Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இது புன்னகைக்கும் விஷயம் இல்லைங்க...

நன்றி குங்குமம் டாக்டர்

டூத் பேஸ்ட்கள் உஷார்!

"ஒரு பேஸ்ட் விற்பதற்காக இந்த விளம்பர கம்பெனிக்காரங்க செய்யற அழிசாட்டியம் இருக்கே... ஐயய்யோ” என சந்தானம் ரேஞ்சுக்குப் புலம்பிக்கொண்டிருந்தார் பல் மருத்துவர்.

"என்ன சார் விஷயம்” என்றேன்."ஒரு பையன் ஒரு பெண்ணைப் பார்த்துப் புன்னகைக்கிறான். அவன் மூச்சுக் காற்றுபட்டதுமே அவள் காதலாகிறாளாம். இப்படி ஒரு பற்பசை விளம்பரம் மினி ஸ்கிரீனில் வருது. இதெல்லாம் ரொம்ப ஓவர்ப்பா” என்றார். “சார் அவங்க பேஸ்ட் மேல அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கைன்னு இதைச் சொல்லலாமே” இது நான்.

“அது அப்படி இல்லை பாஸ்! எதுலையும் உண்மைன்னு ஒரு விஷயம் இருக்கு இல்லியா? இப்ப விளம்பரத்துல வர்ற மாதிரி நீங்க ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கி பல் துலக்கக் கூடாது, தெரியுமா?” “ஐயய்யோ நான் அப்படித்தான் சார் தினமும் பல்லு வெளக்கிறேன்”. “ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ள பேஸ்ட்டை ஒரு பட்டாணி அளவு எடுத்து, பல் துலக்கினாலே போதும். அதுக்கு மேல சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும். எவ்வளவு பேஸ்ட் என்பதைவிட என்ன முறையில் பல் துலக்க வேண்டும் என்பதே முக்கியம்.”

“அப்ப ஃபுளோரைடு உடலுக்கு நல்லது இல்லையா சார்?”

“எதுவும் அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து. ஃபுளோரைடு கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். ஃபுளோரைடு இயற்கையாகவே கிடைக்கும் ஒரு தாது உப்பு. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. ‘ஃபுளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது’ என்று பல சோதனைகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறுவிளைவிக்கும். அது மட்டும் அல்லாமல் சிலசமயங்களில் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.” “இந்த ஃபுளோரைடு உபயோகம் குறித்து ஏதாவது அமைப்புகளோட வழிகாட்டுதல் இருக்கா சார்?”

“அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு’, எஃப்டிஏ (FDA), ஃபுளோரைடு கலந்த பற்பசைகளில் ஒரு அறிவுரையை அச்சிடச் சொல்லி இருக்கு. ‘இந்தப் பற்பசைகள் குழந்தைகள் கையில் எட்டாத உயரத்தில் வைக்கப்பட வேண்டும். இந்தப் பற்பசைகளை அவர்கள் அளவுக்கு அதிகமாக உண்டுவிட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று அச்சிட வேண்டும்’ என எஃப்டிஏ அறிவுறுத்தி இருக்கு.

“ஃபுளோரைடை அதிகமாகப் பயன்படுத்தினால் என்ன ஆகும்?”

“அதிக அளவு ஃபுளோரைடு உபயோகம் ஃபுளூரோசிஸ் என்ற பற்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. பற்கள், விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ஃபுளோரைடு உபயோகித்தால், பற்களில் வெள்ளைத்திட்டுக்கள் விழக்கூடும்.

“பற்பசையில் இருக்க வேண்டிய ஃபுளோரைடு அளவு என்ன?”

“பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000பிபிஎம் (ppm) அளவுக்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500பிபிஎம் அளவுக்கு மிகாமலும் ஃபுளோரைடு இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.”இன்னொரு அதிர்ச்சியான விஷயம் சொல்லவா? பூமியில் இயற்கையாகக் கிடைப்பது கால்சியம் ஃபுளோரைடு என்ற தாது உப்பு. ஆனால், பற்பசையில் சோடியம் ஃபுளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது.

இவை, தொழிற்சாலைகளில் விஷக்கழிவுகளாக வெளியேறுபவை. எலிப்பாஷாணத்திலும், பூச்சிமருந்திலும் உபயோகப்படுத்தப்படுபவை. இவைகளையே ஃபுளோரைடு தேவைக்காகப் பற்பசையில் சேர்க்கிறார்கள் என்று சில அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.”

“அச்சச்சோ! ஃபுளோரைடு இல்லாத டூத் பேஸ்ட் இருக்கா சார்?”

“தற்போது ஃபுளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில ஆயுர்வேதப் பற்பசைகளும், இயற்கை மூலிகைப் பற்பசைகளுமே ஃபுளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளன.”

“டூத் பேஸ்டில் ஃபுளோரைடு தவிர வேறு என்னென்ன உள்ளன?

“டூத் பேஸ்டில் ஃபுளோரைடைத் தவிர எண்ணற்ற வேதிப்பொருட்கள் உள்ளன. பற்களை பாலிஷ் செய்யவும், சுத்தப்படுத்துவதற்குமான சிறப்பு அப்ராசிவ்ஸ், நுரையை உருவாக்கும் டிடெர்ஜண்டுகள், பற்பசை கெடாமல் இருப்பதற்கான ப்ரசர்வேட்டிவ்கள், ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் ஹுயூமிக்டென்ட்கள், வண்ணம் கிடைக்க நிறமிகள், வாசனைக்கான பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் டி உட்பட நிறைய வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.”

“டூத் பேஸ்ட் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை என்னென்ன சார்?”

1.வண்ணங்கள் கொண்ட பேஸ்ட்டைவிட வெள்ளை நிறத்திலான பேஸ்ட்டுகளே சிறந்தவை.

2.ஃபுளோரைடு குறைந்த பேஸ்ட்டைத் தேர்வுசெய்யுங்கள்.

3.ஜெல் பேஸ்ட்டுகளைவிடவும் கிரீம் பேஸ்ட்டுகளே உகந்தவை.

4.அப்ரேசிவ்ஸ் அதிகமான பேஸ்ட்டுகளால் பற்சொத்தை ஏற்படக்கூடும். எனவே, அதைக் கவனித்து வாங்கவும்.

5.சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் அடங்கிய பேஸ்ட்டுகளைத் தவிருங்கள்.

தொகுப்பு: லயா