Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூக்களின் மருத்துவக் குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மலர்கள் தவிர்த்து வேறு சில அரிய மலர்களின் மருத்துவக் குணங்களையும் தெரிந்துகொள்வோம்.

புங்கைப்பூ

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு புங்கைப்பூக்கள் நன்மருந்தாகும். ஒரு கைப்பிடியளவு புங்கைப்பூக்களை எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்து பொடிசெய்து தூளாக்கி வைத்து கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தண்ணீரோடும் இந்த பொடியை உட்கொள்ளலாம். 48 நாட்கள் தொடர்ந்து அருந்தி வர நீரிழிவு நோய் கட்டுப்படும். மேகநோய் உள்ளவர்கள் புங்கைப்பூப் பொடியை குடித்து வந்தால் 20 வகையான மேகநோய்களும் நீங்கும்.

சிற்றகத்திப் பூக்கள்

சிற்றகத்தி என்பது அகத்தியில் ஒருவகைப்பூ. இதனை செம்பை என்றும் அழைப்பார்கள். கறுப்பு நிறத்தில் பூ பூப்பதை கருஞ்செம்பை என்றும், மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் செம்பை என்றும் வழங்குவர். சிற்றகத்திப்பூக்களை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து தலை குளித்து வர தலைப்பாரம், மூக்கில் நீர் பாய்தல் முதலியன குணமாகும். தலைக்கு சாதாரணமாக தேய்த்து வந்தாலும் தலைப்பாரம் நீங்கும்.

பனம்பூ

ஆண்பனைப் பாளையை உற்பத்தி செய்கிறது. பாளை மீது பூக்கள் ஒட்டியிருக்கும். அதைத்தான் பனம் பூ என்கிறோம். பல்வலி இருக்கும்போது இளம் பாளையில் உள்ள பனம்பூவை எடுத்துப் பிழிந்து 300 மி.லி சாறு எடுத்து அத்துடன் 100 மி.லி எலுமிச்சைச் சாறும், 2 கிராம் உப்பும் சேர்த்து வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.

மகிழம்பூ

மகிழம்பூவைச் சுத்தம் செய்து முகர்ந்தால் சுவையின்மை நீங்கும். 50 கிராம் மகிழம்பூ எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் உடலுக்கு வலிமை ஏற்படும். பித்தத்தை தணிக்கும். மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து முகர்ந்தால் மூக்கில் நீர் பாய்ந்து தலைவலியைப் போக்கும். கணைச்சூடு இருப்பவர்கள், மகிழம்பூவை ஊற வைத்து அதன் நீரைப் பருகினால் கணைச்சூடு நீங்கும். இரைப்பு நீங்க மகிழம் பூவின் சாறு பருகவேண்டும். மகிழம்பூவை அரைத்துச் சாறு எடுத்து அரை டம்ளர் அளவு சாப்பிட மலக்கட்டு நீங்கும்.

சம்பங்கிப் பூக்கள்

சம்பங்கிப்பூக்கள் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து அதிலிருந்து பூக்களை எடுத்து விடவேண்டும். அந்த நீரை காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட அஜீரணம், செரிமானக் கோளாறு போன்றவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

எலுமிச்சைப் பூக்கள்

எலுமிச்சைப் பூக்களை மைபோல அரைத்து தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பருகிவர பல் ஈறு நோய், பல்வலி குணமடையும்.

தொகுப்பு: தவநிதி