Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேஜு அஸ்வினி ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

டிஜிட்டல் மீடியா உலகம் கண்டுபிடித்த இளம் நடிகைகளில் தேஜு அஸ்வினியும் ஒருவர். யூ டியூப் தளத்தில் வெளியான கல்யாண சமையல் சாதம் என்ற வெப் தொடரில் அறிமுகமான இவர், தொடர்ந்து இதயத்தில் எதோ ஒன்று உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். மற்றொரு புறம் சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ, மாடலிங், பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் சேல்ஸ் பிரிவில் வேலை என இயங்கிக் கொண்டிருந்தவரை திரைத்துறை கடத்திக் கொண்டு வந்திருக்கிறது. இவரது முதல்படம் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல்.

அதில் சிறிய ரோலில் வந்தவர் அடுத்து என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கினார். அடுத்தடுத்து மூன்றாம் கண், பிளாக்மெயில், தெலுங்கில் ஒரு படம் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பெயருக்கேற்றாற்போல் ஜொலிக்கும் தேஜு அஸ்வினியின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்: நான் தொடர்ச்சியாக சூட்டிங், டான்ஸ் என்று இருப்பதால் ஜிம் போய் உடற்பயிற்சிகள் எல்லாம் செய்வதற்கு நேரம் இல்லை. அதேசமயம் எனது டிராவல் கிட்டில் ரெசிஸ்டன்ட் பேண்ட் வைத்திருப்பேன். அதை வைத்து தினமும் நார்மலா ஸ்குவஸ், பிளாங்க் என சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்து கொள்வேன் அவ்வளவுதான். இதை தவிர தினசரி டான்ஸ் பயிற்சி செய்கிறேன். அதுவே எனக்கு போதுமான உடற்பயிற்சியாக உள்ளது. மேலும், எனது உடல் அமைப்புப்படி நான் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடுவதில்லை. அதனால், எனக்கு பெரிய உடற்பயிற்சிகள் தேவைப்படுவதில்லை. எனவே, உடலை வருத்தி நான் எந்த உடற்பயிற்சிகளையும் மேற் கொள்வதில்லை.

டயட்: நான் பெரிய டயட் எல்லாம் கடைபிடிப்பது கிடையாது. சீஸ், பட்டர், நெய் என எல்லாவற்றையும் விரும்பி சாப்பிடுவேன். அதற்காக நான் ஒரு ஃபுட்டி என்று நினைத்துவிட வேண்டாம். அளவுக்கு அதிகமாகவும் எதையும் சாப்பிட மாட்டேன். காலை எழுந்தவுடன் ஊற வைத்த சியா விதைகள் அதனுடன் ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துக்கள், தேங்காய் தண்ணீர் கலந்த பானம் ஒன்றை தினசரி எடுத்துக் கொள்வேன். இந்த பானம் என்னை நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்கவும், என் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதுபோன்று எனது தினசரி உணவில் பழங்கள், விதைகள் கண்டிப்பாக இருக்கும்.

மேலும், எங்கள் வீட்டில் மீன் உணவுகள் வாரத்தில் நான்கு நாட்களாவது செய்வார்கள். அதுவும் என்னை ஆரோக்கியமாக ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது. அதுபோன்று எனது தினசரி உணவில் தயிரும் எலுமிச்சையும் கண்டிப்பாக இருக்கும். உணவை பொருத்தவரை, ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும், என்ன சாப்பிட்டாலும் அந்த உணவை பொறுமையாக நன்றாக மென்று சாப்பிடும்போது அது சீக்கிரமாக செரிமானம் ஆகிவிடும்.

இதனால் உடல் எடை கூடவே கூடாது. நான் இப்படி நன்றாக மென்று சாப்பிடுவதால் எனது சாப்பிடும் நேரம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் மற்றவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள் அவ்வளவு பொறுமையாக சாப்பிடுவேன். ஆனால், அதுவே எனது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பியூட்டி: என்னுடைய சரும பராமரிப்பு முழுவதும் முழுக்க முழுக்க ஸ்கின் கிளினிக் போய்தான் பராமாிக்கிறேன். ஏனென்றால், என்னதான் நாம் இயற்கை வழியில் சரும பாதுகாப்பு செய்தாலும், சூட்டிங்கின் போது அவுட் டோர், மழை வெயில் பார்க்காமல் வேலை செய்வதால், சருமத்தை பாதுகாப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் 10 நிமிடம் வெயிலில் இருந்தால் கூட, நாம் 8 வாரம் சேமித்து வைத்த சரும நிறம் போய்விடும். அதனால், கிளினிக் போய் ஒரு வழிகாட்டுதலுடன் சருமத்தை பாதுகாப்பது எனக்கு சுலபமாக இருக்கிறது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்