Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மசாலாக்களின் மறுபக்கம்...

நன்றி குங்குமம் டாக்டர்

ஜாதிக்காய்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், மலேசியாவின் பினாங் பகுதியிலும் அதிகம் பயிரிடப்படுகிறது ஜாதிக்காய். ஜாதிக்காய், கனிந்த பிறகு, அதன் சதைப்பகுதி ஊறுகாய் செய்வதற்கும், தோலானது ஜாதிபத்திரி என்ற பெயரில் மசாலாப் பொருளாகவும், விதைப்பகுதி ஜாதிக்காய் என்னும் உணவு மற்றும் மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது. மிரிஸ்டிகா பிராக்ரன்ஸ் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் ஜாதிக்காய், காரத்தன்மையும் இனிப்பு சுவையும் கலந்து இருப்பதால், உணவில் தனிப்பட்டதொரு சுவையைக் கொடுக்கிறது. இதன் காரணமாக, மசாலா உணவு மட்டுமல்லாமல், ரொட்டிகள், இனிப்பு உணவுகள், சாஸ் வகைகள், புட்டிங் உணவுகள் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது.

ஜாதிக்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், மருந்து மற்றும் வாசனை திரவியம் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெயின் பிரதானப் பொருளாக பினைன் மற்றும் மைரிஸ்டிஸின் இருக்கின்றன. இவற்றுள், மைரிஸ்டிஸின், ஜாதிக்காயால் ஏற்படும் ஒவ்வாமை அல்லது நச்சுத் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. ஜாதிக்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மற்றொரு பொருள் ஜாதிக்காய் வெண்ணெய். இதில் கொழுப்பு அமிலமும் இருப்பதால், கோகோ வெண்ணெய்க்குப் பதிலாக உணவுகளிலும், பருத்தி எண்ணெய் அல்லது பாமாயிலாக பிற தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் ஜாதிக்காய், பல் வலிக்கும் சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது. ஜாதிக்காயை அரிசி சோற்றுடன் வேகவைத்து, உலர்த்திப் பின்பு இழைத்துப் பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு கட்டுப்படும் என்பதால், இன்றளவும் முதியோர்களால் வயிற்றுப்போக்கிற்குப் பிரதான மருந்துப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பேதியால் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு, அதனால் ஏற்படும் நா வறட்சி, அதிக தாகம் போன்றவற்றையும் தணிக்க வல்லது. சரியான உடல் எடை இல்லாத இரண்டு, மூன்று மாதங்கள் ஆன குழந்தைக்கு, ஜாதிக்காயை இழைத்துப் பாலுடன் அல்லது நீருடன் சேர்த்துக்கொடுத்து வந்தால், குழந்தையின் உடல் எடை கூடும் என்பதும் இன்றளவும் கிராமங்களில் இருக்கும் பழக்கம்.

ஜாதிக்காய் தினமும் 1 முதல் 2 கிராம் வரையில் சாப்பிடலாம் என்று ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. ஒருவேளை, ஜாதிக்காயாக மூன்றும், ஜாதிக்காய் பொடியாக 5 கிராமுக்கு அதிகமாகவும் சாப்பிடும் நிலையில், மனக்குழப்பம், வாந்தி, வயிற்று உப்புசம், செரிமானமின்மை அல்லது தொடர் வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படலாம்.

ஜாதிக்காயில், சிறிதளவு போதைத் தன்மையும் இருப்பதால், மூன்று விதைகளுக்கு மேல் சாப்பிடும் நிலையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில், இரண்டு ஜாதிக்காய் முழுவதுமாக சாப்பிட்ட 8 வயது குழந்தையின் இறப்பு ஆய்வு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், அதிகளவு எடுத்துக்கொண்ட ஜாதிக்காய், ரத்தத்தில் விஷத்தன்மையை உயர்த்தியதால், 55 வயது முதியவரும் மரணமடைந்த ஆய்வு முடிவு, வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமானால் ஏற்படும் ஆபத்தை நன்கு உணர்த்துகிறது.

கடுக்காய்

இந்தியாவின் இமயமலைத் தொடர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் வனப்பகுதிகளில் அதிகம் காணப்படும் கடுக்காய் மரம் காம்பிரிடேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. ஆங்கிலத்தில் டெர்மினாலியா செபுலா என்றழைக்கப்படும் கடுக்காய் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. கடுக்காயை மூன்று வகையாகப்

பிரிக்கிறார்கள்.

மலத்தை இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும் பிஞ்சுக் கடுக்காய், காசநோயால் ஏற்பட்ட உடல் நலிவைப் போக்கும் செங்கடுக்காய் மற்றும் ஆண்களுக்கு தாதுபலத்தைக் கூட்டும் வரிக்கடுக்காய். கடுக்காயில் கேலிக் அமிலம், எலாஜிக் அமிலம், ஈத்தைல் காலேட், செபுலிக் அமிலம் உள்ளிட்ட பைட்டோ கெமிக்கல்ஸ் என்னும் நுண்வேதிப்பொருட்கள் இருந்தாலும், 32 சதவிகிதம் டானிக் அமிலமே பிரதானமாக இருக்கிறது. இதன்காரணமாக, உணவான மட்டுமல்லாமல், தோல் பதனிடுதல், எண்ணெய் சுத்திகரிப்பு, சாயத் தொழிற்சாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. கடுக்காய் மரத்தின் பூக்களில் அதிகம் தேன் இருப்பதால், தேனீக்கள் அதிகம் கூடுகட்டி, தேன் எடுக்கும் மரமாகவும் பயன்படுகிறது.

சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில், பல முக்கியமான மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படும் கடுக்காய், வயதானவர்களின் கை மருத்துவத்திலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், தோல் ஏற்படும் புண், அழற்சி, வீக்கம் போன்றவற்றைப் போக்குவதற்கு கடுக்காய் இழைத்துப் பூசுவதும் வழக்கம்.சாப்பிடும் கடுக்காயின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் அல்லது சாப்பிடும் நாட்கள் நீடித்தாலும் தொடர் வயிற்றுப்போக்கு.

வாந்தி ஏற்படுத்தும் என்பதால், நீண்டகால நோயால் உடல் மெலிந்து நலிவுற்றவர்கள் கடுக்காய் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். கடுக்காய் பொடியின் அளவு 400 மி.கிராம் முதல் 600 மி.கிராம் வரையில் சாப்பிடலாம். எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், இந்த அளவுக்கும் அதிகமாக சாப்பிட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் சோடியம், பொட்டாசியம் எனப்படும் உடலுக்கு அத்தியாவசியமான தாதுஉப்புகளின் சமநிலையைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

மேலும், கர்ப்பிணிப்பெண்கள், வயிறு தொடர்பான பெருநோய்கள் இருப்பவர்களும், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகுதான் கடுக்காய் சாப்பிடவேண்டும். மன நலம் பாதிக்கப்பட்டு மருத்துவம் பின்பற்றுபவர்கள், அதிக பித்தம் இருக்கும் உடல் தன்மை உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது.