நன்றி குங்குமம் டாக்டர்
வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள்.
ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) உயர இழப்பு ஏற்படுமானால், அது முதுகெலும்பு அழுத்த முறிவின் (VCF) ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இந்த முறிவுகள், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் எலும்புப்புரை (osteoporosis) நோயினால் ஏற்படும் பின்விளைவுகளாகும் என்கிறார் தண்டுவட அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர், மருத்துவர் விக்னேஷ் ஜெயபாலன். இதற்கு காரணம் என்ன.. தீர்வு என்ன.. என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
முதுகெலும்பில் உள்ள ஒன்று அல்லது பல எலும்புகள் நசுங்கும்போது முதுகெலும்பு அழுத்த முறிவு ஏற்படுகிறது. இது பொதுவாக பலவீனமான, நுண்துளைகள் கொண்ட எலும்புகளின் காரணமாக நிகழ்கிறது. எலும்புப்புரை பாதிப்பு இருக்கும்போது, முதுகை வளைப்பது, குனிவது, இருமுவது அல்லது பொருட்களைத் தூக்குவது போன்ற அன்றாட செயல்களே இதுபோன்ற முதுகெலும்பு முறிவுகளை ஏற்படுத்தப் போதுமான காரணமாக இருக்கலாம்.
இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தாமதமாக கண்டறிவதற்கு முக்கிய காரணம், தாங்கள் என்ன பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்பதை நோயாளிகள் உணர்வது அவர்களுக்கு மிகவும் கடினமானது. ஏனெனில், முதுகெலும்பு அழுத்த முறிவுகள் குறிப்பிட்டு சொல்ல முடியாத முதுகுவலியாகவே இருக்கும். மேலும், காலப்போக்கில் அந்நபரின் தோற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப நிகழும் நுண் முறிவுகள் நோயாளிக்கு நாள்பட்ட வலி, உயர இழப்பு மற்றும் கூன் விழுந்த தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, சிரமப்படுமாறு செய்வதுடன் அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
இதற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள் யார்?
மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள்: இவர்களிடம் ஈஸ்ட்ரோஜென் குறைவாக இருப்பது எலும்பு வலுவிழப்பை மேலும் துரிதப்படுத்துகிறது.
50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் குறைந்த உடல் எடை அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நபர்கள்: குறிப்பாக வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைவான அளவு கால்சியம் உட்கொள்பவர்கள்.
பரிந்துரைக்கப்படும் மருத்துவத் தீர்வுகள்
எலும்பு அடர்த்தி சோதனைகள் (DEXA ஸ்கேன்): முதுகெலும்பு முறிவைக் கண்டறிவதில் ஆரம்பகால நோயறிதல் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் மற்றும் வயதான ஆண்களுக்கு எலும்புப்புரைக்கான பரிசோதனையை குறித்த காலஅளவுகளில் செய்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். குறிப்பாக அவர்களுக்கு உயர இழப்பு, முதுகெலும்பு வளைவு போன்ற அறிகுறிகள் இருக்குமானால், இச்சோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.
வெர்டிப்ரோபிளாஸ்டி அல்லது கைஃபோபிளாஸ்டி: எலும்பு முறிவானது கடுமையான அழுத்த முறிவு வகையாக இருக்குமானால், வலியைக் குறைக்கவும் முதுகெலும்பை உறுதிப்படுத்தவும், தண்டுவட எலும்பில் முறிவு ஏற்பட்ட இடத்தில், எலும்பு சிமென்ட்டைக் கொண்டு உறுதியாக்கவும் மற்றும் ஊசிமூலம் செலுத்தவும் சிறிய கீறல்கள் மட்டுமே இந்த மருத்துவ செயல்முறைக்கு தேவைப்படும்.
உடற்பயிற்சி சிகிச்சை: முதுகெலும்பை நீட்டுதல், தோற்றத்தைச் சரிசெய்தல் மற்றும் முதுகின் மையப்பகுதியை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படலாம். ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்தவும் கண்காணிப்பின் கீழ், அத்திட்டத்தை செயல்படுத்துவது உதவக்கூடும்.
பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகள் மற்றும் சுய-பராமரிப்பு நடவடிக்கைகள்
மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் முக்கியமானவையே. எனினும், அச்சிகிச்சைக்கு சில வீட்டு வைத்திய வழிமுறைகள் ஆதரவளிக்கக்கூடும்:எலும்பு அடர்த்தி குறையும்போது, எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். சுவரில் கைகளை வைத்து நகர்த்துவது அல்லது தாடையை உள்ளிழுத்து (சின் டக்ஸ்) மெதுவாக விடுவது போன்ற உடற்பயிற்சிகள் கூன் விழுவதை தடுக்கவும், குறைக்கவும் உதவும். இதன்மூலம் கூன் விழாமல் உங்கள் உடல் தோற்றத்தை உங்களால் பராமரிக்க முடியும்.
குறைவான தாக்கம் ஏற்படுத்தும் அல்லது தாக்கம் இல்லாத எடை தாங்கும் பயிற்சிகள் (எ.கா. நடைபயிற்சி, யோகா (கண்காணிப்பின் கீழ்)) வயதாகும்போது எலும்பு அடர்த்தி இழப்பை தாமதப்படுத்தவும் மற்றும் கீழே தவறி விழுவதைக் குறைக்கவும் உதவும்.
முதியவர்கள் தரையில் ‘விழாமல் தடுக்கும்’ வகையில் வீட்டை மாற்றியமைப்பது: இலேசாக கீழே விழும் நிகழ்வுகள் கூட மோசமடைந்திருக்கும் எலும்புகளில் முறிவுகளை உருவாக்கலாம். போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்வது, பொருட்கள் அடைசலாக சிதறிக்கிடக்கும் நிலையை அகற்றுவது தேவைப்படும் இடங்களில் பிடிமானக் கம்பிகளை அமைப்பது ஆகியவற்றின் மூலம், உங்கள் வீட்டை முடிந்தவரை ‘விழாமல் தடுக்கும்’ வகையில் பாதுகாப்பானதாக மாற்றலாம்.
பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான தளவாடங்களைப் பயன்படுத்துதல்: முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலிகள் ஒரு நபரின் இயற்கையான நேரான முதுகெலும்பு தோற்றத்தை ஆதரிக்க உதவுகின்றன; மேலும் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கின்றன.
உணவுமுறை: கால்சியம் (பருப்பு வகைகள், பால் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவுகள், கீரை வகைகள்) மற்றும் மெக்னீசியம் (பருப்பு / கொட்டைகள்) எலும்புகளின் உறுதியை
மேம்படுத்துகின்றன. கூனல் விழுந்த தோற்றத்தை அல்லது உயரம் குறைந்து வருவதை வயது முதிர்வால் வரும் ஒரு பிரச்னையாக கருதி அலட்சியம் செய்யக்கூடாது. முதுகெலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவையே; ஆரம்பத்திலேயே இவை கண்டறியப்படுமானால், சிகிச்சையின் மூலம் சரிசெய்யக்கூடியவையே.
எனவே ஆரம்பகாலத்திலேயே பாதிப்புகளையும் மற்றும் அதன் அறிகுறிகளையும் கண்டறிவது மிக முக்கியமானது. ஆரம்பகட்ட பரிசோதனை, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைப் பெறுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது ஆகியவை ஒரு நபரின் குறிப்பாக, நடுத்தர வயதை கடந்த நபரின் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவும்.
தொகுப்பு: ஸ்ரீ