Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முடக்குவாதம்… சில தீர்வுகள்

நன்றி குங்குமம் டாக்டர்

அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நவீன மருத்துவத்தில் இது Rheumatoid arthritis.

இது ஒரு autoimmune disease. அதாவது வீட்டில் வளர்க்கும் நாய் திருடனைக் கடிக்காமல், தன்னை வளர்ப்பவரையே கடிப்பது போன்றது. உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஆரோக்கியமாக உள்ள ஒரு திசுவை எதிர்க்கும் மோசமான நிலை இது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம். ஆனால், நடுத்தர வயதில் அதிகம் வரும். ஆண்களைவிடப் பெண்களை இந்த நோய் அதிகமாகத் தாக்கும். இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பாதிப்புகள்

பொதுவாகக் கை, கால் மூட்டுகளில் பாதிப்பை வெளிப்படுத்தும். கை மூட்டுகள் அழற்சி ஏற்பட்டு வளைந்துபோகும். மணிப் பந்து மூட்டுகள், விரல்கள், கணுக்கால், முழங்கால் போன்றவை பாதிக்கப்பட்டு நீர் சேர்ந்து காணப்படும். மெதுவாகத் தொடங்கி மூட்டுகளை அழிக்கும் தன்மையைப் பெறும்.மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. இதை morning stiffness என்று சொல்வார்கள்.

மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். மேலும் நுரையீரல் பாதிக்கப்படலாம். இதை pleurisy, interstitial lung disease என்று சொல்வோம்.கண்கள், வாய் வறண்டு போகலாம். இதை rheumatoid nodules என்று சொல்வோம். உடலில் சிறு கழலைகள் தோன்றும். இதைக் கிரந்தி என்று சொல்வோம். இதை Hb, ESR, Anti CCP antibody என்று அழைப்பார்கள். வலி அவதிப்படுத்துவதால், இவர்களால் நன்கு தூங்க முடியாது.

பரிசோதனை, மருந்துகள்

ரத்தத்தில் DMA RD போன்ற பரிசோதனையெல்லாம் தேவைப்படும். நவீன மருத்துவத்தில் வலிநிவாரணிகளுக்கு முடக்குவாதத்தைத் தடுத்து நிறுத்துகிற steroids மருந்துகளையும், மலேரியாவுக்குக் கொடுக்கிற சில மருந்துகளையும் கொடுக்கிறார்கள். இப்பொழுது biological agents என்று சொல்லக்கூடிய மருந்துகள் வந்துள்ளன. இவற்றின் விலை அதிகம்.

சிகிச்சை

முடக்குவாதத்துக்கு முதலில் மூட்டுகளில் வலி, எரிச்சல், சிவப்பு நிறம், குத்தல், நீர்க்கட்டு போன்றவை இருந்தால் அட்டைப் பூச்சியைவிட்டு அசுத்த ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இது உடனடி நிவாரணத்தைத் தரும். பின்பு மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட நெய்யை தினசரி கொடுத்து, அந்த நெய் மலத்தில் வந்தவுடன் வியர்வை சிகிச்சை செய்து பேதிக்கு மருந்து கொடுத்து உடலைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு வஸ்தி சிகிச்சைகளைச் செய்ய வேண்டும்.

இந்த முடக்குவாதத்துக்கு மிகவும் சிறந்த மருந்து Tinospora cordifolia என்று சொல்லக்கூடிய சீந்தில் கொடி. இதைச் சூரணமாகவோ, மாத்திரையாகவோ கொடுத்தால் பலன் கிடைக்காது. ஆனால், இந்தத் தண்டை நீரில் ஊறவைத்து, இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் குடிக்கும்போது, அதிகப் பலனைத் தருகிறது. அதைப் போல வயல் ஓரங்களில் சாதாரணமாகக் காணப்படும் நீர்முள்ளியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆயுர்வேதம் இதை சாக போஜனம் என்று அழைக்கிறது.

வலிக்குப் பிண்டத் தைலம், ஆரநாள தைலம், பலா குடூச்சியாதித் தைலம், அமிர்தாதி தைலம் போன்றவற்றைப் போட்டுக்கொள்ளலாம். குக்குலு, சிலாஜித் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நெல்லிக்காய், கடுக்காய் லேகியம், சியவன பிராச லேகியம் போன்றவை சிறந்தவை.

மூலிகைகளால் காய்ச்சப்பட்ட பாலும், நெய்யும் சேர்த்து வஸ்தி செய்யலாம்.அதற்குப் பிறகும் மூட்டில் நீர் இருந்தால் ஆமணக்கு விதையைப் பாலில் அரைத்துப் போடலாம். சதகுப்பை அரைத்துப் போடலாம். எள்ளும், மஞ்சளும் அரைத்துப் போடலாம். சீந்திலின் இலையை அரைத்துப் பற்று போடலாம். தசமூலம் என்று சொல்லக்கூடிய பத்து மருந்துகளின் தொகுப்பைப் பால் கஷாயம் செய்து நோயாளியின் உடலில் பிண்டத் தைலம் தேய்த்துத் தாரை போல் ஊற்றலாம். இது வலியைக் குறைக்கும்.

முடக்கு வாதம் சில கைமருந்துகள்

வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும்.முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து அவித்துத் தொடர்ந்து 15 நாட்களுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி குணமாகும்.பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்துக் காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற பிரச்சினைகள் குறையும்.

முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.

தொகுப்பு: சரஸ்