உறவினை பேண வேண்டும் என்ற ஏக்கம் மேலோங்கி இருப்பதால் ஆலோசனைக் கட்டம் , செயல்முறைப் பயிற்சிகளில் இவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும்.
“விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை” என்ற பழமொழிக்கு பொருத்தமாக தன்னை விட்டுக் கொடுத்து இறங்கி வந்து தன் குறைகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மனநலக் கோளாறுகள் பெரிதளவில் தவிர்க்கப்படும் இல்லையா?
புறக் காரணிகளால் உடனடியாகத் தூண்டப்பட்டு, காபி சரியில்லை, சாப்பாடு சரியில்லை, இந்த தட்டச்சில் ஏன் இப்படி ஒரு பிழை ஏற்பட்டுவிட்டது, அன்று நீ பேசும் போது ஏன் அந்த ஒரு வார்த்தையைக் கூறினாய்- இப்படி ஒரு சிறிய விஷயத்தைப் பிடித்துக் கொண்டு அதற்கு தீவிரமான எதிர் வினையாற்றும் இவர்களைக் குழந்தைபோல் பாவிக்க வேண்டும்.
நாம் இங்கே விவரித்த BPD - யின் தன்மைகள், அறிகுறிகளோடு நமக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்னைகளைப் பொருத்திப் பார்த்தோம் எனில் நாம் எண்ணற்ற BPD மனிதர்களோடுதான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறதுதானே. அது உண்மைதான். நாம் எல்லோருமே பல நேரங்களில் அலுவலகங்களிலும், குடும்பங்களிலும் இது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தி இருப்போம். உடனே பதற்றமாகிவிடக்கூடாது BPD ஆரம்ப நிலையில் இருக்கிறது என்பதை நாமே உணர்வது எளிதாக இருக்கிறது இல்லையா? எங்கே பிரச்னை என்று தெளிவாகத் தெரிகிறதோ அங்கே தீர்வும் எளிதாகிறது என நேர்மறையாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலப்போக்கில் வயது கூடும்போது அனுபவங்களால் மனப்பக்குவம் ஏற்பட்டு BPD யின் ஆதிக்கம் குறைவதற்கும் பெருமளவில் சாத்தியங்கள் உண்டு. எனவே, இதை எல்லாம் ஒரு மனநலக் கோளாறாகவே கூறக்கூடாது. இது ஒரு செயலூக்கக் காரணி. விவாதிக்கும் உளவியல் ஆராய்ச்சியாளர்களும் இன்றும் இருக்கிறார்கள். இதுவும் நம்பத்தகுந்த மாற்றுக்கோணமே என்று உலக அளவில் நடத்தப்பட்ட கணக்கீட்டு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. உண்மைதான். ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போலவே இளம் வயதில் விளைவுகள் குறித்த பயம் இல்லாமல் எல்லாவற்றிற்கும் தீவிரமாக எதிர்வினையாற்றிய பலரும் மத்திம வயதில் கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாகிவிடுவதை நாமும்தான் பார்க்கிறோமே.
இப்படி ஆயுள் முழுவதும் ஏதோ ஒரு விதத்தில் நம்மோடு உடன் வந்துகொண்டே இருக்கும் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறு எங்கிருந்துதான் தோன்றுகிறது? அதுவும்கூட பல்லாண்டுகள் ஆராய்ச்சிக்குரிய விவாதத்திற்குரிய பொருளாகவே இருந்து வந்தது. ஆனால் இறுதியான முடிவாக நவீன உளவியல் மரபுவழிக் காரணிகளையே முன்னிருத்திக் காட்டுகிறது..பரம்பரையில் யாருக்கேனும் BPD பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, என்னதான் நாம் கவனமாக இருந்தாலும் நம்மை மீறி சில சிக்கல்கள் இவ்வாறு நமக்கு வரும்போது எனக்கு ஏன், என் குழந்தைக்கு, கணவருக்கு, மனைவிக்கு மட்டுமே ஏன் இப்படி ஏற்படுகிறது என்று வருந்தக் கூடாது.புரிதலையும் தீர்வையும் நோக்கி நகர வேண்டும். தனக்கான கவனத்தை எப்போதும் வேண்டும் என்பதோடு தன்னை விட்டு யாரும் போய்விடக்கூடாது என்றும் அச்சம் கொண்ட சிறு குழந்தையின் நிலையிது என்று கருத வேண்டும்.
அப்போது தீவிரமாக ஒரு பிரச்னையை BPD பாதிப்பாளர் கொண்டு செல்ல முனையும்போது, இன்னொருவருக்கு புன்னகையோடு, கனிவான அக்கறையும் தோன்றும். இன்னொருவரது செயல்கள் கட்டுக்குள் இருக்கும்போது பிரச்னைகள் பெரிதாக வாய்ப்பு குறைவு. இவ்வாறின்றி BPD யின் அறிகுறிகளைக் கொண்டுள்ள நபரை கவனிக்காமல், அவருடைய கோபத்தையும் உந்துதலான நடத்தைகளையும் அலட்சியமாக புறக்கணித்தால் உளநோய் தீவிரமடையும்.
சாதாரணமான மனிதன் நவரசங்களின் கலவையாக இருப்பதுதான் இயல்பு. எனவே, ஒரு குறிப்பிட்ட அளவு கோபமும், எதிர்வினைகளும் அவசியமே. இல்லாவிட்டால் நீ என்ன உணர்ச்சியற்ற மரக்கட்டையா? என்று கேப்போம். உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆழ் மன இறுக்கங்களைத் தளர்த்தவும், வடுக்களாக மாறிப்போன கடந்த கால காயங்களின் நினைவுப் பிடியில் இருந்து மீளவும் நிச்சயம் உதவும் என்கிறது உளவியல் மருத்துவம்.
சரி கோபம் இருக்கும் இடத்தில் கொஞ்சமாவது குணம் இருக்கும் அவ்வளவுதானே என்றுகூறிவிட்டு மட்டும் கடந்து விட முடியாது. ஏனெனில், சமீபத்திய புள்ளி விவரப்படி உலக அளவில் ஆயிரம் பேரில் 7 பேருக்குத்தான் முதிர்வடைந்த நிலையில் எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு இருக்கிறது என்ற சான்றுகளோடு சொல்லி நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. அதே BPD குறித்த ஆய்வின் மற்றொரு புள்ளி விவரம் அதே ஆயிரம் பேரில் 50 முதல் 60 சதவீதத்தினருக்கு Borderline Personality Disorder - பாதிப்பின் ஆரம்பநிலை அறிகுறிகள் இருக்கின்றன என்று எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளது.
அதோடு, BPD எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் அதிர்ச்சி ரிப்போர்ட்டை நீட்டுகிறது. “இப்படி கால் வைக்குற இடமெல்லாம் கண்ணிவெடி வைத்தால்...” என்று புலம்பும்படியாகத்தான் இருக்கிறது இன்றைய நம் உளவியல் நிலவரம்.“எவ்வளவோ பார்த்து விட்டோம் அதையும்தான் பார்த்து விடுவோமே..” அடுத்த இதழில் எல்லைக்கோட்டு ஆளுமைக் கோளாறின் பரவலான ஆதிக்கம் மற்றும் தகுந்த சிகிச்சை முறைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.