Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மல்ட்டி வைட்டமின் நிறைந்த தவசிக்கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

தவசிக்கீரை நமது பாரம்பரிய உணவில் சேர்த்து வரும் ஒருவகை கீரையாகும். தமிழ்நாட்டில் இதற்கு செக்குமணிச் செடி என்ற வேறு பெயரும் உண்டு. குறிப்பாக வெப்பமண்டல மற்றும் உலர்ந்த நிலப்பரப்புகளில் அதிகமாக வளர்ந்து காணப்படும். இது சுவையில் சிறிது கசப்பாக இருந்தாலும் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது.

தவசிக்கீரைக்கு எந்த கீரைக்கும் இல்லாத சிறப்பு உண்டு. இந்த கீரையில் ஏ,பி, பி2, சி, டி, கே போன்ற பல்வேறு விட்டமின்கள் நிறைந்து உள்ளன. இது மட்டுமின்றி நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துப் பொருட்களும் பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்களும் தவசிக்கீரையில் அடங்கியுள்ளன. இதனால், இதற்கு மல்டி வைட்டமின் கீரை என்ற பெயர்களும் உண்டு.

தமிழக மக்களிடையே மரபு சார்ந்த அறிவின் அடிப்படையில் இக்கீரையை சத்துணவு நிறைந்த மற்றும் மருத்துவ உணவாக தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவசிக்கீரையில் காணப்படும் மூலக்கூறுகள்:

அல்காய்டுகள் - வலி நிவாரணி, நச்சுக்களை அகற்றும் தன்மையுடையது.

நரம்பு மண்டல செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுகிறது.

ஃபிளேவோனாய்டுகள் - சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்டுகளாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

டானின்கள் - குடல் சீரமைப்பில் உதவுகிறது.

சாப்போனின்கள் - ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.

டெரிபினாய்டுகள் - ஊட்டச்சத்து சீரமைப்பிற்கு உதவுகிறது. காய்ச்சலை தடுக்கிறது.

பீனாலிக் அமிலங்கள் - செல்களின் செயல்பாட்டை ஊக்குவிக்குகிறது.

கிளைக்கோசைடுகள் - உயர் ரத்த அழுத்த சிகிச்சையில் உதவுகிறது.

தவசிக்கீரையின் மருத்துவ குணங்கள்:

நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல ஒரு தீர்வாக தவசிக்கீரை திகழ்கிறது. உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.தாதுக்கள் நிறைந்துள்ளதால் உடல் வலிமையை உறுதிப்படுத்த உதவுகிறது. மேலும் மூட்டுவலி, தசைவலி போன்றவற்றை தடுக்கிறது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதிலும் தவசிக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது.

விட்டமின்கள் அதிகமாக தவசிக்கீரையில் உள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை உயர்த்துவதற்கு பயன்படுகிறது. இதன்மூலம் ரத்த சோகை பிரச்சனையை தடுக்கலாம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் சார்ந்த பிரச்னைகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பிரச்னைகள், முடி உதிர்தல் போன்ற பல பிரச்னைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக விட்டமின் சி செறிந்து இக்கீரையில் காணப்படுவதால் தோல் நோய்களை தடுக்கவும், சருமப் பொலிவையும் மேம்படுத்தவும் உதவுகிறது.

நரம்புத்தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும். அதிக அளவில் புரதச்சத்து உள்ளதால் உடலும், தசையும் உறுதி பெறும்.உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது. சிறுவர்களின் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முதியோர்களின் எலும்பு தேய்வு,சுண்ணாம்பு பற்றாக்குறையை சீர் செய்யும். கண் பார்வையை கூர்மையாக்கும். உடல் களைப்பு, அசதியை நீக்கும். தவசிக்கீரையை அடிக்கடி உட்கொண்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்தவசிக்கீரை சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு மட்டுமின்றி, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்க உதவுகிறது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்திட உடல் குளிர்ச்சி பெறும்.கண்களில் ஏற்படும் நீர்வடிதல், மாலைக்கண் போன்ற குறைபாடுகளை நீக்கும்.

பயன்படுத்தும் முறைகள்

தவசிக்கீரையை சாம்பார், துவையல், சட்னி மற்றும் அடை என தயாரித்து உட்கொள்ளலாம். மேலும், குறைந்த எண்ணெய் மற்றும் உப்புடன் சேர்த்து வேக வைத்து இரவு உணவிலும் சேர்க்கலாம். இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைகரண்டி சாறுடன் இதே அளவு தேன் சேர்த்து அருந்த உடல் வளர்ச்சி பெறும்.குழந்தைகளுக்கான சளி தீர ஒரு ஸ்பூன் அளவுக்கு, தவசிக்கீரை இலைச் சாற்றை எடுத்து, சம அளவு தேனுடன் கலந்து சாப்பிடக் கொடுக்க சளித் தொல்லை தீரும்.தவசிக்கீரையை இரண்டு மிளகுடன் சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், ஒற்றைத் தலைவலி காணாமல் போய் விடும்.

இக்கீரையை பச்சையாக மென்று சாப்பிட வாய்ப்புண் உடனடியாகக் குணமாகும். இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் காணப்படுவதால், பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும்.தவசிக் கீரை இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர்வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.

தவசிக்கீரையை அரைத்து சாறுபிழிந்து காலையும்

மாலையும் குடித்து வந்தால், ஆஸ்துமா நோய் மறையும்.

இதன் இலைகள் இனிப்புத் தன்மை கொண்டதால்,

பச்சையாகவோ அல்லது சாறு எடுத்தும் உண்ணலாம்.

மற்ற கீரைகளைப்போல நறுக்கி, வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி பொரியலாகவும் சாப்பிடலாம். பருப்பு சேர்த்து வேக வைத்து கடைந்து, துவையலாக அரைத்தும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். துவரம்பருப்போடு சேர்ந்து கீரை வடையாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தவசிக்கீரை தனது அற்புதமான மருத்துவதன்மையால் நம் உணவுப் பண்பாட்டிலும், சித்த மருத்துவத்திலும் முக்கிய பங்கு விகிக்கிறது. மேலும் தவசிக்கீரை கொண்டுள்ள ஊட்டச்சத்தின் காரணமாகவும் மற்றும் மருத்துவ குணங்களுக்காகவும் மிகவும் பாராட்டப்பட வேண்டிய கீரை வகைகளில் ஒன்றாக உள்ளது.

பாடல்

தவசிக் கீரை தகுரம் தீர்க்கும்,

நரம்பு வலிமை நாடும் மருந்து,

கசப்பு சுவை உடம்பைச் சீர்க்கும்,

கந்தர் அருளால் நஞ்சை நீக்கும்,

நாடி சுழற்சி நன்மை தருவாள்,

நவகிரகங்கள் நடக்க வைக்கும்.