Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கிய வாழ்விற்கு முறையான உணவு மற்றும் யோகாசனம் சிறந்தது!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய பரபரப்பான வாழ்வியல் சூழலில் நமது அன்றாட உணவு மற்றும் உடல்நலம் சார்ந்த பல்வேறு ஆரோக்கியமான விஷயங்களில் அக்கறை கொள்வது அவசியமான ஒன்று. கோவிட் காலகட்டத்திற்குப் பிறகு ஆரோக்கியம் சார்ந்த கவனங்கள் மக்களிடையே நல்ல விழிப்புணர்வினை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. அனைவருமே உடல் மற்றும் மனநலத்தினை பேண வேண்டிய அவசியங்கள் குறித்தும் ஆரோக்கியமான வாழ்வினை அன்றாடம் தொடர வேண்டும் என்று நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

இதற்கு ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதோடு தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வந்தால் உடலும் மனதும் நன்றாக இருக்கும். நல்ல சத்தான உணவுகள், யோகா மற்றும் தியானம் சிறந்த ஆரோக்கியத்திற்கு அவசியம் என்கிறார் சென்னை விருகம்பாக்கத்தினை சேர்ந்த யோகா பயிற்சியாளரும் உணவு ஆலோசகருமான பிருந்தா.

‘‘நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஊட்டியில்தான். சிறு வயதிலிருந்தே ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்தது. திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து வெளியே சென்று என்னால் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. காரணம், என்னுடைய உடல் அதற்காக ஒத்துழைக்க மறுத்தது. என் உடலில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பின்னர் அதுவே எனது முழுநேர பணியாக மாறிவிட்டது’’ என்றவர் கடந்த இரு வருடங்களாக ‘சாய் யோகா சென்டர்’ என்ற பெயரில் பயிற்சி மையத்தினை ஆரம்பித்து யோகாசனம் மற்றும் டயட் குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

‘‘யோகா மீதிருந்த எனது ஆர்வம் காரணமாக டிப்ளமோ இன் யோகா படித்தேன். சில வருடங்களாக முறையான யோகா பயிற்சிகளையும் செய்து வந்தேன். அதன் பிறகு யோகாவை முழுநேர பணியாக செய்ய வேண்டும் என்று நினைத்து தற்போது பலருக்கும் யோகாவினை கற்றுத் தருகிறேன்.கர்ப்பிணி பெண்கள், குடும்பத் தலைவிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பலரும் யோகா பயிற்சி பெற்று வருகிறார்கள். தற்போது யோகாசனம் பயிற்சி குறித்த நன்மைகள் பற்றி பலருக்கும் போதுமான விழிப்புணர்வு இருக்கிறது.

யோகா கற்றுக்கொள்ள ஆர்வமுடன் முன் வருகிறார்கள். பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ துவங்கி இருக்கிறார்கள். தினமும் யோகாசன பயிற்சியுடன் முறையான உணவுப் பழக்கங்களையும் நல்ல உறக்கத்தினையும் தொடர்ந்தால் பல நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். யோகாவினால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மன நலனும் மேம்படுகிறது என்பதே உண்மை. இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக யோகாசனம் கற்றுத் தருகிறேன்.

நான் அடிப்படையில் உணவு ஆலோசனை நிபுணர். பிஎஸ்ஸி ஃபுட் சயின்ஸ் நியூட்ரிஷியன் மற்றும் ஃபுட் குவாலிட்டி கண்ட்ரோல் படித்துள்ளேன். சரிவிகித உணவு குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். ஆரோக்கியமான உணவுகளை எவ்வாறு உண்ண வேண்டும் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சம்பந்தமான தகவல்களை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். நிறைய காணொலிகளிலும் ஆரோக்கியமான சரிவிகித உணவு குறித்து பேசி வருகிறேன். என்னிடம் யோகா பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை பரிந்துரை செய்து வருகிறேன்’’ என்றவர், யோகாசனம் மட்டுமில்லாமல் கல்விக்கான தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள், ஓவியப் பயிற்சிகளும் அளித்து வருகிறார்.

‘‘எனக்கு கலைகளில் ஆர்வம் உண்டு. அதனால் ஓவியம் வரைய கற்றுக் கொண்டேன். தற்போது ஓவிய பயிற்சி வகுப்புகளையும் அளித்து வருகிறேன். மேலும், பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு கல்விக்கான தனி பயிற்சி வகுப்புகளையும் வழங்கி வருகிறேன். என்னுடைய மாணவர்கள் சர்வதேச அளவில் ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசும் வென்றிருக்கிறார்கள்.எனக்கு யோகாவில் நிறைய சாதிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் உடல் எடையை பராமரித்து அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை யோகாசனம் மூலம் தீர்வு அளிக்க வேண்டும். நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையிலும் பயிற்சி அளிக்கிறேன்.

அடுத்த கட்ட முயற்சிகளாக தனியார் பள்ளியுடன் இணைந்து யோகா பயிற்சி வழங்கி வருவதோடு, யோகா குறித்த புரிதல்களையும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி வருகிறேன். நிறைய மாணவச் செல்வங்கள் ஆர்வமாக கற்றுக்கொள்ள வருகிறார்கள். அவர்களும் வருங்காலத்தில் யோகா போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகள் படைக்க எங்கள் பயிற்சியும் உந்துதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது அப்துல் கலாம் டிரஸ்டுடன் இணைந்து மாபெரும் யோகா போட்டியினை நடத்த உள்ளோம். மேலும், யோகா பயிற்சிகள் குறித்து பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உழைத்து வருகிறேன்.

இன்றைய நவீன ஃபாஸ்ட் ஃபுட் யுகத்தில் உடல்நலம் பேணுவதை வழக்கமாக்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு இது குறித்து போதுமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பது எனது கனவு. ஆண், பெண் குழந்தைகள் இருவரும் ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். அதற்கு யோகா மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் யோகாசனம் நல்ல பலனை தரும்.

‘‘பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தொடங்கி கூலி வேலை செய்பவர்கள் கூட, வேலைகளில் ஏற்படக்கூடிய கழுத்து, முதுகு மற்றும் மூட்டு சம்பந்தமான வலிகளை போக்க எளிமையான யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால் பலரும் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள்.

அதில் இருந்து விடுபட தினமும் 15 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்வது நல்லது. பல பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்னைகளும் குறையும். முறையான பயிற்சி ஆலோசனையாளர்கள் மூலமாக செய்வது அவசியம்’’ என சமூக அக்கறையுடன் பேசும் பிருந்தா சிறந்த பன்முக திறமைக்காக சுடரி விருது, சிறந்த யோகா பயிற்சியாளர் விருது என மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்