Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாய் துர்நாற்றம் போக்க எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வாய் துர்நாற்றம் உள்ள ஒரு நபரிடம், அவருக்கு நெருக்கமானவர்களே, அருகில் அமர்ந்து பேசத் தயங்குவார்கள். சுத்தமாக பல் துலக்கிய பின்னரும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதன் காரணம் என்ன?

வாய் அடிக்கடி வறண்டு போவது `சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும்.

அதுபோன்று இறந்த செல்களை தோல் தானாகவே வெளியேற்றுவதுபோல், பல்லால் வெளியேற்ற இயலாது. பல்லை தினமும் சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். பல் பராமரிப்பில் கவனக்குறைவாக இருந்தால், வெளியேற்றப்படாத பாக்டீரியாக்கள் பல்லின் மேல் படலமாகப் படிந்துவிடும். இது `பற்காரை’ எனப்படும். இதுவும் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையும்.

மேலும், அல்சர், குடல்புண், ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு, பல் சொத்தை, சர்க்கரைநோய், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் பிரச்னை உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். இதிலிருந்து விடுபடவும், நிரந்தர தீர்வு காணவும் எளிய வழிகள் என்னவென்று பார்ப்போம்:

காலை, இரவு என இரு வேளையிலும் பல் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். உணவு மற்றும் தின்பண்டங்கள் சாப்பிட்ட பின் நன்கு வாய் கொப்பளிக்கவும்.வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் கொண்டு ஆயில்புல்லிங் செய்யலாம்.

தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள், தானியங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு உண்டபின் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வருவது வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபட வழிவகுக்கும்.

ஒன்றிரண்டு மிளகை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் உமிழ்நீரை சிறிது சிறிதாக விழுங்கி வர, வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.

சாப்பிட்ட பின்பு ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம். ஒரு ஸ்பூன் சோம்பையும் வாயிலிட்டு சுவைக்கலாம்.

தொகுப்பு: விஜயலட்சுமி