நன்றி குங்குமம் தோழி
கண்: கண்களில் எரிச்சல், வீக்கம் வந்தால், அவைகளில் வெற்றிலை சாற்றுடன், தேனும் கலந்து 2 சொட்டுகள் விட்டால் போதும். அருகம் புல் சாறெடுத்து, அதனை கண் இமைகளில் மட்டும் தடவிட நல்ல குணம் தெரியும்.கண் நோய்கள் எது வந்தாலும் ஆலம் பால், பச்சைக் கற்பூர பொடி இரண்டையும் கலந்து கண்களில் மை போல இட்டுக் கொள்ள வேண்டும்.
உடல் நாற்றம்: உடலில் துர்நாற்ற பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் வில்வ மரத்திலிருந்து பசுமையான இலைகளை பறித்தெடுத்து, அவைகளை நன்கு கசக்கி, சாறெடுத்து உடலில் பூசிவிட நாற்றம் பறந்தோடிவிடும்.
ஒற்றைத் தலைவலி: இந்த தலைவலி பல பேருக்கு வர வாய்ப்புண்டு. அதற்கு மிளகை நெய்யில் அரைத்து சாப்பிட படிப்படியாய் அவ்வலி அகன்று போகும்.
மருதாணி இலை சாற்றை நெற்றியில் பூசிவிட்டால் போதும்.
நீர்க்கடுப்பு: காலையில் கற்றாழைச் சாறு குடித்து வர நீர்க்கடுப்பு மறையும். வெள்ளை முள்ளங்கியை பச்சையாகவோ, சாலட் செய்தோ சாப்பிட்டால் சிறுநீர் கோளாறு அகலும்.
நெல்லிச் சாறில் ஏலக்காயை பொடி செய்து கலந்து குடிக்க அது நீங்கி விடும். பச்சைக் கீரையை சாறெடுத்து பருக நீர்க்கடுப்பிலிருந்து விடுதலை கிட்டும். ஒரு
டம்ளர் கரும்புச் சாறு குடிக்க நீர்க்கடுப்பு விலகி விடும்.
மூட்டு வலி: இப்போதெல்லாம் 45, 50 வயதைக் கடந்தவர்கள் கூட மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். அது குணமாக கருப்பு நிற எள்ளை ஒரு டீஸ்பூன் எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து விட்டு, காலையில் அதை விழுதாக அரைத்து சில தினங்கள் சாப்பிட வேண்டும். கொஞ்சம் எள் எடுத்து பாலில் வேகவைத்து விட்டு பின்பு அரைத்து மூட்டுக்களில் பூசலாம். கடுகு எண்ணெயை வலி உள்ள மூட்டுப் பகுதியில் தடவிட உடனடி நிவாரணம் கிட்டும். அமுக்கிரா கிழங்கு இலைகளை நெருப்பில் வாட்டி விட்டு மூட்டுக்களில் வைத்துக் கட்ட வேண்டும்.
தொகுப்பு: கீதா சுப்பிரமணியன், கும்பகோணம்.