Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளை பாதிக்கும் பிரைமரி காம்ப்ளக்ஸ் கவனம் தேவை!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தையின் முதன்மை சிக்கல் என்பது காசநோயின் ஆரம்ப நிலை ஆகும். பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது தொற்றுகள் ஏற்படுகிறது.

கடந்த 2023ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டுமே 25.5 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அதில் 13 சதவீதம் குழந்தைகள் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் நிர்மலா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

காசநோய் என்றால் என்ன?

காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோரிஸ் (MYCOBACTERIUM TUBERCULOSIS) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனால், ஒரு சிலருக்கு உடலில் பல பாகங்களிலும்(கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்) பரவ வாய்ப்பு உள்ளது.பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோய் அல்லது முதன்மை சிக்கல் கோன்ஃபோகஸ் என்று அழைக்கப்படுகிறது.

கோன்ஃபோகஸ்

கோன்ஃபோகஸ் என்பது குழந்தைகளுக்கு பொதுவாக சப்ளூரல் பகுதியில் ஏற்படும் ஒரு முதன்மை புண் ஆகும். இது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு நுரையீரலில் உருவாகிறது.

அறிகுறிகள்

*முதன்மை சிக்கல் உள்ள குழந்தைகள் பொதுவாக சோர்வுடன் காணப்படுவார்கள்.

*உடல் சோர்வு

*காய்ச்சல்

*2 வாரத்திற்கு மேல் இருமல், சளி

*உடல் எடை குறைவு(5% எடைகுறைவு 3 மாதத்தில்)

காசநோய் எவ்வாறு பரவுகிறது?

பொதுவாக குழந்தைகளுக்கு காசநோய் உண்டாக காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு காசநோய் இருந்தாலும் எளிதாக பரவுகிறது.

பரவக்கூடிய காரணங்கள்

வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு ஏற்கனவே காசநோய் தொற்று இருக்கும் போது பரவ வாய்ப்புள்ளது. பொதுவாக அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றவர்களுக்கு இருக்கும் போது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

தடுப்பூசியால் காசநோயை முற்றிலும் ஒழிக்க முடியுமா?

பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிசிஜி(BCG) தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் 50% நுரையீரலில் ஏற்படும் காசநோய் வராமல் தடுக்கலாம். இந்த தடுப்பூசியால் காசநோய் முற்றிலும் தடுக்க முடியும் என சொல்ல முடியாது. ஆனால், மூளையில் பரவும் காசநோய், உடல் முழுக்க பரவும் காசநோய் ஆகியவற்றை பிசிஜி(BCG) தடுப்பூசியானது 80-90% தடுக்க முடியும். பிசிஜி(BCG) தடுப்பூசியானது நுரையீரல் காசநோயை 100% தடுக்காது. ஆனால், சரியான சிகிச்சை பெற்றால் காசநோயை கண்டறிந்து மருந்துகள் மூலம்

குணப்படுத்தலாம்.

கண்டறிவதற்கான வழிமுறைகள்

மார்பு எக்ஸ்-ரே(chest x-ray)

மார்பு எக்‌ஸ்-ரே மூலம் நுரையீரல் காசநோயை உறுதி செய்யலாம். சில நேரங்களில் புதிதாக வந்துள்ள நோய் பாதிப்பா, பழைய நோய் பாதிப்பின் தழும்பா என சந்தேகம் வரக்கூடும். அப்போது நோயை உறுதி செய்ய சளிப் பரிசோதனை உதவுகிறது.

சளி பரிசோதனை

குழந்தைகளுக்கு காலையில் எழுந்ததும் எடுக்கப்படும் முதல் சளியைப் பரிசோதிப்பதுதான் சரியான முடிவை தரும். இதனை RGJ(Resting gastric juice) என்ற முறையில் குழந்தையின் வாயில் tube மூலம் சளியை சேகரித்து அதனை CBNAAT என்ற பரிசோதனைக்கு அனுப்பி கண்டறியலாம்.

மேன்டோஸ் பரிசோதனை (Mantouse Test)

டியூபர்குலின் எனும் புரதத்தை 0.1 மி.லி அளவில் முன் கையில் ஊசி மூலம் செலுத்துவார்கள். சரியாக 48 அல்லது 78 மணி நேரம் கழித்து ஊசி போட்ட இடத்தில் வீக்கம் உள்ளதா என்று அறிந்து 10மி.மீ அளவுக்கு மேல் வீக்கம் காணப்பட்டால் உடலில் காசநோய் கிருமி தொற்று இருப்பதை உறுதி செய்யலாம்.

சிகிச்சை

பொதுவாக குழந்தைகளுக்கு காசநோய் முதன்மை சிக்கல் ஏற்பட்டால் கட்டாயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இச்சிகிச்சையானது 6 மாதங்களுக்கு தொடர்ந்து மாத்திரைகள் கட்டாயம் எடுக்க வேண்டும். இதனை இரண்டு பிரிவுகளாக பிரித்து போடப்படுகிறது.

முதல் இரண்டு மாதங்களுக்கு...

2HRZE H - ISONIAZID

R - RIFAMPCIN

Z-PYPAZINAMIDE

E- ETHAMBUTOL

அடுத்த நான்கு மாதங்களுக்கு...

4HRE H - ISONIAZID

R - RIFAMPCIN

E - ETHAMBUTOL

என்ற மருந்துகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். காசநோய் தொற்று வந்த பிறகு குழந்தைகளின் எடைக்குத் தகுந்தாற்போல் ATT மருந்துகள் NTEP மூலம் 6 மாதம் வழங்கப்படுகிறது. 39 கிலோவுக்கு குறைவாக எடை(weight band) உள்ள 18 வயது வரை உள்ளவர்களுக்கு ATT (Anti tuberculosis therapy) மருந்துகள் அளிக்கப்படுகிறது. 39 கிலோவுக்கு அதிகமாக எடை உள்ளவர்களுக்கு தகுந்தாற்போல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

TB Preventive Therapy

வீட்டில் உள்ளவர்கள் மூலம் குழதைகளுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ள போது 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 2 வாரத்திற்கு ஒரு 3 மாதங்களுக்கு ரிஃபாபென்டைன்(RIFAPENTINE) என்ற மருந்துகள் கட்டாயமாக எடுத்துக் கொண்டால் காசநோய் வராமல் தடுக்கலாம். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தினசரி ஐசோனியாசிட்(ISONIAZID) மருந்து எடுத்துக்கொண்டால் காசநோய் வராமல் தடுக்கலாம்.

தடுப்பு முறைகள்

சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் காசநோய் தொற்றை குணப்படுத்தலாம். சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கட்டாயம் கொடுக்க வேண்டும். தாய்க்கு TB இருந்தால் ETT மருந்து எடுத்துக்கொள்ளும் போது நேரடியாக குழந்தைக்கு தாய்ப்பால் தராமல் Expressed Breast Milk என்ற முறையில் தாய்ப்பால் தரலாம். பிறந்த குழந்தைக்கு கட்டாயம் BCG தடுப்பூசி போடவேண்டும்.

TB ஆல் பாதிக்கப்பட்டவர்கள் புரதசத்து நிறைந்த உணவுபொருட்கள், பருப்பு வகைகள், தானிய வகைகள், முட்டை, கொண்டை கடலை போன்ற உணவுகள் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: சுரேந்திரன்