Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப்பாத்திரம்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

மிகப் பெரிய மனநோய்களும், சவாலான உளச்சிக்கல்களும் தினசரி பல் தேய்ப்பது, குளிப்பது, உண்பது, உறங்குவது என சிறிய செயல்களில் தடுமாற்றம், தவற விடுவது என்பதிலிருந்தே துவங்குகின்றன. இந்த அன்றாட ஒழுங்குமுறை நேர மேலாண்மையோடு நேரடியாகத் தொடர்புடையது. “காலம் பொன் போன்றது”, “காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருக்காது” என்றெல்லாம் நேரத்தின் அருமையை பொன்மொழிகள் எடுத்துரைத்தாலும் நம்மால் ஒருபோதும் நேரத்தை முறையாக மேலாண்மை செய்ய முடிவதில்லை. எவ்வளவு நேரம் இருந்தாலும் போதவில்லை என்றே புலம்புகிறோம். சாதனை புரிந்தவர்களை அண்ணாந்து பார்த்து அவர்களுக்கு மட்டும் எப்படித்தான் இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ என்று ஏங்குகிறோம்.

எல்லோருக்கும் 24 மணி நேரம், 7 நாட்கள், மாதத்தில் 30 நாட்கள் என்றுதான் இருக்கிறது. அவர்கள் மட்டும் எப்படி பல காரியங்களைச் செய்கிறார்கள்? ஒரு சில அடிப்படை மாற்றங்களை அன்றாடம் மேற்கொள்ளத் துவங்கிவிட்டால் நேர மேலாண்மையை திறம்படக் கையாளலாம். கடினமான இலக்குகளையும் சரியான காலத்திட்டங்களோடு சுலபமாக அடையும் சூட்சுமத்தை விரிவாக பார்ப்போம்.

முதலில் அடைய வேண்டிய இலக்குகளைத் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும். அதன் பிறகு அவற்றை வரிசைப்படுத்தி அதி முக்கியம், முக்கியம், தாமதமாகச் செய்தால் பரவாயில்லை, செய்யாவிட்டாலும் ஒன்றுமில்லை என்று நற்பலன்களின் அடிப்படையில் பிரித்து வைக்க வேண்டும். அதன்படி ஒவ்வொன்றாகச் செய்தால் அனாவசியமானவற்றிற்குச் செலவிடும் நேரம் தானாகக் குறையும். கவனச் சிதறலும் தவிர்க்கப்படும். மனதார ஒன்றை Priority கொடுத்து, அதை நோக்கி உண்மையாக உழைத்தால் நிச்சயம் கிடைக்கும் என்பதை முழுமையாக நம்புவதே வெற்றியாளர்களின் மனோபலம்.

1950-60 - களில் பேரேடு, சுருக்கெழுத்து, தட்டச்சுப் பொறி என்பவை அலுவலக வேலைகளுக்கு உதவின என்று அறிவோம். அதுவே 1990-2000 என்று வந்தபோது fax, பேஜர், கணிப்பொறி என்று பயன்பாட்டிற்கு வந்தன இல்லையா. அப்போது காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்காத நிறுவனங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய் விட்டன. ஆக, அந்தந்த காலத்திற்கேற்ற தொழில் நுட்பப் பயன்பாடுகளை அறிந்து நம்மை அப்டேட்டாக வைத்துக்கொள்வதும் மிக அவசியம்.

இப்படியான எளிய அறிவுரைகளை எப்போது கேட்டாலும் இதெல்லாம் எங்களுக்குத் தெரியுமே என்று சொல்வதுதான் நேர மேலாண்மைக்கும், வெற்றிப் பாதைக்கும் முதல் எதிரி. மிகப் பெரிய சாதனையாளர்களை கூர்ந்து பாருங்கள். நேற்று வந்த இளைஞர்களிடம்கூட நெருங்கி புதிதாக ஏதேனும் கற்றுக்கொண்டே இருப்பார்கள். அது மூளைக்கு பயிற்சியாவதோடு, நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தவும் உதவும்.

இதை இப்படிச் செய்ய வேண்டும். அப்படி நடந்தால் இந்த வழியில் யோசிக்க வேண்டும்.. என்று வாக்கியங்களாக, பழமொழிகளாக எல்லோருக்கும் எல்லாமே தெரிந்தே இருக்கும். ஆனால் அந்த வார்த்தைகளின் சாரம், வாழ்க்கையில் இல்லாமல் போவதனால்தான் நாம் இப்படி இருக்கிறோம் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று பொறாமை உணர்வின்றி புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, நேரத்திற்கு சாப்பிட வேண்டும் இல்லாவிட்டால் உடம்பு கெட்டுவிடும் என்று சொன்னால் தெரியுமே என்போம்.

