Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஷூ - சாக்ஸ் எது சரி? எது தப்பு?

நன்றி குங்குமம் டாக்டர்

வெறும் காலில், வயல் வரப்புகளில் காலாற நடந்த காலம் போய், செருப்பு அணிய ஆரம்பித்தோம். நம்முடைய தட்பவெப்பநிலைக்கு, காற்றோட்டமாக இருக்கும் காலணிகளுக்குப் பதிலாக, இன்று நகர்ப்புறங்களில் மிக முக்கியமான டிரெஸ் கோடாகவே மாறிவிட்டது ஷூ அணிவது. அலுவலக வாசலில் நிற்கும் காவலர் முதல் சி.இ.ஓ வரை இன்று அனைவருமே ஷூ அணிகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் குழந்தைகள், காவலர்கள், மார்க்கெட்டிங் பணிக்காக வெயிலிலும் மழையிலும் அலைபவர்கள் எனப் பலதரப்பினரும் ஷூ அணிகிறார்கள். பெரும் கட்டுமானப் பணியில் உள்ளவர்கள்கூட கட்டாயம் ஷூ அணியவேண்டி இருக்கிறது.

சிலர், காலையில்வீட்டை விட்டுக் கிளம்பும்போது அணிந்தால், இரவு வீடு திரும்பும்வரை அதைக் கழற்றுவதே இல்லை. இன்னும் சிலர் துவைக்காத சாக்ஸுடன் அலுவலகத்தில் நடமாடி, அனைவரையும் முகம் சுளிக்க வைப்பார்கள். இளைஞர்கள் சிலர், ஸ்டைல் எனக் கருதிக்கொண்டு சாக்ஸ் போடாமல் ஷூவை மட்டும் மாட்டிக்கொண்டு சுற்றுகிறார்கள். இவை எல்லாம் சரியான பழக்கங்கள்தாமா? ஷூ அணிவதால், உடலுக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? யார் யார் எல்லாம் ஷூவைத் தவிர்க்க வேண்டும்?

ஷூ, சாக்ஸ் நல்லதா?

*சாக்ஸில் கெட்டியானது, மெல்லியது, பருத்தியால் ஆனது, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பிரத்யேகமானது எனப் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. கெட்டியானவற்றைக் குளிர்காலத்தில் அணியலாம். மெல்லியவை குழந்தைகளுக்கு ஏற்றவை. பருத்தியால் ஆனவை கோடைக்கு ஏற்றவை. வெரிக்கோஸ் வெயின் பிரச்னை, சர்க்கரை நோய் போன்றவற்றுக்காகப் பிரத்யேகமான சாக்ஸ்கள் பரிந்துரைக்கப் படுகின்றன.

*வெயில் காலத்தில், பாதங்களின் வியர்வையை சாக்ஸ் உறிஞ்சிவிடும். குளிர் காலத்தில், உங்கள் கால்களை அளவுக்கு அதிகமான குளிர்ச்சியில் இருந்து காக்கும் பொறுப்பும் சாக்ஸ்களுடையதுதான். 50 சதவிகிதக்குளிரை சாக்ஸ் தடுக்கும் என்பது ஓர் ஆய்வின் முடிவு.

*கால் பாதங்களில் வியர்க்கும்போது உருவாகும் பூஞ்சைத் தொற்றுகளிடம் இருந்து சாக்ஸ்கள் பாதங்களைப் பாதுகாக்கும். தொடர்ந்து சாக்ஸ் அணிபவர்களின் கால்களில் பாதவெடிப்புகள் இல்லாமல் இருப்பதைக் கவனிக்கலாம்.

*சர்க்கரை நோயாளிகள் தரமான ஷூ மற்றும் சாக்ஸ்கள் அணிந்து கால்களைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம். ஏனெனில், சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு, கால்நரம்புகளின் உணர்தல் திறன் குறைந்திருக்கும். கால்களில் காயம் ஏதும் பட்டாலும், உடனடியாக உணரமுடியாது. மேலும், சர்க்கரை நோயாளிகளின் உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகவும் தாமதமாகும். எனவே, சாக்ஸ், ஷூ அணிவதன் மூலம் சிறுசிறு சிராய்ப்புகள், காயங்களைத் தடுக்கலாம்.

எந்தச் சூழ்நிலையில் தவிர்க்க வேண்டும்?

*அளவு சரியில்லாமல் இருந்தால், நீங்கள் போட்டுக்கொள்ளும் ஷூக்கள் மற்றும் சாக்ஸ்கள் கால்களின் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். அதனால், காலுக்குப் பொருத்தமான ஷூ, சாக்ஸ் அணிவது நல்லது.

*சாக்ஸ் இல்லாமல் ஷூவை மட்டும் தனியே அணிய வேண்டாம். அப்படி அணிவது கால் விரல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். காயங்களையும் ஏற்படுத்தலாம்.

*அதிகமாக வியர்க்கும்போது, பாதங்களில் திரவங்கள் அதிகமாகச் சுரக்கும். இதனால், கால் கள் மரத்துப்போவது போன்ற உணர்வு ஏற்படும். அதனால் மிகவும் இறுக்கமான, கால்

களில் அச்சுப்படியும் சாக்ஸ்களை அணிய வேண்டாம்.

*எட்டு மணி நேரத்துக்கு மேல் ஷூக்களை அணிந்துகொண்டே இருப்பது நல்லது அல்ல. போதிய இடைவெளியில் கால்கள் காற்றோட்டமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

*சாக்ஸைக் கழற்றிய பின்னர் கால்களைக் கழுவி, ஈரமின்றித் துடைக்க வேண்டும்.

* சாக்ஸ்களைச் சுத்தமாகப் பராமரியுங்கள். காலில் படிந்துள்ள வியர்வையில் வெளியேறும் பாக்டீரியா, வெளியில் உள்ள பாக்டீரியா ஆகியவற்றால் சாக்ஸில் பூஞ்சைத்தொற்று ஏற்படுவதால்தான் அழுக்கான சாக்ஸில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தத் தொற்று, நகங்களில் நுழையும்போது சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

* ஈர ஷூ, சாக்ஸுடன் வெகுநேரம் சுற்றிக் கொண்டிருப்பதும் உடலுக்குத் தீங்கானதே. மழைக்காலங்களில் ஷூ, சாக்ஸ்கள் ஈரமாக நேர்ந்தால், அவற்றை உடனே மாற்ற வேண்டும். ஏனெனில், தேங்கிய மழைநீரில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் இருக்கும். இவை, நாம் புழங்கும் இடங்களில் பரவும்போது தொற்றுநோய்கள் உருவாகின்றன.

தொகுப்பு: சரஸ்