நன்றி குங்குமம் தோழி
புது ஆண்டு பிறக்கும் முன்னரே வரும் வருடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்னும் முடிவுகளை எடுத்திருப்போம். அவ்வாறு தம் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் சேர்த்துவிட நினைக்கும் பெற்றோர்கள், இந்த வருடமாவது மீண்டும் நம் பள்ளி நாட்களில் சாம்பியனாக இருந்தது போல விளையாட வேண்டும் என நினைக்கும் பெரியவர்கள், வார இறுதியில் மட்டும் விளையாடும் நபர்கள் என பலர் முடிவு செய்திருப்பீர்கள்.
அப்படிப்பட்டவர்கள் விளையாட்டில் ஈடுபடும் முன்னர் என்ன செய்ய வேண்டும், வேண்டாம்? இதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன? என்பது பற்றி அறிவது மிக அவசியமாகிறது. அவர்களுக்காகவே இந்தக் கட்டுரை.
விளையாட்டுத் துறை...
ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது மட்டும்தான் நம் இந்திய நாடு விளையாட்டுத் துறையில் எந்த அளவுக்கு பின்தங்கி இருக்கிறது என நினைவுக்கு வரும்.
விளையாட்டில் ஆர்வம் இருக்கும் குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதோடு, அவர்கள் விளையாட்டையும், விளையாட்டு நுணுக்கங்களையும் செப்பனே செய்திட உடற்பயிற்சியும், உணவும் எவ்வளவு இன்றியமையாதது என்பதனை தொடக்கம் முதலே கற்றுக் கொடுப்பது அவசியம். அதுவும், ஆரம்பம் முதலே பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் எளிதில் ஆடுகளத்தில் வெல்லலாம். அதற்கு தொடர்ந்து எவ்வித உடல் இடர்பாடுகள் இன்றி ஆரோக்கியமாய் இயங்க வேண்டும். இதற்கு உதவி செய்வதே இயன்முறை மருத்துவம்.
அடிப்படைத் தகுதி...
ஒருவர் விளையாட்டுத் துறையில் சேர அவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதனை பார்ப்போம்.
*விளையாட்டும், விளையாட்டு நுணுக்கங்களும் தெரிய வேண்டும்.
* விளையாட்டின் போது எந்த உடல் பாகம் அதிகம் வேலை செய்கிறது என்பதை உணர வேண்டும். அதாவது, கால்பந்தாட்டத்தில் ஓடி ஓடி பந்தினை உதைப்பார்கள். அதில் கால் அதிகம் வேலை செய்தாலும், கால் மூட்டுகளில் உள்ள நுண்சமிக்கைகள் அதிகம் வேலை செய்யும். இதுவே எத்திசையில் திரும்ப வேண்டும், எவ்வளவு விரைவாய் நுணுக்கமாய் திரும்பி பந்தினை எதிர் நோக்க வேண்டும் என்பது அனைத்தையும் நம் மூளையோடு தொடர்பு கொண்டு இயங்கும்.
*ஆரோக்கியமான தசைகள், எலும்புகள், ஜவ்வுகள் என விளையாட்டிற்கு மிக முக்கியமான உடல் பாகங்கள் காயம் (Injury) ஏதுமின்றி இருத்தல் அவசியம்.
*உணவில் கடுமையான கட்டுப்பாட்டுடன் புரதம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். வைட்டமின், மினரல் போன்ற போதுமான நுண் சத்துகள் கிடைக்கும் உணவுகளையும் எடுத்துக்கொள்ளுதல் அவசியம்.மேலே கூறிய அனைத்துத் தகுதிகளும் இருக்கிறதா என்பதனை உறுதி செய்து நாம் விளையாட ஆரம்பிப்பதில்லை. ஆனால், நாம் இவ்வகைத் தகுதிகளை சிறு வயதிலிருந்து கற்றுக் கொண்டால் மட்டுமே உலக அளவில் உள்ள விளையாட்டு வீரர்களோடு எளிதாய் போட்டி போட முடியும்.
