நன்றி குங்குமம் தோழி
பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு உரித்தான முக்கியமான சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள், அறிகுறிகள் பற்றி விவரிக்கிறார் சிறுநீரகவியல் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் வத்சன்.
‘‘புரோஸ்டேட் சுரப்பிக்கு விந்தணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்குள்ளது. விந்தணுக்களின் இயக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு இந்த சுரப்பி அவசியமானது. ஆனால், வயசாகும் போது அதன் செயல்பாடுகள் குறையத் துவங்கும். விளைவு அந்த சுரப்பி வீக்கமடையும். இது பொதுவாக வயதாகும் போது ஆண்கள் சந்திக்கும் பிரச்னைதான்.
ஆனால், ஒரு சிலருக்கு அது புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. பொதுவாக புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடைந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். சில சமயம் சிறுநீர் கழிக்க சிரமமாகவும் இருக்கும். சிறுநீர் கசிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவை வீக்கத்திற்கான அடிப்படை அறிகுறிகள் என்றாலும், புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் பாதிப்பு வந்தாலும் இதே அறிகுறிகள் தோன்றும். சிறுநீர் கழிப்பதில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும்.
புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். PSA Prostrate Specific Antigen, டியூமர் மார்கர் பரிசோதனை. இதன் எண்ணிக்கை நான்கை விட குறைவாக இருந்தால் புற்றுநோய் பாதிப்பில்லை. அதிகமாக இருந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு இருக்கக்கூடும். இந்த ஆய்வினை 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக செய்வதால், புற்றுநோய் பாதிப்பினை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சையினை மேற்கொண்டால், எளிதில் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமாகலாம்.
அதாவது, புற்றுநோய் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் இருந்தால் சிகிச்சையால் முற்றிலும் குணமாக்கி விடலாம். ஆனால், அதுவே மூன்று மற்றும் நான்காம் நிலையில் இருந்தால், நோயினை குணப்படுத்த முடியாது, பரவாமல் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அந்த நிலையில் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி சிகிச்சை முறைகளை கடைபிடிப்பது அவசியம்.
புரோஸ்டேட் வீக்கம் புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால், MRI, PET ஸ்கேன் பரிசோதனை மற்றும் பயாப்சி செய்து, ேநாயின் தாக்கத்தினை கண்டறியலாம். புற்றுநோய் 3ம் நிலையில் இருந்தால் சுரப்பியில் மட்டுமே பரவி இருக்கும். ஆனால், அதுவே அடுத்தக்கட்ட நிலையை அடைந்துவிட்டால் அது மற்ற இடங்களிலும் பரவ வாய்ப்புள்ளது. அதனை தடுக்க ரோபாடிக் அறுவை சிகிச்சை மூலம் சுரப்பியினை நீக்கிவிடலாம்.
அறுவை சிகிச்சையின் தேவை இல்லாத பட்சத்தில் ரேடியேஷன் தெரபி உதவும். அதுவே முதல் இரண்டு நிலை என்றால், சிகிச்சை மூலம் எந்தவித பக்கவிளைவுகள் இல்லாமல் 98% குணப்படுத்தலாம். சிகிச்சையின் போது உடல் ேசார்வடையும். அதை பொருட்படுத்தாமல் 3 மாசம் தொடர் சிகிச்சையினை கடைபிடித்தால் அவர்கள் முற்றிலும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். இவர்களுக்கு கீமோதெரபி கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்றவர் சிகிச்சையில் பின்பற்றும் முறைகளை விவரித்தார்.
‘‘புற்றுநோயின் தாக்கம் 3 அல்லது நான்காவது நிலையை அடைந்தால், ஹார்மோன் தெரபி கொடுப்போம். பிறகு ரேடியேஷன் அல்லது கீமோதெரபி சிகிச்சைகள் அளிப்பதால், நோயின் தாக்கம் பரவாமல் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையினை வாழலாம். புரோஸ்டேட்டில் 10 பேருக்கு வீக்கம் ஏற்பட்டால் 2 பேருக்கு அது புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. வாழ்க்கை முறை மாற்றம் அவசியம் என்று சொன்னாலும், பரம்பரையில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால் அது அடுத்த தலைமுறையினரை பாதிக்கக்கூடும்.
பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்டால் அவர்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். ஆனால், ஆண்களுக்கு வயதானாலும் விந்தணுக்கள் உற்பத்தியாகும். அவர்கள் இறக்கும் வரை இருக்கும்.
60 வயதிற்கு ேமல் உள்ளவர்கள் தாம்பத்திய உறவினை மேற்கொள்ள தவறுவதால், விந்தணுக்கள் வெளியேறாமல், சுரப்பியில் தங்கி புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 60 வயது மேல் உள்ளவர்கள் இல்லற வாழ்க்கையில் ஆக்டிவாக இருந்தால், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
இதற்கான அறுவை சிகிச்சை முறைகள் ரோபோட்டிக் மூலம் செய்யப்படுவதால், மூன்று நாட்களில் வீடு திரும்பிவிடலாம். இரண்டு மாதத்தில் முழுமையாக குணமடைந்து அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். புற்றுநோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டும். புற்றுநோய் வேகமாக பரவும் தன்மை கொண்டதால், அதன் நிலையை அறிந்து அதற்கான சிகிச்சை வழங்க வேண்டும்’’ என்றார் டாக்டர் வத்சன்.
தொகுப்பு: நிஷா