Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆமணக்கு எண்ணெயின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆமணக்கு செடியில் இருந்து பெறப்படும் விதையில் இருந்து தயாரிக்கப்படுவதே ஆமணக்கெண்ணெய். இது விளக்கெண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆமணக்கு விதை இரண்டு விதமாகக் கிடைக்கிறது. அதற்கு சிற்றாமணக்கு என்றும் பேராமணக்கு என்றும் பெயர். இந்த எண்ணெய் குழந்தைகளின் உள் உபயோகத்திற்கும் கொடுக்கப்படுகிறது. நல்ல ருசியும் மணமும் உள்ள இந்த எண்ணெய் வெருட்டும், ஒக்காளிக்கும் என்ற குறைகள் எதுவுமில்லாதது. இந்த எண்ணெய் விதைகளை வேகவைத்து எடுப்பதால், நோய்களை உருவாக்கும் அழுக்கு ஜீவாணுக்கள் அணுக வாய்ப்பேயில்லாததால், மிகவும் சுத்தமானது. பழைய காலத்தில் நம்நாட்டில் வீடுகளில் விளக்கெண்ணெயை உள் உபயோகத்திற்காகப் பயன்படுத்தினர்.

விதையைப் பச்சையாகவே அதாவது வேக வைக்காமலேயே இயந்திரத்தினால் அரைத்து அழுத்திப்பிழிந்து எடுத்ததை விளக்கு எரிப்பதற்காகப் பயன்படுத்தியதால், ஆமணக்கெண்ணெய்க்கு விளக்கெண்ணெய் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் கண்மை கண்களுக்கு எந்தக் கெடுதலையும் செய்யாது. குளிர்ச்சியைத் தரும் என்பது பிரசித்தமானது. இந்நாளில் விதையை வேக வைத்து எடுக்கும் வழக்கம் இல்லாமல் குறைந்துவிட்டது.

இந்த இரு எண்ணெய்களுக்கும் குணத்தில் விசேஷமான மாறுதல்கள் எதுவுமில்லை. வேக வைத்து எடுக்கும் எண்ணெயில் இனிப்புச் சுவை தெளிவாகவும், கசப்பு, துவர்ப்புச் சுவைகள் சிறிய அளவிலும் தெரியும். செரிமான இறுதியில் இனிப்பும் காரமுமாய் மாறும். வழுவழுப்பு நிறைந்துள்ளதால் நெகிழும் தன்மையினால் குடலிலும், உட்புற உறுப்புகள் மற்றும் தாதுக்களில் விரைவாக ஊடுருவிச் சென்று மலங்களை வெளிப்படுத்தும்.

பெருங்குடல் மலத்தை வெளிப்படுத்தும் விசேஷகுணம் கொண்டது இது. செரிப்பதில் கடினமானாலும் அதன் சூடான வீர்யம் மற்றும் ஊடுருவும் தன்மையினால் பசித்தீயை நன்றாகத் தூண்டிவிடும். வெளிப்பூச்சினால் தோல் வறட்சியையும், உள்ளங்கால் வெடிப்பையும் போக்குவதில் மிகவும் உபயோகமானது. உள் உபயோகத்தினாலும் பஸ்தி எனும் ஆசன வாய் வழியாக உட்செலுத்தும் எனிமா சிகிச்சையாலும் ஆமணக்கெண்ணெய் ஒன்று மட்டுமே நாள்பட்ட மார்பு வலி, நெஞ்சு வலி, இடுப்பு வலி, குடல் வலி, மூட்டுவலி போன்ற கடுமையான உபாதைகளைப் போக்கிவிடும்.

இரவு படுக்கும் முன் உள்ளங்காலில் ஆமணக்கெண்ணெயைத் தேய்த்துப் படுத்துக் கொண்டால் காலையில் எழுந்ததும் கண்கள் குளிர்ச்சியாக இருப்பதை நன்கு உணரலாம். கண்ணுக்குள் இருதுளிகள் விட்டுக் கொண்டாலும், கண் இமை மேல் தடவிக் கொண்டாலும், விழிகளின் அழுக்குகள் அகன்று தெளிவு ஏற்படும். புகை, தூசிகள், கரிகள் நிறைந்துள்ள தொழிற்சாலைகளில் இருப்பவர்கள் கண்ணுக்கு ஆமணக்கெண்ணெயைத் தடவிக்கொள்வது மிகவும் அவசியமாகும்.