ஆனால் அதை கடைபிடிக்க மாட்டோம். எனவே, நாம் நம்புகின்ற நல்ல கொள்கைகளை வாழ்வில் கடைபிடிக்க துவங்குவது என்பதிலிருந்துதான் வெற்றிக்கான முதல் புள்ளி துவங்குகிறது. எண்ணங்களுக்கும், செயல்களுக்குமான இடைவெளியை மெல்ல மெல்லக் குறைப்பதே முன்னேறிச் செல்பவரின் அடையாளமாகும்.

சிலர் எப்போதும் கட்டுப்பாடில்லாமல் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் ஆற்றல் முழுவதும் அதிலே செலவாகி செயல் திறனில் குன்றி, தேங்கி விடுவதையும் பார்க்கிறோம். ஆனாலும், பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் சொல்வதுபோல் “இந்தியனாச்சே நல்லா பேசாம இருக்க முடியுமா” என்று மார்தட்டிக் கொள்வோம். நேர்மறையாக ஆக்கப்பூர்வமாக நிறைய பேசலாம். பயனற்ற காரசாரமான வீண் விவாதங்கள், யதார்த்த நகைச்சுவை என்ற பெயரில் யாரையாவது வம்புக்கு இழுத்து கேலி செய்வது போன்றவை தவிர்க்க வேண்டும். இவற்றால் நேர விரயம் ஆவதோடு மன நிலையும் அமைதியற்று குழப்பமடைகிறது.

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை அதிகமாக ஆராய்ச்சி செய்து இறங்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருப்பதும் நேரத்தைக் கடத்தும். பிறகு, அந்த வாய்ப்பு பறிபோன பிறகு, அப்படிச் செய்திருக்கலாமே, இதை இப்படிச் செய்திருக்கலாமே, நான் அன்றே அதைக் கேட்டிருக்க வேண்டும் என்று புலம்பும் நிலை தோல்வியாளர்களுக்கு அடிக்கடி நேரும். இதையே Oppourtunity cost என்று உளவியலும், பொருளாதாரமும் வலியுறுத்திச் சொல்கின்றன.

அதாவது ஒரு முடிவை நாம் தேர்ந்தெடுக்காமல் விட்டு, வேறொரு முடிவை எடுப்பதால் ஏற்படும் பண இழப்பு அல்லது பலனின் இழப்பு எனலாம். இவ்வாறு நிகழ்தகவின் (Probability ) அடிப்படையில் நம் செயல்களை இது தேவையா /தேவையில்லையா, இதனால் என்ன பலன்/ என்ன இழப்பு ஏற்படும் என்று யோசிக்கத் துவங்குவது சிறந்த நேர மேலாண்மைக்கும், வாழ்க்கை திட்டமிடலுக்கும் பேருதவியாக இருக்கும்.

அடுத்து, Time table, Scheduling போன்றவை கல்வி கற்கும் மாணவர்களுக்குதான் தேவை என்ற மனநிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் குடும்ப பட்ஜெட் போடுவது தொடங்கி பணம் சேமிப்பது, முதலீடு செய்வது என பெரியவர்களும் முறைமைகளை வகுத்துக் கொள்வது வாழ்வை நேர்த்தியாக்கி அழகான மாற்றங்களைக் கொண்டு வரும். அன்றாட செயல்களை முறையாக இந்த நேரத்திற்கு இது என்று வரையறுத்துக் கொள்ள Stress குறையும்.

உயர் இரத்த அழுத்தம் வராது, இதயம் சீராகத் துடிக்கும்.அப்படி உடல் நன்றாக இருந்தால்தானே எதையும் செய்ய முடியும் என்பதை அடிக்கடி சொல்லிக்கொள்ளும் சுயமுன்னேற்ற பேச்சு (self - positive talk) இன்று உலகெங்கும்’ Menefestation’ என்ற பெயரில் சொல்லப்படுகிறது. நம் தாத்தா பாட்டிகள் அன்றே “நல்லத பேசு” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டார்கள்.

