Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டீன் ஏஜ் பருவ பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி

டீன் ஏஜ் பருவம் என்பது 13 முதல் 19 வயது வரையிலான காலகட்டமாகும். இது மனித வளர்ச்சியின் ஒரு தனித்துவமான காலகட்டமாகும். நல்ல ஆரோக்கியத்திற்கான அடித்தளங்களை அமைப்பதற்கான ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

இந்த வயதில் டீன் ஏஜ் பருவத்தினர் உணவு, உடல் செயல்பாடு போதைப் பொருள் பயன்பாடு ஆகியவற்றில் தங்களுடைய வாழ்க்கை முறையை செயல்படுத்த தொடங்குகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க சரியான வழிகாட்டுதல் அவசியமாகிறது.டீன் ஏஜ் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பற்றிய அம்சங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உணவு முறை

வேகமான உடல் வளர்ச்சி மற்றும் உடல் மாற்றங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம் இந்த டீன் ஏஜ் காலகட்டமாகும். எனவே, இந்தப் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கான சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகும். டீன் ஏஜ் வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு 2400 கலோரியும் பெண் பிள்ளைகளுக்கு 2100 கலோரியும் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. டீன் ஏஜ் பிள்ளைகள் மாவுச்சத்து, புரதச்சத்து, பழங்கள், கீரைகள், காய்கறிகள், மீன், நட்ஸ் வகைகள் ஆகிய பலவகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து மற்றும் பல நுண் ஊட்டச்சத்துகள் சரியான அளவு கிடைக்கும்படி உணவு எடுத்துக் கொள்வது அவசியமாகும்.காலை உணவை தவிர்ப்பது, துரித உணவுகளை உண்பது, குளிர்பானங்கள், நூடுல்ஸ், ஐஸ்கிரீம், சிப்ஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகள் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

டீன் ஏஜ் குழந்தைகள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள், அதன் தரம், அதன் ஊட்டச்சத்து விவரங்கள், அவற்றின் நன்மை, தீமைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வழிவகுக்க வேண்டும்.சரியான உடல் எடை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்த வேண்டும்.

சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்கள், நண்பர்கள் உடன் சேர்ந்து கடைகளில் உணவருந்துவது போன்றவை அவர்களின் துரித உணவு உட்கொள்ளும் பழக்கத்தை அதிகப்படுத்துகிறது.

சரியான உணவுப் பழக்க வழக்கம் அவர்களை சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்.

மேலும், அடுத்தடுத்த தலைமுறையினரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள முன்மாதிரியாக அவர்கள் விளங்க உதவும். டீன் ஏஜ் குழந்தைகளின் உடல் எடை, உயரம், பிஎம் ஐ ஆகியவற்றை 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். டீன் ஏஜ் வயதில் உடல் பருமனாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர்களுக்கு தினசரி உயற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும்.

நீண்ட நேரம் போன் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றை தவிர்த்து, எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும்.சமூகத்தில் அவர்களுக்கு விளையாடக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

உடல் வளர்ச்சி

டீன் ஏஜ் குழந்தைகள் தங்கள் உடல் வளர்ச்சி மற்றும் உடல் மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.டீன் ஏஜ் பருவத்தினர் தங்களின் உடல் செயல்பாடுகள், திருமண வயது, டீன் ஏஜ் வயதில் ஏற்படும் உறவுகளால் வரும் பின்விளைவுகள், கல்வியில் கவனம் செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்து கொள்ள வழிகாட்ட வேண்டும்.

அவர்கள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து நட்பு கொள்ளவும், போதை புகைப்பழக்கம் ஆகியவற்றின் தீமைகளை அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

சுயதிறன் மேம்பாடுடீன்ஏஜ் பருவம் என்பது மிகவும் சிக்கலான கால கட்டமாகும். அவர்கள் தங்களை சுற்றியுள்ள சூழலையும், சூழ்நிலைகளையும் சிறப்பாக எதிர்கொள்ள அவர்களுடைய சுய-திறனை மேம்படச் செய்வது மிகவும் அவசியமாகும்.

தங்களின் திறன்களைப் பற்றி நம்பிக்கை உள்ள டீன்ஏஜ் பருவத்தினர் தாங்கள் ஈடுபடும் செயல்களில் அதிக உற்சாகத்தையும் விடாமுயற்சியையும் காட்டுகிறார்கள்.இது அவர்களை கல்வியிலும்,விளையாட்டிலும் மற்றும் அவர்கள் சார்ந்த எந்தவொரு துறையிலும் சாதிக்க உதவுகிறது.பெற்றோர் தங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுக்கு சுய திறனை வளர்த்துக் கொள்ள முன்மாதிரியாக விளங்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் திறன்களை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

அவர்களை தோல்விகளை கண்டு பின்வாங்காமல் அதை சவாலாக எண்ணி எதிர்கொள்ள உதவ வேண்டும். அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதுணையாக செயல்பட வேண்டும். கோபம், கவலை போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தி நேர்மறையாக சிந்திக்க வழிகாட்ட வேண்டும். இவை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக செயல்பட உதவும்.சுயதிறன் மேம்படச் செய்வதால் அவர்கள் தீயபழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

தூக்கம்

டீன் ஏஜ் குழந்தைகளுக்கு ஒரு நாளில் 9 மணி நேரம் தூக்கம் அவசியம் இரவில் நீண்ட நேரம் விழிப்பது, இரவு நேரத்தில் அலைபேசி பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து இரவு முன்னதாக தூங்கி அதிகாலையில் எழும் வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். தூங்கும் நேரத்தை சரியாக நிர்ணயித்து அதைப் பின்பற்றும்போது விளையாட்டு, படிப்பதற்கான நேரத்தை திட்டமிடுவது சுலபமாக இருக்கும்.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

டீன் ஏஜ் குழந்தைகள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.உடற்பயிற்சி உடலின் செயல்பாடு, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான தசை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சி நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியின் போது எண்டார்பின்கள் சுரப்பதால் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

உடற்பயிற்சி டீன்ஏஜ் குழந்தைகள் படுத்தவுடன் தூங்கவும், அவர்களின் தூக்கத்தை ஆழப்படுத்தவும் உதவுவதன் மூலம் சிறந்த தூக்கத்திற்கு பங்களிக்கிறது. இதனால் மனநிலை மேம்படுதல், உயர்ந்த கல்வித் திறன் மற்றும் செயல் திறனுக்கு வழிவகுக்கும்.வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே உடற்பயிற்சி பழக்கங்களை ஏற்படுத்துவதன் மூலம் இளம் பருவத்தினர் இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

விளையாட்டில் தடைகளை தாண்டி சாதிக்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. அவர்களை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் உணர வைக்கிறது.

உடற்பயிற்சிகளை ஒரு வேலையாக இல்லாமல், மகிழ்ச்சிகரமானதாகவும் பலனளிப்பதாகவும் பார்க்க டீன் ஏஜ் குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.