நன்றி குங்குமம் தோழி
மனம் பேசும் நூல்
நவீனத்துவ மேதையும், சிறந்த நாவலாசிரியரும், பிரேசில் இலக்கியத்தில் மிக முக்கியமானவரும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் உட்பட பல்வேறு இலக்கிய படைப்புகளை வழங்கியவருமான மச்சடோ டி ஆஸிஸ் எழுதிய ‘மனநல மருத்துவர்’ நூல் மிகவும் கவனம் பெற்ற ஒரு நூல்.
வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்ப்பு செய்யாமல், எழுத்தாளர் எழுதியுள்ள வாக்கியங்களின் அர்த்தமும், செறிவும் தமிழில் நேர்த்தியாய் இருக்க வேண்டும் என்கிற கவனத்தோடு, சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார் திருமிகு ராஜகோபால்.மனநல மருத்துவர் என்ற வரையறையில் நின்று எழுத்தாளர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை இரண்டே வார்த்தைகளில் இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
கதையின் நாயகன் ‘சீமோன் பக்காமார்த்தே’ ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் போன்ற நாடுகளில் மிகவும் புகழப்பட்ட சிறந்த மருத்துவராய் இருக்கிறார். அதனால் போர்ச்சுகல்
அரசர் அவரை முழுவதுமாக அந்த நாட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கச் சொல்கிறார். ஆனால், சீமோன் பக்காமார்த்தே தன் சொந்த நாடான பிரேசிலில் உள்ள இத்தாகூயில் மட்டுமே தனது மருத்துவ சேவையை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியாய் இருக்கிறார்.
மருத்துவத்தில் சீமோன் பக்காமார்த்தே சிறந்த ஆய்வாளர் என்பதால், தான் படித்த படிப்பு மற்றும் ஆய்வின் மூலம், சிகிச்சை முறையினை மாற்றி அமைத்து, தனது சொந்த ஊரான இத்தாகூய் வந்து, உள்ளூரில் வசிக்கும் விதவைப் பெண் டோனா எவரிஸ்தா என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறார். சீமோன் பக்காமார்த்தேயின் உறவினரான அவரது மாமா, ‘அழகான பெண்ணைத் திருமணம் செய்யாமல், ஏன் இந்தப் பெண்ணை திருமணம் செய்தாய்’ எனக் கேட்டதற்கு, பக்காமார்த்தே, ‘இவளுக்கு செரிமான சக்தி நன்றாக உள்ளது. கூர்மையான பார்வையும் இருக்கிறது. ரத்த அழுத்தம் இல்லை. எனவே, திருமணம் செய்தேன்’ என்கிறார்.
மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் வழியே, மொத்தக் கதையிலும் மனிதர்களை எந்தளவுக்கு மருத்துவ ரீதியாய் ஆய்வு செய்கிறார் என்பதை தொடக்கத்திலேயே நமக்கு அறிமுகப்படுத்தி விடுகிறார் நூலின் ஆசிரியர்.தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் சிகிச்சை, உளமருத்துவம் சார்ந்து மாறத் தொடங்க, ‘ஆன்மாவின் ஆரோக்கியமே ஒரு மருத்துவரின் இறுதி லட்சியம்’ என நண்பர்களிடம் கூற ஆரம்பிக்கிறார். நண்பர்களும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இத்தாகூய் நகரம் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களை கவனிக்காமல் விடுகிறது என்று நம்பும் மருத்துவர், வன்முறை மனோபாவம் கொண்டவர்கள் வீட்டில் அடைக்கப்படுகிறார்கள், அமைதியானவர்கள் தெருவில் நடமாடுகிறார்கள் என்றும் கூறுகிறார். மேலும், மனநல சிகிச்சைக்கு, நகரசபைதான் பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்பதற்காகச் செல்கிறார்.
அனைத்திற்கும் மக்கள் வரி செலுத்திவரும் நிலையில், இவரின் வாதத் திறமையால், நகர சபையில் பேசி நகரசபை பணம் அளிக்க ஒப்புதல் பெறுகிறார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன், இத்தாகூய் நகரில் மனநலக் காப்பகம் ‘கிரீன் ஹவுஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்படுகிறது.ஒரு மனிதன் தன்னுடைய பகுத்தறிவை இழக்கும் போதுதான் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு வழுக்கிச் செல்கிறான் என்ற மருத்துவர், கிரீன் ஹவுசின் முக்கியப் பணியாக, ‘மனிதர்களின் பித்து நிலையை ஆழமாக ஆய்வு செய்வது, அதன் நிலையை புரிந்து கொள்வது, வகைப்படுத்துவது’ எனச் செயல்படுகிறார்.
