Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செவ்விது செவ்விது பெண்மை!

நன்றி குங்குமம் டாக்டர்

பள்ளி செல்லும் பாவை!

மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி

இந்தப் பருவத்து குழந்தைகளுக்கு சில விஷயங்களை புரியும் திறன் இருக்கும். இது மூளை மற்றும் உளவியல் வளர்ச்சியுடன் பள்ளியில் படிக்க ஆரம்பிப்பதும் காரணம் ஆகும். உதாரணத்துக்கு ஒரு ஏழு வயது பெண் (அக்கா) தனது மூன்று வயது தங்கையைவிட சில விஷயங்களில் அதிக புரிதலோடு இருப்பதை பிரயோகித்துக்கொள்வாள். ஒரு சாக்லேட் கொடுத்து அம்மா பகிர்ந்து உண்ணுங்கள் என்பார். அக்கா அதை உடைத்து பெரிய துண்டை வைத்துக்கொண்டு சிறிய துண்டை தங்கையிடம் கொடுப்பாள்.

தங்கை அக்காவிடம் சண்டை பிடிப்பாள், எனக்குத்தான் நிறைய வேண்டும் என்று. அக்கா உடனே அவளது மூளையை பிரயோகப் படுத்தி அவள் தங்கையின் சிறிய துண்டை மூன்றாக உடைத்துவிட்டு, அக்காவின் பெரிய துண்டை ரெண்டாக உடைத்துவிட்டு, பார்த்தியா உனக்குத்தான் நிறைய - மூணு இருக்கு பாரு. எனக்கு வெறும் ரெண்டுதான் என்று சொல்லி தங்கையை ஏமாற்றிவிடுவாள். ஏன் என்றால் தங்கையின் காக்னிடிவ் வளர்ச்சியில், எத்தனை துண்டுகளாக உடைத்தாலும், அளவு ஒன்று போல்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் தன்மை இல்லை. இந்த தன்மை ஏழிலிருந்து பதினோரு வயதில் தான் விருத்தியாகிறது. இந்தப் பருவத்தை Jean Piaget - இன் காக்னிடிவ் தியரி - இல் Concrete Operational Stage என்று சொல்கிறார்கள்.

இதில் குழந்தையின் மூளையில் தர்க்க ரீதியான (logical thinking) சிந்தனைத் திறன் உருவாகுகிறது. இதனால் குழந்தையால் ஆராய்ந்து புரிந்து பதிலளிக்க முடியும். இதுதான் பள்ளிகளில் படிக்கும் பாடத்திலும் இருக்கும். இதைப் பள்ளிகளில் கற்றுக்கொள்கிறார்களா என்று என்னை கேட்காதீர்கள், மனப்பாடம் செய்து எழுதினால் மதிப்பெண் கிடைத்துவிடும் - மதிப்பெண் மட்டுமே பள்ளியின், ஆசிரியர்களின் நோக்கம் என்றால் இதெல்லாம் கற்க முடியாது. கற்றுக்கொடுப்பது, புரியவைப்பது, சிந்திக்க வைப்பதுதான் நோக்கம் என்றால் இந்த பருவத்துப் பிள்ளைகளின் மூளையை ஆசிரியர்களால் செதுக்கி சிலை வடிவாக்கிட முடியும்.

உதாரணத்துக்காக கொடுத்து இருந்த கதையில் வருவது போல, இந்த பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு, பார்க்க வேற மாதிரி இருந்தாலும், அளவு ஒரே போல் இருக்க வாய்ப்பு இருக்கு என்ற புரிதல் இருக்கும். நீளமான பாத்திரத்தில் இருக்கும் நீரை அகலமான பாத்திரத்தில் மாற்றிவிட்டால் பார்க்க நீரின் அளவு குறைந்ததுபோல் காட்சியளிக்கும். ஆனால் இரண்டிலும் ஒரே அளவு நீர்தான் இருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும். அதே போல் கடைக்கு சென்று பொருள் வாங்கும் பொழுது எடைக் கற்கள் பார்க்க சிறிதாக இருந்தாலும், அதன் எடை நாம் வாங்கும் எடையுடன் ஒப்பிட்டு அதே அளவு இருந்தால்தான் நாம் வாங்க வேண்டும் என்று புரிந்துகொள்ள முடியும்.

