நன்றி குங்குமம் டாக்டர்
இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!
இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது
திறந்த இதய அறுவைசிகிச்சை என்பது ஒரு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, அறுவைசிகிச்சையின்போது மார்புச் சுவரைத் திறப்பது, மார்பக எலும்பை வெட்டுவது (ஸ்டெர்னோடமி - (sternotomy)) ஆகிய மருத்துவ நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சிறந்த அறுவைசிகிச்சை நிபுணர் இதய சிகிச்சையை எளிதாகச் செய்ய முடியும்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, வலியை நிர்வகிப்பது என்பது குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும். எந்தவொரு பெரிய அறுவைசிகிச்சைக்குப் பிறகும் வலியும் அசௌகரியமும் ஏற்பட்டால், உங்கள் நல்வாழ்வுக்காக நீங்கள் எடுக்க பல நடவடிக்கைகள் உள்ளன. உங்கள் உடல் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும்போது அது வலியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. மேலும் உங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான நம்பிக்கையை மீண்டும் பெற உங்களுக்கு உதவுகிறது.
இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு, வலி பல வகைகளாக உருவாகலாம். உங்கள் மார்புச் சுவரில் உள்ள கீறல், நீட்டப்பட்ட அல்லது நகர்த்தப்பட்ட தசைகளும் நரம்புகளும், பொது மயக்க மருந்து அளிக்கப்படும் போது பயன்படுத்தப்படும் சுவாசத்திற்கான குழாய்களால் கூட வலி ஏற்படலாம். வலி ஆழமான சுவாசத்தைக் கடினமாக்கும். உங்கள் இயக்கத்தைத் தடுப்பதுடன் குணம் அடைதலைத் தாமதம் ஆக்கும். ஆனால் சரியான சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பை மேற்கொள்ளும் போது வலி அதிகமிருக்கும்போது கூட, நீங்கள் எளிதாக சுவாசிக்க முடியும், நன்றாக தூங்க முடியும். மேலும் சாதாரண செயல்பாடுகளுக்குத் திரும்புவதை விரைவுபடுத்த முடியும்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருக்கும்போதும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் வலியை நிர்வகிப்பதில் பின்வரும் அம்சங்கள்
முக்கியமானவை:
1. மருந்துகள்
ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் [Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs)] அல்லது அசெட்டமினோஃபென் [acetaminophen] லேசானது முதல் மிதமான வலிக்கு மருந்தாகும். அத்துடன் அறுவை சிகிச்சைக் கீறலைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கின்றன. டிராமடோல் [tramadol] போன்ற ஓபியாய்டுகள் [Opioids] மிதமானது முதல் கடுமையான வலிக்கு பரிந்துரைக்கப்படலாம். இவை சக்திவாய்ந்தவை.
ஆனால் மயக்கம் அல்லது மலச்சிக்கல் போன்ற அபாயங்களைக் கொண்டுள்ளன. எனவே இவை பொதுவாக ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. கடுமையான சூழல்களில் மயக்க மருந்துகள் அல்லது நரம்புகளின் வழியாக வலியுணர்வு கடத்தப்படுவதை தடுக்கும் செயல்முறைகள் அந்தப் பகுதியை மரத்துப்போகச் செய்து அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சில நாட்களுக்கு நிவாரணம் அளிக்கும். மருத்துவரின் அறிவுறுத்தலின்படி மருந்துகளை சரியாக, துல்லியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரிடம் பேசி நிவாரணம், பாதுகாப்பு ஆகியவற்றின் சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும். உங்கள் மருத்துவர் சூழலுக்கு ஏற்ப மருந்துகளின் அளவை மாற்றுவார் அல்லது மருந்துகளை மாற்றுவார்.
2. சுவாசம் மற்றும் இருமல் தொடர்பான பயிற்சிகள்
உங்கள் நுரையீரலில் நிமோனியா அபாயத்தை அதிகரிக்கக்கூடிய திரவம் படிவதைத் தடுக்க ஆழ்ந்த சுவாசமும், லேசான இருமலும் மிக முக்கியம். இந்தப் பயிற்சி சுவாசக் காற்றுக்கான பாதைகளை தெளிவாக வைத்திருக்கும். இந்தப் பயிற்சிகள் முதலில் சில அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அவை நுரையீரல் செயல்பாட்டை மீட்டெடுக்கவும் மார்பு இறுக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
3. உடல் செயல்பாடு உங்கள் மருத்துவர் ஒப்புதல்
அளித்தவுடன், பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஆரம்பநிலை இயக்க செயல்பாடுகள், அறுவை சிகிச்சைக்காக வெட்டப்பட்ட பகுதியில் வலி மற்றும் உடலில் இயக்க செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முடியாமல் செய்யும் விறைப்பைக் குறைக்க உதவுவதுடன் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
அத்துடன் ரத்த உறைவு அபாயத்தையும் குறைக்கிறது. அமர்வது, படுக்கையில் இருந்து நாற்காலிக்கு மாறுவது, ஏதேனும் உதவியுடன் நடப்பது போன்ற செயல்பாடுகள் படிப்படியாக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றன. நீங்கள் படுத்திருக்கும்போது, உங்கள் கைகள் மற்றும் தோள்களைத் தாங்க தலையணைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடலின் மேல் பகுதியை ஒரு வசதியான நிலையில் வைத்திருப்பது உங்கள் மார்புக் கீறலைச் சுற்றியுள்ள இறுக்கத்தைக் குறைக்கும்.