செய்ய வேண்டியவை...
*விளையட்டிற்கு தேவையான உடல் வலிமையை பெற தினசரி உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். சிறுவர் பிரிவில் விளையாடுபவர்களுக்கும் உடற்பயிற்சிகள் உள்ளன.
*போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியம். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதி புரதச் சத்தும், நீர் சத்தும்.
*விளையாட்டினை முழு மூச்சாய் நினைத்து அனைத்து வகை நுணுக்கங்களையும் அதிலும் குறிப்பாக, நமக்கு எது எளிதில் செய்ய முடிகிறது, முடியவில்லை என்பதனையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
*போதுமான அளவு தினசரி தூங்குவதனை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை...
*அதிக பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொரிக்கப்பட்ட உணவுகள், செயற்கை வண்ணம் சேர்த்த உணவுகள் என ஆரோக்கியமற்ற உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
*முறையாக விளையாட்டுப் பயிற்சியினை செய்யாமல் வாரத்தில் ஒன்றிரண்டு முறை என செய்வது முற்றிலும் பயன் அளிக்காது. பயிற்சியாளர் விதித்த நாட்களில் விளையாடுவது அவசியம்.
*விளையாட்டிற்கு முன் பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை உரிய முறையில் கற்றறிந்து கட்டாயம் செய்து வர வேண்டும்.
*விளையாட்டில் சேரும் முன் தசை, ஜவ்வு காயம் ஏதேனும் உள்ளதா, அப்படி இருப்பின் எந்த அளவில் உள்ளது என்பதை இயன்முறை மருத்துவர் துணை கொண்டு செய்வது
அவசியம்.
*காயம் இருந்தால் சுயமாக இயன்முறை மருத்துவ ஆலோசனை இல்லாமல் விளையாடவோ, பயிற்சி செய்யவோ கூடாது.
*உணவு ஆலோசகர் அறிவுரையின்றி சந்தையில் விதவிதமாக விளையாட்டு வீரர்களுக்கென்றே கிடைக்கும் ஊட்டச்சத்து மாவுகளை உபயோகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இயன்முறை மருத்துவம்...
விளையாட்டையும் உடற்பயிற்சிகளையும் எவ்வகையிலும் பிரிக்க முடியாது. விளையாட வேண்டும் என முடிவு செய்தால் நிச்சயம் உடற்பயிற்சிகள் செய்தாக வேண்டும். எனவே, ஆரம்பம் முதலே இயன்முறை மருத்துவரை அணுகி உரிய உடற்பயிற்சிகள் செய்து வருதல் அவசியம்.
உடற்பயிற்சி வகைகள்
அனைத்து வகை உடற்பயிற்சிகளும் விளையாட்டில் உள்ளவர்கள் செய்வது கட்டாயம். ஆனால், அந்தந்த விளையாட்டிற்கும் அதன் தேவைக்கும் ஏற்ப முக்கியத்துவம் மாறுபடும்.
1. தசைத் தளர்வு பயிற்சிகள்
தசைகள் அதன் நீளத்தில் இலகுவாய் இருக்க வேண்டும் என்பதால் ஸ்டெர்ச்சிங் பயிற்சிகள் (Stretching Exercises) அவசியம் செய்ய வேண்டும்.
2. தசை வலிமை பயிற்சிகள்
தசைகள் வலிமையுடன் இருந்தால்தான் எளிதாய் விளையாட, எடை தூக்க முடியும். உதாரணமாக, இரும்புப் பந்து எறிதல் விளையாட்டு.
