Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

புற்று நோய் என்பது உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஒரு சில உடல் செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவுகின்றன. இதன் காரணமாக புற்று நோய் ஏற்படுகிறது. பொதுவாக, மனித செல்கள் வளர்ந்து பெருகி, புதிய செல்களை உருவாக்குவதற்கான சிக்னல்களைப் பெறும்போது அவை உருவாகின்றன.

இந்த வழக்கமான செயல்முறை மாறுபடும்போது, சேதமடைந்த செல்கள் தொடர்ந்து வளர்ந்து பெருகும். இந்த அசாதாரண மற்றும் சேதமடைந்த செல்கள் ஒன்றிணைந்து புற்றுநோயை உருவாக்குகின்றன. புற்றுநோயைப் பொறுத்தவரை 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்றும் அவை வராமல் தடுப்பது எப்படி என்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்தும் க்ளெனீகில்ஸ் ஹெல்த்சிட்டி சென்னையின் மருத்துவ ஆலோசகர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கே. அஸ்மி சவுந்தர்யா இங்கு விரிவாக கூறியுள்ளார்.

புற்றுநோய் வருவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை, குடும்பப் பின்னணி, மரபணு பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவற்றின் காரணமாக ஒருவர் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கு சில காலம் ஆகும். வயது அதிகரிக்கும் போது, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் மேற்கண்ட காரணங்கள் இல்லாதவர்களுக்கும் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கும், மற்றொருவருக்கு புற்றுநோய் வருவதற்கும் என்ன காரணம் என்பது குறித்தும் தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை.

எனவே புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதைத் தடுப்பதற்கு ஆரம்பகால நோய் கண்டறிதல் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துவதும், புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையைக் காட்டுவதுமே அதற்கு சிறந்த வழிமுறையாகும். கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புதிய புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 14,61,427 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-ம் ஆண்டில் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நுரையீரல் மற்றும் வாய்வழி குழி புற்றுநோய் ஆண்களில் மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது. அதேசமயம் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களில் பொதுவான ஒன்றாக உள்ளது.

புற்றுநோயைத் தடுப்பதற்கான சில வழிகள்

முதன்மையான தடுப்பு என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளான கார்சினோஜென்களுக்கு ஆளாகாமல் தடுப்பதாகும். மேலும் புற்றுநோய் ஏற்படுவதைக் குறைப்பதற்கான ஒரே வழி அதை தடுப்பது மட்டுமே ஆகும். புற்றுநோய் தடுப்பு என்பது புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும். அனைத்து புற்று நோய்களையும் தடுக்க முடியாது, ஆனால் ஆபத்தைக் குறைக்க நாம் சில விஷயங்களை செய்யலாம், அதாவது, மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துதல், உடல் எடையை ஆரோக்கியமாக பராமரித்தல், ஆரோக்கியமான உணவு, வீட்டிலோ அல்லது வேலையிலோ பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்பாட்டை தவிர்ப்பது, ஹெபடைடிஸ் பி மற்றும் எச்பிவி-க்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடுதல், அதிக அளவில் வெயிலில் சுற்றுவதை தவிர்ப்பது போன்றவை புற்று நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.

இரண்டாவது நிலை தடுப்பு என்பது பரிசோதனை மூலம். எந்த அறிகுறிகளும் தோன்றுவதற்கு முன்பே புற்றுநோய்களைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் வாய்வழி குழி புற்றுநோய் வராமல் தடுக்க குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை 25 வயதில் பேப் ஸ்மியர் மூலம் தொடங்கப்பட வேண்டும். வருடாந்திர மேமோகிராம் மூலம் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையை 40 வயதில் இருந்து செய்து கொள்ளலாம். பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பரிசோதனை 45 வயதிலும், புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பரிசோதனையும் செய்வது மிகவும் நல்லது. இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வழக்கமான பரிசோதனை திட்டங்களில் சேரும்போது, அதில் தேவைப்படும் நபர்கள் மருத்துவ நிபுணர்களை சந்தித்து அது குறித்து ஆலோசனைகளை பெறலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்