Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

நன்மைகளை அள்ளித்தரும் பப்பாளி!

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கை நமக்கு அளித்த வரம் பழங்கள். அந்தவகையில், பழங்களில் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய அற்புதமான பழம் பப்பாளி. பப்பாளியில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. முக்கியமாக இதில் உள்ள பாப்பைன் என்னும் நொதி செரிமான மண்டலத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கின்றன.

பப்பாளியை காலை உணவாக எடுத்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காண்போம்.உடல் எடையை அல்லது தொப்பையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் காலை உணவாக 1 கப் பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பச் செய்து, பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். முக்கியமாக பப்பாளியில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். எனவே எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி நல்ல பலனைத் தரும்.

பப்பாளியில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை அனைத்தும் இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்க உதவும். ஏனெனில் இந்த சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை இயல்பாக்கவும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. பப்பாளியில் சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

பப்பாளியில் உள்ள ஹைப்போலிபிடெமிக், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கல்லீரல் சேதத்தை தடுக்கவும், அழற்சிக்கு எதிரான சைட்டோகைன்களை அடக்குவதன் மூலம் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.மலச்சிக்கல் பிரச்னையால் அதிகம் சிரமப்படுபவர்கள் காலையில் தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால் அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பப்பாளியில் உள்ள நொதிகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இறந்த சரும செல்களை நீக்கவும், சருமத் துளைகளை சுத்தப்படுத்தவும், சரும சுருக்கங்களை தடுக்கவும் உதவுகின்றன. இந்த பப்பாளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வரும் போது, அது குடல் செயல்பாட்டை மென்மையாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது.

தொகுப்பு: தவநிதி