இதில், அடுத்த நாளுக்கான துணியை எடுத்து வைத்துக் கொள்வது, உடல், தலை முடி பராமரிப்பு இவற்றிற்கு நேரம் ஒதுக்குவது, வெளி வேலைகள் போக மீதி நேரத்தில் குடும்பத்திற்கு Quality time ஒதுக்குவது என எல்லாமே முக்கியம்தான். கூடவே, சமையலுக்கு, உடல், மனப் பயிற்சிக்கு, உறக்கத்திற்கு என்று திட்டமிட்டு நேர வரையறைகளோடு செயல்பட ஆரம்பிப்பது வாழ்க்கையை புத்துணர்வோடு நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைக்கும்.

நேர மேலாண்மை, இலக்கு என்று சொல்லும்போதெல்லாம் வெறும் வார்த்தைகளாக அவை இருக்காமல் உண்மையாகவே கைகூட வேண்டும் எனில் எண்களாக அவற்றை பார்க்க துவங்கத் வேண்டும் என்பதே ரகசியம். இதனை மின்பொறியாளர் “நிக்கோலா டெல்ஸாவின் தியரி” என்று உளவியலில் சொல்வார்கள்.

செர்பிய- அமெரிக்கரான இவரின் கண்டுபிடிப்புகளும், கோட்பாடுகளும் உலகப் பிரசித்திப் பெற்றவை. அவர் 3-6-9 என்று மூன்றின் அடுக்கு எண்களுக்கு பிரபஞ்ச மின்காந்த அலைகளோடு இருக்கும் தொடர்புகளை ஆராய்ச்சி செய்தார்.மூன்று முறை தினமும் ஒன்றைச் சொல்லும்போது உருவாகும் சக்தியினை நிரூபித்தார்.இந்த முறையில் நாம் தீர்மானமற்ற நீண்ட எண்ணங்களை வார்த்தைக் குவியல்களாக வைக்காமல், அவற்றை எண்களாக்கி ஆழ் மனதில் பதியுமாறு தினமும் சொல்வோம்.

உதாரணத்திற்கு, இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்..இத்தனை நாட்களுக்குள் நான் இதனை செய்தாக வேண்டும். இப்படியே நம்முடைய ஒவ்வொரு சிறு இலக்குகளையும் எண்களாக மாற்றி வகுத்துக் கொண்டோம் என்றால் ஒரு குறிப்பிட்ட திட்டமிட்ட பயணமாக அது அமையும்.இலக்குகளை தெளிவாக நிர்ணயிக்கும்போது குறிப்பிட்ட செயலும், தீர்மானிக்கப்பட்ட பார்வையும் (Specific tasks, determined vision ) தோன்றும்.“நான் எப்படியாவது லட்சாதிபதியாக வேண்டும்”, “எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படி முன்னேற்றம் அடைய வேண்டும்” என்று அதீத உணர்வுத் தாக்கத்தின் (Over emotional ) பிடியில் இருந்து வார்த்தைகளாகக் கொட்டாமல் இனிமேல், எண்களாக மாற்றி அவற்றைப் பார்க்க பேச ஆரம்பிப்போம்.

“நான் 2 வருடங்களில் 10 இலட்சம் சம்பாதிக்க வேண்டும்”, 3 மாதங்களுக்குள் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டும் “இப்படி குறிப்பிட்டு இலக்குகளை திட்டமிடுவதன் சரியான குறி வைத்தலை ( Specific Targetting ) கைக்கொள்வோம்.எளிய வார்த்தைகளில் சொன்னால் பத்தாவது வகுப்பில் மொழிப்பாடத்தில், வரலாற்றில் நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டுமே போதாது இல்லையா ? கணக்கு, அறிவியல் ஆகியவற்றிலும் சராசரி மதிப்பெண்ணாவது எடுத்தாக வேண்டும் என்பது இதற்குத்தான்.

எனவே மீண்டும் தர்க்க ரீதியான கணக்கீடுகளையும், அறிவியல் உண்மைகளையும் ஒதுக்காமல் நண்பர்களாக்கிக் கொள்வதே இந்த வெற்றியின் தத்துவம். இதுவே, வலது மற்றும் இடது மூளையின் பயன்பாட்டு ஆற்றலையும் சமநிலைக்கு கொண்டு வந்து நம் முயற்சிகளை சுலபமாக்கும். “எதற்கும் ஒரு கணக்கு வேண்டும்”, “ ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்” என்று பெரியவர்கள் சொல்வதன் விரிவான பொருள் இப்போதுதான் நமக்குப் புரியும் இல்லையா ?