Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செவ்விது செவ்விது பெண்மை!

நன்றி குங்குமம் டாக்டர்

பள்ளி செல்லும் பாவை!

மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி

பள்ளிக்கு செல்லும் பெண்

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ

திரிந்து பறந்துவா பாப்பா,

வன்னப் பறவைகளைக் கண்டு - நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

வளர்பிறையை போல் அழகாய் வளரும் மங்கையின் வளர்ச்சியில் இரண்டாம் அத்தியாயத்திற்கு வாசகர்களை அன்போடு வரவேற்கிறேன். இதில் ஆறிலிருந்து பத்து வயதிலிருக்கும் பெண் பிள்ளைகளின் உடல் நலத்தை பற்றி பார்க்கலாம்.ஹப்பாடா! ஆறு வயது ஆகிவிட்டது இனிமேல் பள்ளிக்கு அனுப்பிவிடலாம் என்று பல பெற்றோர்கள் ஆசுவாசப் படும் நேரம் இது. அப்படி ஹப்பாடா என்று பெற்றோர்களால் ஒரு போதும் இருக்கவே முடியாது என்பதை எவ்வளவு விரைவாக புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவு நல்லது (பிள்ளைகளுக்கல்ல பெற்றோர்களுக்கு).

இந்த பருவத்தில் பிள்ளைகளின் வளர்ச்சியை பற்றின கவலை பெற்றோர் மற்றும் குழந்தைகள் மருத்துவர் மட்டும் அல்லாமல் மூன்றாவதாக ஒரு நபர் சேருவார். அவர் வேறு யாரும் இல்லை, அந்த பிள்ளை தான். ஏன் என்றால் இந்த பருவத்திலிருந்து தான் தன்னை தன் சகவயதினரோடு ஒப்பிட்டு பார்க்கும் தன்மை வருகிறது. இந்த ஒப்பிடுதல் நான் மட்டும் ஏன் குண்டாக அல்லது ஒல்லியாக அல்லது குட்டையாக அல்லது நெட்டையாக இருக்கிறேன் என்று உடல்வாகுகளை வைத்து ஆரம்பிக்கின்றது (அது எங்கே போய் முடிகிறது என்று கற்பனைக்கு கூட எட்டாது - கல்லறையின் வசதி எனக்கு மட்டும் ஏன் இப்படி இல்லை என்று கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை).

இந்த பருவத்தின் இறுதியில் பெண் பிள்ளைகளின் வளர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும் (வருட பிறப்பில் ஜோசிய காரர் சொல்வது போல் சொல்கிறேனா ?). அதாவது ஆங்கிலத்தில் Growth Spurt என்று சொல்வார்கள். இது பெண் பிள்ளைகளுக்கு ஒன்பதில் இருந்து பதினொன்று வயதிலேயே தொடங்கி விடும். இந்த பருவத்தில் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளை விட உயரமாகவே தெரிவார்கள். ஏன் என்றால் ஆண் பிள்ளைகளின் Growth Spurt பின்பு தான் வரும். இந்த வளர்ச்சி எலும்பின் வளர்ச்சியினால் வருகிறது.

அதனால் எலும்பு வலுவடைவதற்கு ஏற்றவாரே நல்ல போஷாக்கான உணவுகளை கொடுக்க வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது முக்கியம். அதற்காக ஆர்வ கோளாறில் அதிகமாக கால்சியம் சேர்த்தாலும் எலும்பு வலுவடைந்து நொறுங்கிவிடும் என்பதையும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.(இது கேரட் சாப்பிட்டால் கண்ணு நல்லா தெரியும் என்பதற்காக மூட்டை மூட்டையாக கேரட் கொடுக்கும் பெற்றோர்களுக்கான எச்சரிக்கை).

இது எலும்பு மட்டும் அல்ல, இந்த பருவத்தில் தான் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளர்கின்றன, அதற்கும் கால்சியம் உதவியாக இருக்கும். இவ்வளவு வளர்ச்சி நடக்கும் அந்த எலும்புகள் சும்மாவா இருக்கும், துரு துரு என்று ஓடியும் ஆடியும் விளையாட ஆசைப்படும். அதனால் இந்த வயதில் பிள்ளைகளை நன்றாக விளையாட அனுமதிக்க வேண்டும். நிறைய பெண் பிள்ளைகள் நடனம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப் படுவார்கள். அதற்கும் இதுதான் ஆரம்பிக்க அரிதான வயது.

இப்படி ஓடி விளையாடும் பாப்பா, ஓய்ந்திருக்கள் ஆகாது. ஏன் என்றால் அப்பொழுதுதான் வளர்ச்சி சீராக இருக்கும். சும்மாவே இருந்தால் கை -கால் நீட்டி மடக்க மாட்டார்கள். வளரும் பாகங்கள் வேலைக்குள் இருந்தால் தானே சீராக வளரும்.எலும்புகள் மேல் வளரும் தசைகள் அதை சுற்றி இருக்கும் கொழுப்பு, இவையும் வளரும். பெண் பிள்ளைகளுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் ஆண் பிள்ளைகளை விட. இது பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. பெண் பிள்ளைகள் குழந்தை பெற்றுக்கொள்வது தான் பிரதம காரியம் ஆகா இருந்ததால், அவளின் உடலை குழந்தையை தூக்கி வளர்க்கும் பஞ்சு மெத்தை போல் வைத்துக் கொள்ளவே இயற்்கை பெண் பிள்ளைகளுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும்படி செய்துள்ளது.

