Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செம்புப் பாத்திரத்தின் தண்ணீர் நன்மை செய்யுமா?

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் உணவு எவ்வளவு முக்கியப்பங்கு வகிக்கிறதோ அதே அளவு தண்ணீரும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தவகையில், நாம் அருந்தும் தண்ணீர் சுத்தமானதாக இல்லையென்றால், அதுவே, பலவித நோய்களை தோற்றுவிக்கும் காரணியாகவும் அமைகிறது. இதற்கு காரணம், தண்ணீரில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள்தான்.

தண்ணீரில் மறைந்திருக்கும் ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற கிருமிகளை அழிக்க அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சில உத்திகளை கையாண்டு உள்ளனர். அதில் ஒன்றுதான் செப்பு பாத்திர பயன்பாடு. அதாவது, இயற்கையாக தண்ணீரை சுத்தப்படுத்த செப்பு பாத்திரங்களை பயன்படுத்தியுள்ளனர். நீர்நிலைகளில் இருந்து கொண்டு வரும் தண்ணீரை செப்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து பருகினார்கள். தண்ணீரை தேக்கி வைக்கும் நீர் நிலைகளில் செப்பு நாணயங்களை எறிந்து தண்ணீரை சுத்தப்படுத்தினார்கள்.

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், கனிமத்தில் இருந்து அயனிகள் பெறுகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் சேமிக்கப்படும் போது செம்பு அதன் சில அயனிகளை தண்ணீரில் பரிமாற்றம் செய்கிறது. இதன் காரணமாக தண்ணீரானது, கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெறுகிறது. பொதுவாக, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதால் உடலில் சில நோய் வராமல் தடுப்பதுடன் சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்வதற்கும் தாமிரம் உதவுகிறது.

இது தைராய்டு சுரப்பியை நன்றாகச் செயல்பட தூண்டுகிறது. மேலும், இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை உள்ளவர்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்தும்போது ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்த சோகை தடுக்கப்படுகிறது.செம்பு, எலும்புகளை வலுப்படுத்தும் பண்பை கொண்டுள்ளது. இதனால், மூட்டுவலிக்கு சரியான மருந்தாக அமைகிறது. செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர் குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது.

செம்பு ரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவுகிறது. இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. நரம்புகளையும் வலுப்படுத்துகிறது. அந்த வகையில் செம்பு உடல்நலத்துக்கு உதவும் உலோகமாக செயல்படுகிறது.

தொகுப்பு: ரிஷி