4. காய சிகிச்சையும் பராமரிப்பும்
உங்கள் அறுவை சிகிச்சைக் கீறலை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது தொற்றுநோயைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், வலியையும் எரிச்சலையும் குறைக்கிறது. கீறல் குணமடையும் போது, அசௌகரியம் படிப்படியாகக் குறையும். அது மோசமடைந்தால், உடனடி கவனம் தேவைப்படும் சூழ்நிலை உருவாகலாம்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் இயற்கை முறைகளைப் பயன்படுத்தும்போது வலியைக் குறைப்பதில் பலன் ஏற்படுவதாகப் பலர் கூறுகிறார்கள். இதில் குளிர் மற்றும் சூடான ஒத்தட நடைமுறைகளின் பயன்பாடு அடங்கும். சிகிச்சைக்காக உண்டான கீறல் பகுதியில் துணியில் சுற்றப்பட்டு, மெதுவாக குளிர் ஒத்தடம் கொடுக்கும் போது, அது வீக்கத்தையும் மந்தமான உணர்வுகளையும் குறைக்கும். சில நோயாளிகள் தசைகளை தளர்த்தவும் வலியைக் குறைக்கவும் சூடான ஒத்தட முறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
உடல் இயக்கம் மற்றும் மனம் ஆகியவற்றை செளகரியமாக உணரச்செய்யும் ரிலாக்ஸ்சேஷன் டெக்னிக்குகள் Relaxation techniques] மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்கி வலி உணர்வைக் குறைக்கின்றன. படிப்பது, பிடித்த படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது, அல்லது அன்புக்குரியவர்களுடன் பேசுவது, உங்கள் கவனத்தை வலியிலிருந்து திருப்ப உதவும்.. நம் மனமும் உடலும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் சில நிமிட கவன மாற்றம் கூட நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
நாம் வலியால் அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வலி தாங்க முடியாததாக உணர்ந்தால், திடீரென்று அதிகரித்தால், அல்லது எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் வலி நீடித்தால், உங்கள் செவிலியர் அல்லது மருத்துவரிடம் உடனடியாகத் தெரியப்படுத்துங்கள். வலி என்பது அகநிலை சார்ந்தது. ஒருவருக்கு ‘லேசான வலியாக’ இருப்பது மற்றொருவருக்கு ‘தாங்க முடியாத வலியாக’ இருக்கலாம். நீங்கள் வலியை ஒரு எளிய முறையில் அளவிட்டு வெளிப்படுத்தலாம்.
0 என்றால் வலி இல்லை என்ற அளவில் தொடங்கி 10 என்றால் கற்பனை செய்ய முடியாத மோசமான வலி என்பது வரை வலியை மதிப்பிடலாம். இது மருத்துவருக்கு மருந்தை தேர்வு செய்து உங்களுக்கு பரிந்துரைக்க உதவும். நீங்கள் படிப்படியாக குணமடையும்போது, வலியைப் பற்றிய உங்கள் கருத்துதான் மருந்துகளின் அளவை அதற்கேற்ப, மெதுவாகக் குறைத்துப் பரிந்துரைக்க மருத்துவருக்கு உதவுகிறது.
அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பெரும்பாலான அசௌகரியங்கள் சீராக மேம்படும் அதே வேளையில், சில அறிகுறிகளுக்கு உடனடியான அவசர சிகிச்சை தேவைப்படும். இந்த அறிகுறிகளில், கீறல் அல்லது மார்பைச் சுற்றி மருந்துகளால் நிவாரணம் பெற முடியாத கடுமையான எரிச்சலுடன் கூடிய வலி, திடீர் மூச்சுத் திணறல் அல்லது மார்பு அழுத்தம், குறிப்பாக தலைச்சுற்றல் அல்லது வியர்வையுடன் அழுத்தம், 100.4° ஃபாரன்ஹீட்டுக்கு (38° செல்சியஸ்) மேல் காய்ச்சல், கீறல் உள்ள இடத்தில் அதிகப்படியான வீக்கம், சிவப்பு நிறத்தில் தோற்றமளிப்பது,, கதகதப்பாக இருப்பது அல்லது ரத்தம் வெளியேற்றுவது ஆகிய அறிகுறிகள் இதில் அடங்கும். இது தொற்றுநோய் பாதிப்பைக் குறைக்கலாம்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு சில வாரங்களில், வலி லேசான வலியாகக் குறையும். இதற்கு சக்தி வாய்ந்த வலி நிவாரணிகள் தேவையில்லை. மென்மையான உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சிகள் போன்றவை அன்றாட வாழ்க்கை முறைக்குத் திரும்புவதற்கும், விரைவில் குணமடைவதற்கும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உதவுகின்றன. இருப்பினும், ஒவ்வொன்றில் இருந்தும் மீள்வது என்பது ஒவ்வொருவருக்கு அவர்களின் தனிப்பட்ட நிலைமையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
சிலர் ஆறு வாரங்களுக்குள் வாகனம் ஓட்டவோ அல்லது வேலைக்குத் திரும்பவோ தயாராக இருப்பதாக உணரலாம். மற்றவர்களுக்கு அதிக காலம் தேவைப்படலாம். உங்கள் உடல் சூழலைக் கவனிப்பது, மருத்துவரின் தொடர் ஆலோசனைகளைப் பெறுவது, குணமடைதலை விரைவுபடுத்த ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது ஆகியவை முக்கியம். இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலியை நிர்வகித்து அதைக் குறைப்பது என்பது உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வதற்கும், உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், உங்கள் இதயத்தை குணப்படுத்துவதற்கும் உதவும். அதோடு மட்டுமல்ல, உங்கள் முழு ஆளுமையையும் மீட்டெடுப்பதற்கு அது அடித்தளத்தை அமைக்கும்!