ஓடி விளையாட சொல்வது உடல் வளர்ச்சிக்காக மட்டும் அல்ல, தசைகள் ஒருங்கிணைந்து வேலை செய்ய பழகுவதற்கும் இது அவசியம். பெண் பிள்ளைகளுக்கு இயற்கையாகவே சின்ன தசைகளின் மூலம் செய்யும் சிறு வேலைகள் நன்றாக வந்து விடும். அதனால் அவர்கள் அழகாக எழுதுவார்கள், நன்றாக வரைவார்கள். ஆண் பிள்ளைகளுக்கு பெரிய தசைகளை வைத்து செய்யும் ஓட்டம் சாட்டம் எல்லாம் இயற்கையாக நன்றாக வரும்.

இந்த தசைகளின் ஒருங்கிணைப்பை வளர்க்கும். இந்த வயதில் என்ன கற்க வேண்டுமோ அதை ஆரம்பித்து விட வேண்டும். அப்பொழுது அதற்கேற்றவாரே உடல் அமைந்து விடும். நாட்டியம் போல் மேற்கத்திய நாடுகளில் ஜிம்னாஸ்டிக்ஸ், ballet போன்றவையின் பயிற்சியை இந்த வயதிலேயே ஆரம்பித்து விடுகிறார்கள். இதை போலவே போஓபல், பாஸ்கெட்பால், கபடி போன்ற எந்த விளையாட்டில் வேண்டுமென்றாலும் இந்த வயதிலேயே பயிற்சி ஆரம்பித்து விட்டால் பெண் பிள்ளைகளும் பெரிய வீராங்கனைகளாக வர முடியும். இதைதான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று பெரியவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வயதில்தான் பிள்ளைகளின் பேச்சுத் திறனும் நன்றாக வளர்ந்து விடுகிறது. மழலை பேச்சு மாறி, நன்றாக பேச ஆரம்பிக்கின்றன. இதை ஊக்குவிக்கும்படி பிள்ளைகளிடம் நிறைய பேச வேண்டும். பேச்சுப் போட்டி போன்ற விஷயங்களையும் ஊக்குவிக்கலாம். இதில் ஆர்வம் உள்ளவர்கள் பேச்சை வளர்த்து விட்டால், அந்த பேச்சை வைத்து உலகத்தையே வாங்கி விடலாம். பேச்சுக்கு அவ்வளவு வலிமை உண்டு. அது நன்றாக வளர திருக்குறள் படிப்பது, நா பிறழ் சொற்கள் பயிற்சி அளிப்பது போன்றவை உதவும்.

இதைத் தவிர இந்த வயதில் போட வேண்டிய தடுப்பூசிகள் - DPT/DT யின் பூஸ்டர் ஐந்து வயதில் போட வேண்டும். பத்து வயதிலும் இன்னொரு பூஸ்டர் போட வேண்டும். இதைத் தவிர பெண் பிள்ளைகளுக்கு HPV எனப்படும் கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் தடுப்பு ஊசி ஒன்பது வயதிலிருந்து போட ஆரம்பிக்கலாம். அதை பற்றின விவரங்களை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

பெண் பிள்ளைகள் உயரம் மட்டும் அல்ல, அவர்களின் மார்பக வளர்ச்சியின் ஆரம்பமும் இந்த வயதில் இருக்கும். ஏதோ வித்யாசமாக இருக்கிறது என்று பயந்து சொல்லும் பெண் பிள்ளைகளுக்கு இந்த வளர்ச்சிகளை பற்றி கற்றுக்கொடுப்பது மிக முக்கியம். சில பிள்ளைகள் இந்த வயதிலேயே வயதுக்கும் வந்து விடுகிறார்கள். அதனால் அதை பற்றின விவரங்களை முன்கூட்டியே சொல்லி பழக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது - ஒப்பிட்டு பார்த்தல் என்பது உடல் வளர்ச்சி மட்டும் அல்ல. இது போன்ற பேச்சு, திறமை என எல்லாவற்றிலும் வரும். அதோடு சேர்ந்து போட்டி பொறாமையும் வரும். இதை மென்மையாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையாள வேண்டும். இந்த வயதில் பிள்ளைகள் களிமண் போன்றவை, நாம் என்ன செய்தாலும் ஆழமாக பதிந்து விடும். பிற்காலத்தில் உளவியல் ரீதியான பிரச்னைகள் வருவதற்கான வித்தாகிவிடும். அதனால் மிக கவனம் தேவை.