Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்ரீலீலா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளுள் ஒருவராக இருப்பவர், ஸ்ரீலீலா. இதுவரை தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழகத்திலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். திரையுலகத்திற்கு வந்த சில நாட்களிலேயே ஹிட் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இவர் இந்திய அமெரிக்கா வம்சாவளியைச் சேர்ந்தவர். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடிப்படையில் மருத்துவரான லீலா தன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் மிக விருப்பம் உள்ளவர். இவரது, ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க் அவுட்ஸ்: நான் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் என்று சொல்லலாம். உடல் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ள அனைவருக்கும் உடற்பயிற்சி மிக மிக அவசியமானது. எனவே,தான் என்ன வேலை இருந்தாலும் உடலை பராமரிக்க தவறுவதில்லை. ஷூட்டிங்கிற்காக வேறு ஊருக்கு சென்றாலும் சரி அல்லது எனது சொந்த வேலையாக பயணம் சென்றாலும் சரி ஒர்க் அவுட்களை நிறுத்துவதில்லை. பொதுவாக நான் அனைத்து வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். அந்த வகையில், வாரத்தில் சில நாட்கள் HIIT உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வேன். பின்னர், எடை தூக்குதல், ட்ரெட்மிலில் ஓடுதல், பெஞ்ச் பிரஸ்கள், டெட்லிஃப்ட்ஸ், ஸ்குவாட்ஸ், தோள்பட்டை பிரஸ்கள் மற்றும் புல்-அப்கள் உள்ளிட்டவை இருக்கும். இது தசைகளை தளர விடாமல் செய்ய உதவுகின்றன.

அதுபோன்று, உடற்பயிற்சியை தாண்டி எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் யோகா. அது மன மற்றும் உடல் நலனை பாதுகாப்பதற்காக செய்கிறேன். தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொள்வேன். பொதுவாக, தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும்போது, ​​அது எடையைக் கட்டுப்படுத்தவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும், அன்றாட பணிகளை எளிதாகச் செய்யும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

அதுபோன்று என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும், எனக்கு நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும். அது என் உள்ளத்தோடு இணைந்திருப்பதை உணர உதவுகிறது. அதோடு, முடிந்த போதெல்லாம் எனக்கான நேரத்திற்கு முன்னுரிமையாகக் கொடுக்க முயற்சிக்கிறேன்.

டயட்: உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதுபோல, ஒரு சமச்சீரான உணவைப் பின்பற்றுவதும் முக்கியமானது. எனவே, உணவு விஷயத்தில் நான் எந்த சமரசமும் செய்வதில்லை. ஒரு நல்ல சமச்சீரான உணவு உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் தினசரி செயல்பாடுகளைச் செய்யத் தேவையான பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

இது நோயற்ற உடலை ஊக்குவிக்கிறது மற்றும் உடல் திறம்பட செயல்பட உதவுகிறது. எனவேதான் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதுபோன்று, மிக முக்கியமானது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது. எனவே, நிறைய தண்ணீர் குடிக்கிறேன். பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கிறேன். பாக்கெட் உணவுகளை தவிர்த்துவிடுவேன். ஏனென்றால் நமது சருமம்தான் நமது உடலின் பிரதிபலிப்பு, அதை நன்றாக நடத்துவது நமது கடமையாகும்.

காலை உணவு: ஷூட்டிங் அல்லது பிற வேலைகள் என என்ன கமிட்மென்ட் இருந்தாலும், விட்டுக் கொடுக்காத ஒரு விஷயம் காலை உணவு. தினமும் ப்ரேக்ஃபாஸ்டில் இளநீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதேபோல வெஜ் சாண்ட்விச், கொழுப்பு குறைவாக உள்ள பால் கலந்த பழ சாறையும் தினசரி எடுத்துக் கொள்கிறேன். சில சமயங்களில் சாண்ட்விச்சுக்கு பதிலாக, பழ சாலட்டை சாப்பிடுவேன். மேலும், தற்போது சில நாட்களாக குயினாவோ மற்றும் நட்ஸ் வகைகளை சாப்பிடத் தொடங்கியுள்ளேன்.

மதிய உணவு: மத்தியானத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவேன். இதனுடன் பிரவுன் அரிசி சாதம் மற்றும் பருப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்வேன். கூடவே உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை டீ குடிப்பேன்.

இரவு உணவு: இரவில் வெஜ் சூப் மற்றும் சாலட் ஆகியவற்றை உட்கொள்வேன். எப்போதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், இனிப்பு குறைவாக இருக்கும் ஏதேனும் ஒரு தின்பண்டத்தை சாப்பிடுவேன். அதேபோல காபி என்றாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் காபியுடன் சில பிஸ்கட்டுகளையும் சேர்த்து சாப்பிடுவேன்.

பியூட்டி: நான் எப்போதும் என் சருமப் பராமரிப்பு வழக்கத்தை எளிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறேன். இதற்காக பால் கிரீம் (மலாய்) தடவுவது முதல், பால் மற்றும் பீசன் பேக்குகளைப் பயன்படுத்துவது வரை, எனது சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாகப் பாலை நான் பயன்படுத்தி வருகிறேன். அந்தவகையில், ஃபேஸ் மாஸ்க் எனக்கு மிகவும் பிடித்தவை. இது தவிர, நான் பயன்படுத்த விரும்பும் வேறு சில தயாரிப்புகள் ஸ்கின்ஹெரிட்டன்ஸ் பாடி சீரம் மற்றும் சன்ஸ்டாப்பபிள்(SPF). இதை முயற்சிக்கும் வரை என் உடல் சருமத்திற்கு சீரம் தேவை என்று எனக்குத் தெரியாது. அது அந்தளவிற்கு சரும பராமரிப்புக்கு உதவுகிறது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்