Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்க்கரை நோயைத் தடுக்கும் பிஸ்தா!

நன்றி குங்குமம் டாக்டர்

இந்தியாவில் ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள் தினமும் உணவுக்கு முன் இரண்டு முறை 30 கிராம் பிஸ்தா எடுத்துக்கொண்டால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சென்னை டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவருமான டாக்டர் வி. மோகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

சமீபத்தில் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் உணவுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டோம்.. அந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு 12 வார மருத்துவ பரிசோதனையில் காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு முன் 30 கிராம் பிஸ்தா வழங்கப்பட்டது. அப்போது அதை எடுத்துக் கொண்டவர்களுக்கு உணவுக்குப் பிந்தைய ரத்த குளுக்கோஸ் அளவு குறைந்து இருப்பதும், மேலும், ட்ரைகிளிசரைடுகளில் 10 சதவீதம், இடுப்பு சுற்றளவு மற்றும் பிற கொழுப்புகள் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் குறைந்த அளவே இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்து சமீபத்தில் ஜர்னல் ஆப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் 13.6 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எங்கள் குழுவின் முந்தைய ஆய்வுகள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதாம் மற்றும் முந்திரி போன்றவை பல்வேறு நன்மைகளை தருவதாக கூறியிருந்தாலும், இந்த ஆராய்ச்சியானது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள ஆசிய இந்தியர்களுக்கு பிஸ்தாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடும்போது இங்குள்ள மக்கள் தொகையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமலும், டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆரம்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவுக்கு முன் பிஸ்தாவை எடுத்துக்கொள்ளும்போது அதில் உள்ள புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் அளவை குறைக்கிறது.

இந்தியாவில் உணவு என்று வரும்போது நாம் வெள்ளை அரிசியையே சாப்பிடுவதால் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் ஒரு பகுதியானது ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்தாக்களை எடுத்துக்கொள்ளும்போது, அதில் உள்ள புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பாலிபினால்கள் ஆகியவை உணவை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.

காலை உணவு மற்றும் இரவு உணவுக்கு முன் 30 கிராம் பிஸ்தாவை உட்கொள்வது கிளைசெமிக் அளவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்திய உணவுகளின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தன்மைகளையும் மேம்படுத்துகிறது. பிஸ்தாக்கள் உணவுக் கிளைசெமிக் சுமையைக் குறைக்க உதவுவதோடு, பெரும்பாலும் இந்திய உணவுகளில் குறைந்து காணப்படும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றை அதிகரிக்கிறது.

அதே சமயம் இந்த ஆய்வில் உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, பிஸ்தா எடுத்துக் கொள்ளும்போது, அது இடுப்பு சுற்றளவையும், ட்ரைகிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இதன்மூலம் பிஸ்தாவில், அதிக கலோரிகள் இல்லை என்பதும் தெளிவாக தெரிய வருகிறது. இருப்பினும், உணவில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக கூடுதல் பிஸ்தா எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.

சிறுநீர் N-methyl-trans-4-hydroxy-L-proline (MHP) அளவுகள் 60% அதிகரித்தது. இது பிஸ்தாவை முறையாக எடுத்துக் கொள்வதைக் காட்டுகிறது. மேலும் இதில் உள்ள ஜீயாக்சாண்டின் போன்ற பாலிபினால் ஆக்சிஜனேற்றிகள், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் கண் சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகளிலிருந்து நம்மை பாதுகாத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

உணவுக்கு முன் பிஸ்தாவை சாப்பிடுவதால் அது, ரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்துவதோடு, கார்டியோமெட்டபாலிக் ஆபத்து காரணிகளைக் குறைத்து, நாம் எடுத்துக்கொள்ளும் உணவை ஆரோக்கியமிக்கதாக மாற்றுகிறது. தாவர புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பிஸ்தா, நமது உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் அளவை திறம்பட குறைக்கிறது. எனவே, இந்த ஆய்வு முக்கியமாக நீரிழிவு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் பொருந்தும். மேலும், அதிக தாவர அடிப்படையிலான புரதங்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று தெரிவித்தார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்