3. தசை தாங்கும் திறன் பயிற்சிகள்
தாங்கும் திறன் என்பதை மருத்துவத்தில் எண்டியூரன்ஸ் (Endurance) எனச் சொல்வோம். அதாவது, எவ்வளவு நேரம் விளையாடினாலும் அந்தத் தசை சோர்வு ஆகாமல் அதன் வேலையை செய்ய வேண்டும். உதாரணமாக, மாரத்தான் மாதிரியான விளையாட்டில் நீண்ட நேரம் ஓட வேண்டும். ஆனால், சோர்வாகாமல் ஓட வேண்டும் என்பதனால், இவர்களுக்கு இவ்வகை பயிற்சிகளில் இயன்முறை மருத்துவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
4. இதய நுரையீரல் திறன் பயிற்சிகள்
கார்டியோவாஸ்குலர் எண்டியூரன்ஸ் (CardioVascular Endurance) எனச் சொல்லப்படும் இந்த வகை பயிற்சிகளில்தான் ஓடுவது, ஜாக்கிங், நடைப்பயிற்சி என பல வகைகள் வரும். இதனை செய்வதால் ஓடி ஆடி விளையாடினாலும் மூச்சு வாங்கி சோர்வாகாமல் முழு ஆற்றலுடன் விளையாட முடியும். உதாரணமாக, கூடைப்பந்து விளையாட்டில் முக்கிய வேலை கைகளுக்கு இருந்தாலும், மூச்சு வாங்காமல் ஆட்டம் முடியும் வரை ஓடி ஓடி விளையாட வேண்டும் என்பதால், இவ்வகை பயிற்சிகளும் முக்கியம்.
5. ஸ்திரத்தன்மை பயிற்சிகள்
அனைத்து விளையாட்டுகளுக்கும் நம் உடம்பின் பேலன்ஸ் (Balance) மிக முக்கியம். ஸ்திரத்தன்மை பயிற்சிகள் செய்வதால் ஒரு வீரர் எதிர்ப்பாரா நேரத்தில் கூட சரியான முறையில் ஆட்டத்தை விளையாட முடியும். இதற்கு சரியான உதாரணம், கிரிக்கெட்டில் பந்து வருவதை எதிர்பார்த்து சரியான முறையில் பிடிப்பது, கபடியில் நிலைத் தடுமாறாமல் முன்னகர்ந்து எதிராளியை பிடிப்பது என அனைத்து விளையாட்டிற்கும் இவ்வகை பயிற்சிகள் உதவுகிறது.
உடற் பயிற்சியின் பயன்கள்
நம் எல்லோருக்கும் பொதுவான உடற் பயிற்சியின் பயன்கள் தெரிந்தாலும் விளையாட்டில் என்ன பயன் என்பதை அறிந்து கொள்வோம்.
*தசை மற்றும் ஜவ்வு காயம் (Muscle & Ligament Injury) ஏற்படாமல் தடுக்க முடியும்.
*தசைப் பிடிப்பு, தசை கிழிவது, தசை அயற்சி (Muscle Tiredness), தசை அழற்சி (Muscle Inflammation), ஜவ்வு சுளுக்கு என அனைத்தையும் தடுக்க முடியும்.
*அதனையும் மீறி ஏற்படும் காயத்திலிருந்து சீக்கிரம் குணம் பெற்று விளையாடவும் உடற்பயிற்சிகள் உதவும்.
*சோர்வாகாமல் முழு ஆட்ட நேரம் வரை விளையாட முடியும்.
*விளையாட்டில் புது இலக்குகளை, எல்லைகளை அடைய உடற்பயிற்சி உதவி செய்யும்.
எனவே, வெறும் கனவுகள் காண மட்டும் குழந்தைகளுக்குக் கற்றுத் தராமல், அவற்றிற்கு எப்படி அவர்களை அவர்கள் தகுதி படுத்திக்கொள்வது எனவும் கற்றுக்கொடுப்பதும், நாம் விளையாட நினைத்தாலும் இது யாவற்றையும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்ந்து இயன்முறை மருத்துவ துணை கொண்டு வெற்றிபெறுங்கள், வெற்றி பெறச் செய்யுங்கள்.
இயன்முறை மருத்துவர்: கோமதி இசைக்கர்