Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேங்காயின் மகத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தேங்காயில் புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் அடங்கி உள்ளன. மேலும், தேங்காய் சருமம் மற்றும் கூந்தலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.

தேங்காயின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்

தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப்பால் நஞ்சுமுறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப்பால் சிறந்த நஞ்சு முறிவு.தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) தேங்காய்ப்பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்

தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெயின் பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப்பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப்பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு (Metabolism)பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

தொகுப்பு: ரிஷி