Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டீன் ஏஜ் பருவப் பராமரிப்பு

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி

குழல் இனிது யாழ் இனிது

டீன் ஏஜ் பருவத்தினருக்கான அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்கள் அறிந்து கொள்வோம்.டீன் ஏஜ் பருவத்தினர் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்தவும், நிறைவான மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டிய வாழ்க்கைத் திறன்களைப் பற்றி பார்ப்போம்.

தகவல் தொடர்பு திறன் (communication Skill)

டீன் ஏஜ் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், தன்னைச்சுற்றி இணக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், அவர்களுடைய தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

நேர நிர்வாக திறன் (Time management Skill)

நேரத்தை திறம்பட நிர்வகிக்க எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும் ( prioritiship) என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றில் கவனச்சிதறல்களை தவிர்த்து தங்கள் இலக்குகளை அடைய தங்களுடைய நேரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill)

டீன்ஏஜ் குழந்தைகள் தங்கள் வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் அதற்கான ஆழ்ந்த அறிவு, பெற்றோரிடம் ஆலோசனை பெறுவது, நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது, முடிவுகளின் நன்மை, தீமைகளை பட்டியலிடுவது போன்றவற்றை பின்பற்றி சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.

சுய விழிப்புணர்வு (Self Awarness)

சுய விழிப்புணர்வு என்பது ஒருவர் தன்னுடைய சொந்த உணர்ச்சிகள், எண்ணங்கள், மதிப்புகள், பலங்கள் மற்றும் பலவீனங்களை புரிந்து கொண்டு செயல்படுவது ஆகும்.டீன்ஏஜ் பருவத்தினருக்கு சுயவிழிப்புணர்வு வாழ்க்கையின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் விரும்பும் திசையில் அதை வழி நடத்தவும் உதவும்.

தன்னம்பிக்கை (Selfconfidence)

டீன் ஏஜ் பருவத்தினரிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும்போது அவர்கள் நேர்மறை சிந்தனையுடனும், ஈடுபாடு மற்றும் விடாமுயற்சியுடனும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.மேலும் தன்னம்பிக்கை அதிகம் உள்ள டீன் ஏஜ் வயதினர் தன்னுடைய நண்பர்களின் தவறான செல்வாக்கிற்கு இணங்காமல் தங்கள் எண்ணப்படி நேர்வழியில் நடந்து கொள்வர். நல்ல புதிய விஷயங்களை முயற்சிக்கவும், கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கவும் ஒரு செயல் சரியாக நடக்காவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்கும் தன்மையும் தன்னம்பிக்கை உள்ள டீன் ஏஜ் வயதினரிடம் இருக்கும்.இதனால் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் குழந்தைகளுக்கு பெற்றோர் முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

இலக்கு நிர்ணயித்தல் (Goal setting)

டீன் ஏஜ் வயதினர் தாங்கள் எதிர்காலத்தில் அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும். இது அவர்களின் ஆற்றலை அதிகரித்து குறிக்கோள்களை அடைய உதவுகிறது. கவனச்சிதறலால் நேரம் வீணாவதைத் தடுக்கிறது.

அவர்கள் தங்கள் இலக்குகளை நிர்ணயிக்க பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் அவசியம் ஆகிறது. பெற்றோரின் பாராட்டும், ஊக்கமும் அவர்களுக்கு இலக்கை அடைய ஏற்படும் தடைகளை தாண்டி சாதிக்க உதவுகிறது. இந்த சாதனை உணர்வு வாழ்வில் மற்ற செயல்பாடுகளிலும், தோல்வியிலும் தன்னம்பிக்கை தளராமல், செயல்பட்டு முன்னேற வழிவகுக்கிறது.

வாழ்க்கைத் திறன் பயிற்சியின் நன்மைகள்

சுயவிழிப்புணர்வு அவர்களுக்கு உணர்வு கட்டுப்பாட்டை கற்றுக் கொடுக்கிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

உணர்ச்சி ஒழுங்குமுறையை கற்றுக் கொள்வதன் மூலம் மோதல்கள் தடுக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உறவுகளை மற்றவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ள வழிவகுக்கிறது.அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்க கல்வி, வேலை, உறவுகளை பற்றிய முடிவுகளை நன்றாக ஆராய்ந்து குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் உத்திகளை அவர்களுக்கு வழங்குகிறது.

தகவல் தொடர்பு திறன் அவர்களின் தனிப்பட்ட உறவுகளுக்கும், எதிர்கால பணியிட சூழல்களுக்கும் மிகவும் இன்றியமையாதவை.

அவர்களின் சொந்த வாழ்விலும், அவர்களுடைய துறையிலும் வெற்றி பெற உதவுகிறது.

தங்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களையும் கண்டு துவளாமல், சரியாக நிர்வகித்து ஆக்கப்பூர்வமான தீர்வுகளை ஆராய்ந்து செயல்படுத்தவும் வாழ்க்கைத்திறன் பயிற்சி உதவுகிறது.

டீன் ஏஜ் குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்கி அவர்களை அன்பு, அமைதி, நேர்மை, நல்லொழுக்கம், கடமை உணர்ச்சி என்ற நேர்கோட்டில் பயணிக்க செய்வது பெரியவர்களின் கடமையாகும்.