Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செரிமானத்தை சரியாக்கும் அரைக்கீரை

நன்றி குங்குமம் டாக்டர்

இயற்கையான முறையில் பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் யாவும் பெரும்பாலும் உடலுக்கு தீங்கினை விளைவிப்பது இல்லை. அந்தவகையில் இயற்கையில் எளிதாக, அனைவராலும் அறியப்பட்ட கீரைதான் அரைக்கீரை.இக்கீரைக்கு அறுகீரை என்ற வேறு பெயரும் உண்டு. அரைக்கீரை சற்று தடிமனான வேரில் பல கிளைகள்விட்டு வளரக்கூடியது. இவை தரையிலிருந்து ஒரு அடி உயரம் வரை புதர்ச்செடி போன்று வளரும். சத்துக்கள் நிறைந்த, இயற்கையில் கிடைக்கப்பெறக் கூடிய அற்புதக்கீரை இது. அரைக்கீரையின் தாவரவியல் பெயர்: அமராந்தஸ் டிரைஸ்டிஸ் ஆகும்.

இது அமரந்தேசியே குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாயகம் இந்தியா ஆகும். இது இந்தியா முழுவதும் வளரும் ஒரு வெப்பமண்டலப் பயிராகும். மேலும், இக்கீரை தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா, தாய்லாந்து, மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.

அரைக்கீரையில் காணப்படும் சத்துக்கள்

அரைக்கீரையில் நீர்ச்சத்து 87 சதம், புரதச்சத்து 28 சதம், கொழுப்புச்சத்து 0.4 சதம், தாதுப்பொருட்கள் 24 சதம், மாவுப் பொருட்கள் 7.4 சதம் அளவிலும் உள்ளன. தாதுப்பொருட்களில் சுண்ணாம்பு, மணிச்சத்து, இரும்பு, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் உள்ளன.

அரைக்கீரையில் காணப்படும் தாவரமூலக்கூறுகள்

அல்கலாய்டுகள், பிளேவோனாய்டுகள், கிளைக்கோஸைடுகள், டெரிபினாய்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் அமராந்தோஸைடுகள், அமாரிசின், பீட்டாலைன், அமாநாந்தைன் உள்ளிட்ட பல்வேறு தாவர மூலக்கூறுகளை அரைக்கீரை கொண்டுள்ளது.

குணங்கள்

பித்தமகற்றி, சுரம்நீக்கி, பால் சுரப்பி, வாய்வு நீக்கி, வாதமடக்கி, வலிநீக்கி, பலமூட்டி, பசியூட்டி போன்ற தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.அரைக்கீரையின் மருத்துவப் பண்புகள்:வைட்டமின் ஏ நிறைந்து காணப்படுவதினால் கண்பார்வையினை மேம்படுத்தவும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது.வைட்டமின் பி செறிந்து காணப்படுவதினால் ரத்தசோகையினை தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

தோல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு இக்கீரை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ளடங்கிய மூலக்கூறுகளும், வைட்டமின் சியும் ஆகும்.

ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்க இதில் உள்ளடங்கிய மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் தாதுக்கள் உதவுகிறது. அரைக்கீரை நரம்புகளை வலுவடையச் செய்யவும் பாதுகாக்கவும், தலைமுடி உதிர்வினைத் தடுக்கவும் பயன்படுகிறது.

இக்கீரையில் மெல்லிய நரம்புகளைக் கொண்ட நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதினால் வளரும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.காலைநேர உணவினை தவிர்ப்பதாலும், நேரம் கடந்து சாப்பிடுவதினாலும் ஏற்படக்கூடிய குடற்புண்களை போக்கவும் அரைக்கீரை உதவுகிறது.

வாயுப்பிரச்னை, மலச்சிக்கல்

பிரச்னை, செரிமானக் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாகவும் விளங்குகிறது. பொதுவாக குழந்தை பேற்றுக்கு பிறகு ஏற்படும் திடீர் எடை அதிகரிப்பை குறைக்க உதவுகிறது. இதில் பாஸ்பரஸ் செறிந்து காணப்படுவதினால் மூளை செயல்பாட்டினை தூண்டி சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

கல்லீரல் பிரச்னையை சீர் செய்கிறது. சளி, இருமல் தொல்லையை போக்குகிறது. விஷக்கடியால் உருவாகும் நஞ்சினை முறிக்கும் திறனும் அரைக்கீரைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இக்கீரையில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் இருப்பதினால் சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது நலம்.

இத்தகைய பயன்களைக் கொண்ட அரைக்கீரையை கூட்டாக, குழம்பாக தயாரிக்கலாம். வதக்கியோ அல்லது பருப்பு சேர்த்து கடைந்தோ உண்ணலாம். இலைச்சாறுடன் தேன் கலந்து அருந்தலாம். இக்கீரையுடன், இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து வேகவைத்து கடைந்து சாப்பிடுவது நலம் தரும்.

அரைக்கீரையின் வேறு பயன்பாடுகள்

இக்கீரையிலிருந்து ஒரு வகையான தைலம் எடுக்கப்படுகிறது. இத்தைலம் முடி வளரவும், கண்களுக்குக் குளிர்ச்சியூட்டவும் பயன்படுகிறது.அதுபோன்று இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்துவர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு மாறும்.

கீரைகள் கட்டாயம் தமிழிரின் உணவில் முக்கிய பங்கு வகிப்பதினால், இத்தகைய கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினரும் பின்பற்றி நலமுடன் வாழப் பழகுவது சிறப்பு.பதார்த்த குணப்பாடத்தில் அரைக்கீரையின் நன்மைகள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது பாடல்

அறுகீரையின் குணம்

காய்ச்சல் குளிர்சன்னி கபநோய் பலபிணிக்கும்

வாய்ச்ச கறியாய் வழங்குங்காண்- வீச்சாய்க்

கறுவுமோ வாயுவினங் காமமிகு வுண்டா

மறு கீரையத்தின் றறி.