நன்றி குங்குமம் தோழி
மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் ‘பழைய சோறு’ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதிலுள்ள மருத்துவ குணம் குறித்து பெருமையாக பேசி வந்தார்கள். ஆனால், இப்போது திரைப்பட பிரபலமான நடிகர் மாதவனும் தான் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவதாக கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து முன்னாள் நடிகை நீட்டு சிங் கபூர், நடிகை அதியா ஷெட்டியும் பழைய சோறு பற்றி சிலாகித்துப் பேசியுள்ளனர். இதில் அகில இந்திய அளவில் குறிப்பாக வடநாட்டில், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவாக பழைய சோறு மாறியுள்ளது. காலச் சக்கரம் சுழலுவது மாதிரி, மீண்டும் ‘பழைய சோறு’ வியாபார ரீதியாக தலை காட்டத் தொடங்கியுள்ளது.
புரோபயாடிக் அதாவது, குடலுக்கு நன்மை தரும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தென்னக உணவான பழைய சோறு வட இந்தியாவிற்கு தற்போது அறிமுகமாகியுள்ளது. கேரளாவில் பழங்கஞ்சி, கர்நாடகாவில் தங்கலன்னா, ஆந்திராவில் சத்தன்னம், ஒடிசாவில் பகலா, மேற்குவங்கத்தில் பந்தா பட் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நாம் அன்றாடம் சாப்பிடும் பழையது எனப்படும் ‘பழைய சோற்றை’, மேற்குவங்கத்தில் ரசகுல்லா சேர்த்தும் சாப்பிடுகிறார்கள்!
பகலில் வடித்த சாதம் மீதமாகும் போது, அதில் தண்ணீர் ஊற்றி இரவு ஊற வைத்திடுவார்கள். இது காலையில் நொதித்திருக்கும். அதில் தயிர், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்தால், பழைய சோறு ரெடி. இதற்கு பச்சை மிளகாய், ஊறுகாய், சுட்ட அல்லது பொரித்த அப்பளம், தேங்காய், இஞ்சி, புதினா, கொத்தமல்லி, பருப்பு துவையல், கொத்தவரை வத்தல், மோர் மிளகாய், கருவாடு, மீன், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை, மட்டன் சுக்கா, சுண்ட வைத்த சாம்பார் என்று பழைய சோற்றிற்கு சைட் டிஷ்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். பழைய சோற்றின் தண்ணீர் குடித்தால் வெயிலுக்கு இதமாக வயிற்றையும் மனதையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
காலை உணவிற்கு நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த பழைய சோறு எவ்வாறு சூப்பர் உணவாக மாறுகிறது. ஒருநாள் இரவு தண்ணீரில் சாதத்தினை நொதிக்க வைக்கும் போது அதில் பாக்டீரியாக்கள் உருவாகிறது. இவை அனைத்தும் உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள். இவை உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கோடை காலங்களில் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகமாகும் என்று சொல்வார்கள். ஆனால், நொதிக்க வைக்கப்பட்டிருப்பதால் இதில் கலோரிகள் குறைந்து, நார்ச்சத்து அதிகமாகும். சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.
நூறு கிராம் வடித்த சோற்றில் நாலு கிராம் இரும்புச்சத்துதான் இருக்கும். அதே அளவு பழைய சோற்றில் இரும்புச்சத்து 75 கிராம் இருக்கும். அனீமியாவாக இருப்பவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு உள்ளவர்கள் பழைய சோற்றைத் தாராளமாகச் சாப்பிடலாம். இதில் விட்டமின் பி 6, பி 12 சத்துக்களும் நிறைந்துள்ளது. மூளை வளர்ச்சிக்கு இந்த விட்டமின்கள் முக்கியம். பழைய சோறு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
தொகுப்பு: பாரதி