நன்றி குங்குமம் தோழி
பிரபல நடிகை ஒருவர் தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(PCOS) அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி நோய்(PCOD) எனப்படும் ஹார்மோன் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாகக் கூறியிருந்தார். இந்தப் பிரச்னையை தற்போது பல பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையால், பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு ஏற்படும். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், உடலில், முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் என ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ பிரச்னையின் அறிகுறிகள். இது குறித்து பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்தார்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) பிரச்னையை எளிதாக சரி செய்துவிடலாம். பெண் மலட்டுத்தன்மையை உருவாக்கும் இந்தப் பிரச்னை இன்றைய தலைமுறை இளம் பெண்களிடம் சாதாரணமாக இருக்கிறது. இதனால் பயப்படவோ அல்லது மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. முறையான உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம் செய்தாலே ஹார்மோன் பிரச்னைகளை தீர்க்க முடியும்.
இன்றைக்கு பெண்கள் கருவுறுவதில் பிரச்னைக்கு முதலாவதாக நிற்பது PCOS தான். இதன் முக்கிய அறிகுறிகள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும். அதற்கு HIRSUITISM என்று பெயர். மாதவிடாய் பிரச்னை இருப்பதால், கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படும். இது ஒரு புறமிருக்க கணையம் சுரக்கும் இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றால், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்படும். அதாவது, பெண்ணின் சினைப்பையில் இருந்து ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆண்ட்ரோஜென் சுரக்கும்.
பெண் கருப்பை சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன், இன்ஹிபின்(inhibin) மழுங்கடிக்கப்படும். விளைவு PCOS பாதிப்புள்ள பெண்களுக்கு இன்ஹிபின் சரியாக வேலை செய்யாது. அதற்கு பதிலாக ஆக்டிவின் (activin) சுரந்து ஆண்மை ஹார்மோனை வீரியப்படுத்தும். இன்சுலின் வேலை செய்யாத காரணத்தால் 90% பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.
கருப்பையில் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகும் போது தான் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சிக்கு காரணமாகின்றன. இந்த நிலை முற்றினால் தலையில் சொட்டை ஏற்படும் வாய்ப்புள்ளது. பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து Follicular stimulating hormone (FSH) குறைவாகவே சுரக்கும். அதனால், கருமுட்டைகள் சரியாக வளர்ச்சி அடையாமல், பாதி வளர்ந்த நிலையில் முட்டைகள் கருப்பையிலிருந்து வெளியே வராமல் அங்கேயே தங்கிவிடும். தாம்பத்திய உறவு ஏற்பட்டாலும் கரு உருவாகாது. விளைவு மாதவிடாய் பிரச்னை. இவை அனைத்திற்கும் மூல காரணம், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ். இதை சரி செய்தால், ஹார்மோன் குளறுபடிகள் அனைத்தும் படிப்படியாக சீராகும். அதனை முடிந்தவரை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
சர்க்கரை அளவு குறைவான காய்கறிகள், நல்ல கொழுப்புகளை உள்ளடக்கிய உணவுகள், போதுமான உடல் பயிற்சி செய்யும் போது உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும். விளைவு இன்சுலின் தன் இயல்பான வேலையை தொடரும். சினைப்பையில் இருந்து கருமுட்டை, கரு உருவாக தானே வெளியேறும். கொழுப்பு கரையும். இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் முறையாக எடுத்துக்கொண்டால் நாளடைவில் பிரச்னைகள் சீராக ஆரம்பிக்கும்.
எடை அதிகமாக இருக்கும் பெண்கள், எடை குறைந்து, கர்ப்பம் தரிக்கும் வரை உணவினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். அதிக மாவுச்சத்துள்ள, குடலுக்கு எரிச்சலை தரக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க் உணவுகள், குளிர் பானங்கள், எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுகள் (மாமிசம், முட்டை, பால் பொருட்கள்), ஒமேகா 3 கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை (மீன்கள்) உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், இனிப்பு குறைவான பழங்கள், நட்ஸ் வகைகளும் சேர்த்துக் கொள்ளலாம்.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி