Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வெறிநாய்க் கடி… அசட்டை வேண்டாம்… ராபிஸ் ரெட் அலெர்ட்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலக ராபிஸ் நாள் செப். 28

நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றிலும் 14 ஊசிகள் போடுவது தொடர்பாக எண்ணற்ற காமெடிகள் திரைப்படங்களிலும் பத்திரிகைகளிலும் வந்துவிட்டன. அவை பார்ப்பதற்குக் காமெடியாகத் தோன்றுவதாலோ என்னவோ இன்னமும் நாய்க்கடியை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நாய்க்கடி குறிப்பாக வெறிநாய்க் கடி மிக ஆபத்தான, உயிரைப் பாதிக்கும் விஷயங்களில் ஒன்று. வெறிநாய்க் கடிக்கு ஊசி போடாமல் விடும்போது அது ராபிச் என்ற உயிர் பலி நோயாய் உருவெடுக்கிறது. உலக அளவில் மிக மோசமாக மனித உயிர்களைக் கொல்லும் நோய்களில் ரேபிஸ் முக்கியமானது என்கிறது உலக நல மாமன்றம்.

ராபிஸ் உயிர் பலி எண்ணிக்கையில் ஆசிய அளவில் இந்தியா முதலிடத்தையும், வங்கதேசம் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. இந்தியாவில் வெறி நாய்க் கடியால் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.ராபிஸ் நோய் தாக்கினால் மரணம் நிச்சயம். ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணத்தை முற்றிலும் தடுக்கலாம். நாய்களுக்கு வரும் இந்த நோய் ராபிஸ் என்றும் மனிதர்களுக்கு ஹைட்ரோ போபியா என்றும் அழைக்கப்படுகிறது.

தடுப்பூசி

முதலாவதும் முக்கியமானதும், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அவசியம் ஏ.ஆர்.வி. தடுப்பூசி போட வேண்டும். 3 மாதக் குட்டியாக இருக்கும்போது முதல் ஊசியும், 6 மாதமாக இருக்கும்போது இரண்டாவது ஊசியும், தொடர்ந்து ஆண்டுதோறும் ஏ.ஆர்.வி. போட்டுவர வேண்டும்.வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டரின் நினைவு நாளான செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறி நோய் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு முதல் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

முதலுதவி என்ன?

*கடிபட்ட இடத்தில் ஏற்பட்ட காயத்தை நீரும் சோப்பும் இட்டுக் கழுவ வேண்டும்.

*ஏதாவது ஒரு கிருமி நாசினி (டிஞ்சர் அயோடின்) அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.

*காயத்துக்குக் கட்டு போடக்கூடாது.

அறிகுறிகளும் சிகிச்சையும்

வெறி நாய்க்கடிக்கு ஆளாகும் நோயாளிகளுக்குத் தண்ணீரைக் கண்டால் வலிப்பு, உடல் நடுக்கம் ஏற்படும். லேசான காற்று, ஒலிகூட வலியை உண்டாக்கி விடும்.வெறி நாய் கடித்தால் தற்போது தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போட வேண்டியதில்லை. Vero Rab என்னும் மருந்தை ஆறு முறை ஊசி மூலம் சதைப் பகுதியில் செலுத்திவிட்டால் போதும். தடுப்பூசி போட்டுக்கொண்ட நேரத்தில் உணவுப் பத்தியம் எதுவும் கிடையாது. கர்ப்பிணிகளும் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.

10 நாட்கள் ஏன்?

வெறிநாய் கடித்தவுடன் 10 நாட்கள் அந்த நாய் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது ஏன் தெரியுமா? நாயின் உமிழ்நீரில் இக்கிருமி பெரும்பாலும் காணப்படும். நோயின் குறிகுணங்கள் நாய்க்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அதன் உமிழ் நீரில் இக்கிருமி காணப்படுகிறது. உமிழ் நீரில் நோய்க்கிருமி வந்த பிறகு, சாதாரணமாக ஒரு வாரம்தான் அக்கிருமி உயிருடன் இருக்கும்.

வெறிநாய் என்பதால் 10 நாட்களில் இறந்துவிடும் என்றில்லை. சில சந்தர்ப்பங்களில் அதைத் தாண்டி பல மாதங்களுக்கு நாய் உயிருடன் இருந்தது உண்டு. அதனால் வெறி பிடித்த எந்த நாய் கடித்தாலும் ஏ.ஆர்.வி. ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

நாயைக் கொல்லலாமா?

கடித்த வெறி நாயை உடனே அடித்துக் கொல்லும் பழக்கம் சில இடங்களில் உண்டு. இது முற்றிலும் தவறு. கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வது நல்லது. இறந்த நாயின் மூளையில் Nigri Bodies உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம்.

தொகுப்பு: சரஸ்