Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருங்குடல் புற்றுநோய் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டு வந்தாலும். ஒருபுறம் வெவ்வேறான புற்றுநோயும் அதிகரித்துதான் வருகிறது. இதற்கு காரணம், நமது வாழ்வியல் முறை மாற்றங்களும் உணவு பழக்கவழக்கமும்தான் என தெரிவிக்கிறது மருத்துவ உலகம். அந்த வகையில், பெருங்குடல் புற்றுநோயும் ஒன்று. பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம், அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த புற்றுநோய் மருத்துவர் செந்தில் குமார் கணபதி.

பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் புற்றுநோயாகும். அதாவது, பெருங்குடல், சிறுகுடல் முடியும் இடத்தில் தொடங்கி மலக்குடல் தொடங்கும் இடத்தில் முடிகிறது. எனவே, பெருங்குடல் மற்றும் மலக்குடல் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாகும். ஆகவே இந்தப்பகுதியில் புற்றுநோய் வந்தால் அதனை பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்கிறோம். இதனை மருத்துவ உலகில் கோலோ ரெக்ட்டல் கேன்சர் என்று சொல்லப்படுகிறது. அதாவது, பெருங்குடல் போலான் என்றும் மலக்குடல் ரெக்ட்டான் என்று சொல்லப்படும். எனவே பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் என்று தனியாக பிரிக்காமல் ஒரே குழுவாக பார்க்கப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம்

பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்றால் அதில் முக்கியமாக பார்க்கப்படுவது உணவு பழக்கவழக்கம்தான். அதாவது உடலில் நார்ச்சத்து அளவு குறையும்போது, இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாரச்சத்து இல்லாத உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு இந்த பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சமீபத்தில் இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி மையம் இது சம்பந்தமாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், 30 சதவீதம் அதாவது 100 பேரில் சுமார் 30 பேருக்கு நார்ச்சத்து பற்றாக்குறையினால் மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக ரெட் மீட் என்று சொல்லப்படும், மட்டன், பீப், போர்க், லம்ப் போன்ற இறைச்சிகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இவை வெள்ளை மீட் என்று சொல்லப்படும் சிக்கன் இறைச்சிகளை காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஃப்ரோசோன் மீட் என்று சொல்லப்படும் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடும் வகையில் பதப்படுத்திய இறைச்சிகளை அதிகமாக உண்பவர்களுக்கு 13 சதவீதம் இந்த புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கிறது. அந்தவகையில், சுமார் 43 சதவீதம் உணவு பழக்கத்தால்தான் இந்த பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் பலருக்கும் ஏற்படுகிறது.

இது தவிர, அதிக உடல் எடை கொண்டிருத்தல், உடற்பயிற்சியின்மை, புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் போன்றோருக்கு பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். இவையெல்லாம் நம்முடைய பழக்கவழக்கத்தால் உருவாகிறது.இது தவிர்த்து, நம்மை மீறி வருவது என்றால் வயது காரணமாக வருகிறது. வயது கூட கூட நோய்களுக்கான ரிஸ்க்கும் அதிகமாக உள்ளது. அடுத்தபடியாக பரம்பரை காரணமாகவும் சிலருக்கு இந்த புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. அதாவது, குடும்பத்தில், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என நெருங்கிய உறவுகளில் யாருக்கேனும் இந்த புற்றுநோய் இருந்திருந்தால், அவர்களை சார்ந்தவர்களுக்கும் இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

மேலும், ஜெனடிக் சிண்ட்ரோம் பிரச்னை உள்ளவர்களுக்கும், இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனை எஸ்.ஏ.பி (SAP) என்று சொல்வோம். அதாவது ஒரு சிலருக்கு ஜெனிடிக் காரணமாக, பெருங்குடலில் நூற்றுக்கணக்கான சின்ன சின்னதாக சதை வளர்ச்சி இருக்கும். இதுபோன்றோருக்கு அவர்கள், 40 வயதை அடைவதற்குள் இந்த சதை வளர்ச்சியும் அதிகரித்து அது புற்றுநோயாக மாறிவிடக்கூடும். எனவே, ஜெனடிக் சிண்ட்ரோம் பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த புற்றுநோய் பாதிக்கும் அபாயம் அதிகம். இது தவிர்த்து ஏற்கெனவே, பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு மீண்டும் இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்

இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்றால், மலத்தில் ரத்தம் கலந்து வருவது.திடீரென மலச்சிக்கல் ஏற்படுவது அல்லது பேதி ஆவது இரண்டும் அடிக்கடி மாறி மாறி வந்தால் இவையும் இந்த புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.சில நேரங்களில் மலத்துவாரத்தையே அடைக்கும் அளவுக்கு புற்றுநோய் வளர்ந்து இருந்தால் அந்த இடத்தில் கடுமையான வலி உண்டாகும். நோய் முற்றிய நிலையில், பசியின்மை, உடல் இளைத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

சிகிச்சை முறைகள்

பெருங்குடல் புற்றுநோயை பொருத்தவரை, ஒவ்வொரு நிலைக்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகள் மாறுபடும்.ஸ்கேன் மூலம் புற்று இருப்பது உறுதியாகிவிட்டால், முதலில், இந்தப் புற்று கல்லீரல், சிறுநீரகம் போன்ற வேறு உறுப்புகளுக்கு ஏதும் பரவியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வோம். அப்படி பரவல் ஏதும் இல்லை என்றால், பெருங்குடல் பகுதியில் மட்டும் சிகிச்சையை மேற்கொள்வோம். அதுவே மலக்குடல் பகுதியில் இருந்தால், ஆரம்பகட்டமாக ரேடியேஷன் சிகிச்சைகளை வழங்கிவிட்டு, பின்னர், அறுவை சிகிச்சையை பரிந்துரைப்போம்.

ஒருவேளை வேறு உறுப்புகளுக்கு பரவியிருந்தால், எந்தப் பகுதியில் பரவியிருக்கிறதோ அந்தப் பகுதியை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற முடியும் என்றால் அவர்களுக்கு கீமோ தெரபி சிகிச்சை அளித்து, பின்னர் அறுவைசிகிச்சை மேற்கொள்வோம். அப்படி அகற்ற முடியாத நிலை என்றால் அவர்களுக்கு கீமோ தெரபி சிகிச்சை அளித்து அவர்களது வாழ்நாளை நீட்டிக்க முற்படுவோம். தற்போது, நவீன சிகிச்சை முறைகள் நிறைய வந்துவிட்டது. அதிலும் ரோபாடிக் சர்ஜரி மூலம் துல்லியமாக கண்டறிந்து அறுவைசிகிச்சை மேற்கொள்வதால் இப்போது நிறையவே பலன் கிடைக்கிறது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

*ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*ரெட் மீட், பதப்படுத்திய உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

*புகைப்பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்ப்பது.

*உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது.

*தினசரி அரைமணி நேரமாவது முடிந்தளவு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை கடைபிடித்து வந்தால் 70 முதல் 80 சதவீத அபாயத்தை தவிர்த்துக்

கொள்ளலாம்.

*இந்த புற்றுநோயை பொருத்தவரை, பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உள்ளது. எனவே, ஒவ்வொருவருமே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் இந்த புற்றுநோய் என்று இல்லாமல் பெரும்பாலான நோய்களையும் தவிர்த்துக் கொள்ளலாம்.