Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நச்சுக்களை நீக்கும் குமுட்டிக் கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

இந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் கீரைகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு கீரைக்கும் தனித்துவமான ஊட்டச்சத்து மதிப்பு மருத்துவ குணங்கள் மற்றும் சமூக பண்பாட்டு தொடர்புகள் உண்டு. அந்தவகையில், குமுட்டிக்கீரையும் (Allmania nodiflora) ஒன்று. இதற்கு காமாட்சிக் கீரை என்ற வேறு பெயரும் உண்டு. இதன் அறிவியல் பெயர் ஆல்மானியா நோடி பிளோரா ஆகும். அமராந்தேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இக்கீரை பொதுவாக வயல் வெளிகளில், நிலப்பரப்புகளில், தோட்டப்பகுதிகளில் மற்றும் ஈரமான இடங்களில் வளரும் தன்மையுடையது. இதன் மருத்துவ குணங்கள் காரணமாக தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக இக்கீரையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வளரும் இடம்

இந்தியா முழுவதும் காணப்படும் கீரையாக இருந்தாலும் குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்தக் கீரை தரையோடு படரும் கொடி வகை ஆகும். வருடம் முழுவதும் செழிப்பாக வளரக்கூடிய இந்தக் கீரையின் பூக்கள் வெள்ளை கலந்த இளம் பச்சை நிறத்திலும் அல்லது இளஞ்சிவப்பு கலந்த நிறத்திலும் காணப்படுகிறது. பொதுவாக வைகாசி மாதத்தில் இந்தக் கீரை பரவலாக பூத்திருக்கும். இது ஒரு காட்டுக்கீரை என்பதினால் விவசாயிகள் பெரும்பாலும் இதை பயிரிடுவதில்லை. மழைக்காலங்களில் விதைகள் மண்ணில் விழுந்து தானாகவே முளைத்து வளரும். கிராமப்புறங்களில் மக்கள் வயலில் புல் அறுக்கும்போது இதனை தனியாக சேகரித்து உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.

குமுட்டிக் கீரையில் உள்ளடங்கிய ஊட்டச்சத்துகள்

வைட்டமின் ஏ, சி மற்றும் பி குமுட்டிக்கீரையில் உள்ளன. அதுமட்டுமின்றி உடலுக்கு வலிமையை அளிக்கக்கூடிய தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் ஜிங்க் உள்ளன. மேலும் நார்ச்சத்து நிறைந்தும் இக்கீரையில் காணப்படுகின்றது.

தாவர மூலக்கூறுகள்

*அல்கலாய்டுகள் - நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் அளிக்கக் கூடியது.

*பிளேவோனாய்டுகள் - ஆன்டி ஆக்ஸிடன்டுகளாக செயல்படுகிறது

*டானின்கள் - காயங்களை குணப்படுத்த உதவுகிறது

*சாப்போனின்கள் - நோய் எதிர்ப்புசக்தி அளிக்கிறது.

*பீனாலிக் அமிலங்கள் - ஆன்டி ஆக்ஸிடன்டுகளாக செயல்படுகிறது.

*டெர்பினாய்டுகள் - உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

குமுட்டிக்கீரையின் மருத்துவ குணங்கள்

உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.வைட்டமின் சி நிறைந்து இருப்பதினாலும் ஆன்டி ஆக்ஸிடன்டுகளை கொண்டுள்ளதினாலும் தோல் சார்ந்த நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் தடுக்கிறது.

மூட்டுவலி, உடல் வீக்கம் போன்றவற்றுக்கு உதவுகிறது.

சளி, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக் கூடியது.

கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளைக் தடுக்கக் கூடியது.

பெண்கள் நலம் காக்க உதவக்கூடிய கீரையாக தொன்று தொட்டே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சியை சீர்படுத்தவும், உடல் வெப்பத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நவீன ஆய்வுகளின் வழி இக்கீரை புற்றுநோயைக் குணப்படுத்தவும், கல்லீரல், மூட்டுவலி தொடர்பான பிரச்னைகளை தடுக்கவும் பயன்படுவதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பாரம்பரிய மருத்துவமும், நவீன அறிவியலும் வலியுறுத்தும் ஒரு சிறந்த கீரையாக குமுட்டிக் கீரை உள்ளது.

குமுட்டிக்கீரையின் காய்கள் மலச்சிக்கலையும் ஜீரண மண்டலத்தில் வரும் தொந்தரவுகளையும் போக்கக்கூடியது. இந்தக் கீரை சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது. இதன் இலைகள் காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. உடலில் ஏற்படும் நோய் தொற்றுகள் மற்றும் வீக்கங்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. இது நீர்ச்சத்து நிறைந்த கீரையாகும். உடலில் ஏற்படும் கெட்ட நீரை அகற்றக்கூடியது. ஆன்டிஆக்சிடென்ட்கள் பண்புகளையும் இந்தக் கீரை கொண்டுள்ளது. சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த கீரை நோய் எதிர்ப்பு ஆற்றலை அபரிமிதமாக அளிக்கக் கூடியது. ரத்தத்தை தூய்மை ஆக்கக் கூடிய கீரை.

இந்தக் கீரையை அன்றாடம் உணவுடன் சேர்த்துக் கொள்ள நல்ல ஆரோக்கியத்தை பெற முடியும். உயிர்ச்சத்துகள் நிறைந்த அற்புதமான கீரை.பயன்படுத்தும் முறை: குமுட்டிக்கீரை சமைப்பதற்கு பயன்படுத்தும்போது, கீரையில் பூ வருவதற்கு முன்பு இளசாக இருக்கும்போதே பறித்து சமைப்பது நல்லது. இக்கீரையை கூட்டு, பொரியல், கீரை அடை அல்லது தோசை என பல வகைகளில் தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்வது நலம். இக்கீரையை பாசிப்பருப்போடு சேர்த்து கடைந்து உண்ணும்போது சுவையாக இருக்கும்.