வடிவேலு காமெடியில் வருவது போல், நாலு கோழி துண்டுதான் இருக்கு. இதற்கு எப்படி சிக்கன் 65 என்று பேர் வைத்து என்னை ஏமாற்றுகிறீர்கள் என்ற அர்த்தமற்ற கேள்விக்கு சரத்குமார் பதில் அளிப்பது போல இந்த கோழித் துண்டில் 25 கோழிகள் அடங்கி உள்ளது என்று பொய்யாக பதில் அளித்து ஏமாற்றத் தேவையில்லை. தர்க்கரீதியாகப் பதில் சொன்னால் போதும் பிள்ளைக்கு புரிந்து விடும்.

இவ்வளவு அறிவாக நமது பிள்ளை இருக்கே என்று, அவரிடம் காதல் என்றால் என்ன தெரியுமா, நீதி நேர்மை நியாயம் என்றால் என்ன தெரியுமா, இந்த உலகத்துல இதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கிறது என்று பேச ஆரம்பித்து விடாதீர்கள். இது Concrete Operational stage தான். இன்னும் abstract thinking அதாவது கண்ணால் பார்க்க முடியாத உள் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் அறிவு வளரவில்லை. அதனால் இதையெல்லாம் பற்றி பேசினாலும் அதில் நேராகப் புரிந்துகொள்ளும் லாஜிக் புரியும். ஆனால் அதில் உள்ள உள் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இயலாது.

இந்த வயதில் விடுகதைகள் போல் கேள்விகளைப் புரிய முயற்சி செய்வார்கள். ராமு ராஜாவைவிட உயரம், ராஜா ராணியைவிட உயரம், அப்போ ராமு உயரமா, ராணி உயரமா என்றால் சரியாக பதில் சொல்லமுடியும். இதற்கு முன்னால் குத்து மதிப்பாக சொல்லி இருப்பார்கள், இப்பொழுது புரிந்து பதில் அளிப்பார்கள். விளையாட்டு ஜாமான், உடைகள், உைடமைகள் என்று எல்லாவற்றையும் பிரித்து அடுக்கி வைக்கும் திறன் இந்தப் பருவத்தில் வந்துவிடும். திறன் இருக்கும் என்பதற்காக அதை அடுக்கிவைத்து விடுவார்கள் என்று அர்த்தம் இல்லை.

இந்தத் திறன் அனைத்திலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்காது. பள்ளிக்குச் செல்லும் பருவம் என்பது பிள்ளைகளை வெளி உலகத்துக்கு பழக்கும் பருவம். இதனால் உலகத்தின் நல்லது மட்டும் அல்ல கெட்டதையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமைகள் பல வகைப்படும். அனைத்து வகைகளுக்கும் இந்த வயதிலிருந்து ஆபத்து அனைத்துப் பிள்ளைகளுக்கும் இருக்கிறது.

ஆண் பெண் இருபாலாருக்கும் இந்த ஆபத்து இருந்தாலும், பெரும்பாலும் பெண் பிள்ளைகளுக்கே ஆபத்து அதிகம். இதைக் காரணம் காட்டி பெண் பிள்ளைகளை பள்ளிக்கே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருப்பது தீர்வு அல்ல. வீட்டிலும், தெரிந்தவர்கள் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் இருக்கின்றனர்.

வெளியே நடக்கும் பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து, எந்த பிரச்னை நடந்தாலும் எங்களிடம் சொல்லு என்று பெற்றோர்கள் தைரியம் கொடுக்க வேண்டும். ஏதோ ஒரு பிரச்னை என்று ஒரு பிள்ளை வந்து சொல்லும் பொழுது, அதை திட்டியோ, இல்லை உதாசினப்படுத்துவதுபோல் பேசியோவிட்டால், அந்தப் பிள்ளை திரும்பி வந்து பிரச்னை என்று சொல்ல தயங்கும். உங்களிடம் பிரச்னைகளைச் சொல்ல முடியவில்லை என்றால், அந்த பிள்ளையின் நம்பிக்கையை வேறு ஒருவன் துஷ்ப்ரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். உலகம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற வேண்டும். அந்த மாற்றம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். பெற்றோர்களிடம் எது நடந்தாலும் துணிவாகச் சொல்லிவிடலாம் என்று எண்ணும் குழந்தையை எவராலும் அசைக்க முடியாது.