இவர் ஆய்வில் இருக்கும் போதே, இவரின் மனைவி, ‘சீமோன் பக்காமார்த்தே தன்னைக் காதலிக்கவில்லை என்றும், தனக்கு எதுவுமே இதுவரை செய்யவில்லை’ என்றும் கூறி சண்டை போடுகிறார். சீமோன் வேறு வழியின்றி, மனைவி ஆசைப்படும் விஷயங்களை செய்து கொடுத்து, அவள் சந்தோஷமானதையும் குறித்துக் கொள்கிறார்.சீமோனைப் பொறுத்தவரை, தனது நேரத்தை மனைவி விரயம் செய்ய வைப்பதாக நம்புகிறார். நிகழ்காலத்தின் மீதும், பொருட்களின் மீதும், அவரது மனைவி தனது காதலை நிர்ணயம் செய்கிறார். ஆனால், சீமோனோ, தன் எதிர்கால கனவின் மீது கவனத்தை குவித்து செயலாற்றிக் கொண்டே இருக்கிறார்.
‘வெகுஜன மக்களின் பொறாமை, பழிக்குப்பழி, கடவுளின் தண்டனை என்ற ரீதியில் மனிதர்கள் செயல்படும் போது, அரசின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்’ என்றவர், யாரெல்லாம் மனித உணர்வுகளை அதீதமாக வெளிப்படுத்துகிறார்களோ, அவர்களை கிரீன் ஹவுசில் சிகிச்சைக்கு கொண்டுவந்து சேர்க்க முயற்சிக்கிறார். இந்நிலையில் இத்தாகூய் நகரில் வசிக்கும் பாதி பேர் ஊரை விட்டு ஓட ஆரம்பிக்கிறார்கள். சிலர் நாங்கள் நிதானமானவர்கள் என்று கூறுகின்றனர். சிலர் சீமோனுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்குகிறார்கள்.
மருத்துவர் சீமோனை நாடு கடத்தவும் திட்டமிடப்படுகிறது. ‘கிரீன் ஹவுஸ் ஒழிக... இந்த கொடுங்கோல் ஆட்சி ஒழிக’ என்று மக்கள் மெல்ல மெல்ல குரல் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். இப்படியாக குரல் கொடுப்பவர்களையும் சிறைப்பிடித்து, அரசாங்கம் கிரீன் ஹவுசில் ஒப்படைக்கிறது.‘இங்கே, விஞ்ஞான முறைப்படிதான் சிகிச்சை நடக்கிறது என்றும், விஞ்ஞானம் தீவிரமாக இங்கே செயல்படும். எனவே மக்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என மருத்துவர் சீமோன் கூறுகிறார். அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன், நிதானத்தைக் கையாள வேண்டும் என்று மக்களிடம் நிரூபிக்க முயன்றவர் விருப்பமுள்ளவர்கள் மட்டும் கிரீன் ஹவுசில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நம் மக்களின் இயல்பான குணங்களை எல்லாம் மனநோய் என்று மனநல மருத்துவர் கூறுவதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் எந்த மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்பதை இந்நூல் நமக்குப் புரிய வைக்கிறது. அதிலும் குறிப்பாய், நம் சமூகம் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், அனைவருமே பைத்தியம் என்று மருத்துவர் நம்மைப் பார்த்துக் கூறுவது போன்றும் இருக்கிறது.மனநல மருத்துவர் வசிக்கும் இச்சமூகத்தில் யார் யாரெல்லாம் பைத்தியம், யார் யாரெல்லாம் பைத்தியமில்லை என்பதை வரையறை செய்ய முயற்சித்திருப்பதை, இந்தப் புத்தகத்தின் நோக்கமாக எழுத்தாளர் கூறுகிறார்.
“மனிதப்பிறவி என்பதால் மானுடத்தைப் புரிந்துகொள்வது, ஓர் எல்லைக்குள் உட்பட்டதாகவே இருக்கிறது. எனினும் தெய்வீக அருளைப் பெறாத மனிதப் பிறவிகளைக் காட்டிலும், நான் உண்மைக்கு வெகு நெருக்கமாக வந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்” என்ற டேனியல் பால் ஷ்ரபரின் வாசகங்கள், மச்சடோவின் படைப்புகளுக்கு மிகவும் பொருத்தமானவை என்பதை நினைவு கூறுகிறேன்.மனம் சார்ந்த வேறொரு நூலோடு அடுத்த இதழில்...
தொகுப்பு: காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர்