Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்கிங் நிமோனியா...

நன்றி குங்குமம் டாக்டர்

உஷார் ப்ளீஸ்!

குழந்தைகள் உடல் பூவைப்போல் மென்மையானது. அவர்களின் எலும்புகள் முதல் உள்ளுறுப்புகள் வரை பலதும் பெரியவர்களைப் போன்று வலுவாக இருக்காது. இந்நிலையில் அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான் வாக்கிங் நிமோனியா.வாக்கிங் நிமோனியா என்பது நுரையீரலை பாதிக்கக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் ஏற்படுகிறது.

பொதுவாக, நிமோனியா என்பது நுரையீரல் திசுக்களில் ஏற்படும் ஒருவித தொற்று ஆகும். இதற்கு. மேம்பட்ட சிகிச்சைகள் தற்போது உள்ளபோதிலும், குறிப்பிடத்தக்க நோயுற்ற தன்மை மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு சவால்களை நாம் இன்னும் சந்தித்து வருகிறோம். நிமோனியா எதன்மூலம் ஏற்படுகிறது என்பதற்கான பல காரணங்கள் உள்ளது. இருந்தபோதிலும் தற்போது வரும் இந்த புதிய நிமோனியாவைப் பொறுத்தவரை அது நுண்ணுயிரிகளின் பொதுவான குழு மற்றும் வித்தியாசமான குழு மூலம் ஏற்படுகிறது.

வித்தியாசமான நிமோனியா என்பதைதான் ‘வாக்கிங் நிமோனியா’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வழக்கமான பாக்டீரியா, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா, எச் இன்ப்ளூயன்ஸா போன்றவற்றால் ஏற்படாத ஒரு வகை நிமோனியாவாகும் என்று மருத்துவர் பத்மா சுஷ்மா தெரிவிக்கிறார். இது குறித்து அவர் மேலும்

கூறியதாவது.

வாக்கிங் நிமோனியாவின் வகைகள்

மைக்கோப்ளாஸ்மா நிமோனியா இது குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படுகிறது.

கிளமிடோபிலா நிமோனியா: இது பெரும்பாலும் பெரியவர்களை பாதிக்கிறது.

லெஜியோனெல்லா நிமோனியா: குறிப்பாக பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இன்ப்ளூயன்ஸா வைரஸ்: இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் அடிப்படை நோய் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.

பூஞ்சை தொற்றுகள்: நிமோசைஸ்டிஸ் ஜிரோவெசி போன்றவை, பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகளைப் பொறுத்தவரை சளி, காய்ச்சல் மற்றும் முக்கியமாக, தொடர்ந்து இருமல் ஆகியவை, வறண்ட இருமல், உடல் சோர்வு, தலைவலி மற்றும் உடலில் வியர்வை ஏற்படுதல் போன்றவை ஆகும். சிலருக்கு தசை வலியும், கடுமையான நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படலாம். நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் ஆகும்.

2 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கெனவே ஆஸ்துமா அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்கள், சிறுநீரக நோய்கள் அல்லது தன்னுடல் தாக்க நிலைகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் அல்லது புற்றுநோய் போன்ற பிற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இத்தகைய அதிக ஆபத்து உள்ள நபர்களுக்கு மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்தாலும் அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது என்பது சிறந்த வழியாகும். மருத்துவர் உடல் பரிசோதனை உட்பட ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்ரே பரிசோதனைக்கும் பரிந்துரை செய்யலாம். நோய்த்தொற்றின் தீவிரத்தை அறிய ரத்த பரிசோதனையும் செய்யப்படும். இந்த பரிசோதனைக்கு பிறகு, உடனடியாக சிகிச்சை செய்யப்படும்.

இந்த நோய் பாக்டீரியாவால் ஏற்படுவதால் இதற்கு பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்புகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்புகளுடன் கூடுதலாக, அறிகுறிகளைப் போக்க உதவும் பிற சிகிச்சைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

தற்காத்துக்கொள்ளும் வழிகள்

பொதுவாக சாதாரண நிலையில் இருக்கும்போது அதற்கு போதிய ஓய்வும், உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முற்றிய நிலையாக இருந்தால் சுவாச பாதிப்பு ஏற்படலாம். இதற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டும். ரத்த ஓட்டத்தில் பரவினால் செப்சிஸ் ஏற்படலாம். குறிப்பாக இதயத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வந்தபின் குணப்படுத்துவது என்பதைவிட இந்த நோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது என்பது சிறந்த ஒன்றாகும். இதற்கான தடுப்பூசி போட்டுக் கொண்டால் இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதேபோல் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், இந்த நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தாமை போன்றவற்றை கடைபிடிக்கும்போது வாக்கிங் நிமோனியோ வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

தொகுப்பு: தவநிதி