Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நடைபயிற்சி செய்யும் முறைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலச்சூழலில் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையி்ல், உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் அவசியமாகிறது. ஆனால் நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. எனவே, தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நடை பழக்கத்தையாவது மேற்கொள்வது சிறந்ததாகும்.

ஏனென்றால், நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது. மேலும், நுரையீரல் சுவாசத்தை சீராக செயல்பட வைக்கிறது. செரிமானக் கோளாறு சீராகிறது. உடலை வலுப்படுத்துகிறது. தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்கிறது.

நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும். அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது. மூட்டுகளை இலகுவாக்குகிறது. எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் எடையை குறைக்க உதவும் வழிகளுள் நடைப்பயிற்சியும் ஒன்று. எனவே, ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய உதவுகிறது.

நடைபயிற்சி செய்யும் முறை

*தளர்வான உடைகள் அணிந்து இருத்தல் அவசியம்.

*சுற்று சூழல் பாதிப்பில்லாத, காற்றோட்டமுள்ள இடம், மக்கள் நெருக்கடி இல்லாத பாதையாக இருத்தல் மிகவும் நல்லது. பூங்கா, மைதானம், பள்ளி, கல்லூரி மைதானம், கடைத்தெருக்கள், இயற்கை சூழல் நிறைந்த இடங்களை தேர்வு செய்து கொள்வது நல்லது.

*நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு நடக்க வேண்டும்.

*கைகளை பக்கவாட்டில் ஆட்டாமல், முன்னும்-பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு நெஞ்சுபகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்ல வேண்டும். அதற்கேற்றவாறு கால்களும் பின் தொடர வேண்டும்.

நடைபயிற்சியின்போது செய்ய கூடாதவை

*செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டும் நடப்பதால் எந்தப் பயனும் இல்லை.

*நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே நடப்பதில் எந்தப் பயனும் இல்லை.

*பேசிக்கொண்டே நடப்பதும் நல்லதல்ல.

*வெறும் வயிற்றில் நடக்கக் கூடாது. நடக்க துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு நடக்க தொடங்க வேண்டும்.

தொகுப்பு: ரிஷி