Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நூடுல்ஸ் பிரியரா நீங்க...? ஆரோக்கியத்திற்கு வருது அடுக்கடுக்கான ஆபத்து: மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

தாம்பரம்: சீன உணவு வகையான நூடுல்ஸ் தற்போது உலகம் முழுவதுமே பிரபலமாக இருக்கிறது. குறைந்த விலை, 2 நிமிடத்தில் எளிதாக சமைக்கலாம் போன்ற காரணங்களால் பெரும்பாலான வீடுகளிலும், வேலை தேடி வரும் பேச்சுலர்களின் அறைகளிலும், சிறுவர், சிறுமியர் உள்ள வீடுகளிலும் தவிர்க்க முடியாத உணவாக இது மாறியுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாகவும், நமது பரபரப்பான வாழ்க்கைக்கு இடையில் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உள்ளது. சுவையாகவும், தற்காலிகமாக வயிறு நிறைந்த திருப்தியை தருவதால், பலர் நூடுல்சை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், இந்த நூடுல்ஸில் நம் உடல்நலத்தை பாதிப்படைய செய்யும் பல மோசமான விஷயங்கள் உள்ளன. இந்த நூடுல்ஸால் ஏற்படும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் குறித்து நாம் தெரிந்திருப்பதில்லை.

மேலும் அதுகுறித்து யோசிப்பதும் இல்லை. இந்த நூடுல்ஸில் அதிகளவு சோடியம் மற்றும் குறைவான ஊட்டச்சத்துகளை கொண்டிருப்பது மட்டுமின்றி ஆரோக்கியமற்ற சேர்க்கைப் பொருட்களும், கெட்டுப் போகாமல் இருக்க பிரிசர்வேட்டிவ்களும் சேர்க்கப்படுகின்றன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய்த் துறை தலைவரும், ஆலோசகருமான டாக்டர் அஷ்வின் கருப்பன் கூறியதாவது: இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் அதிக சோடியம் இருப்பதால், இது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இறுதியில் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பதப்படுத்தப்பட்ட இந்த உணவுகளில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும், இவை அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.

இவை சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இல்லாததால், இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்கிறது. இதனால் சோர்வு, சோம்பல் மற்றும் பலவீனம் ஏற்படுகிறது. பெரும்பாலான இந்த உணவுகள் பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மாவால் ஆனவை என்பதால், இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து மிகக் குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அமிலத்தன்மை ஆகியவை ஏற்படுகிறது. இவற்றை நாம் தொடர்ந்து சாப்பிடும்போது கல்லீரல் செயல்பாடு அதிகரிக்கும், மேலும் நூடுல்ஸில் புரதச் சத்தும் மிகக் குறைவாக உள்ளது. வழக்கமாக நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நியாசின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ் குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிறந்த சுவைக்காக அதில் பயன்படுத்தப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற பதப்படுத்திகள் பல கடுமையான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.

தலைவலி, மார்பு இறுக்கம், வியர்வை, முகம் சிவத்தல், படபடப்பு, வயிற்று வலி மற்றும் பலவீனம் போன்றவயும் ஏற்படலாம். தொடர்ந்து அதை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், மனச்சோர்வு மற்றும் பதற்றமும் ஏற்படும். மீதமுள்ள அரிசியிலிருந்து வறுத்த அரிசி தயாரிக்கப்பட்டால், அதை சரியாக பாதுகாப்பாக வைக்காமல் அல்லது சரியாக சூடு செய்யாமல் இருந்தால், அது பிரைடு ரைஸ் நோய்க்குறியை ஏற்படுத்தும். இது பேசிலஸ் செரியஸ் பாக்டீரியாவின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இதன் காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்று அசவுகரியம், வீக்கம், அஜீரணம் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படும். எனவே பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் மேத்யூ ஜெரி ஜார்ஜ் கூறியதாவது:  இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உலகெங்கிலும் பிரபலமான, விலை மலிவான மற்றும் சவுகரியமான உணவு விருப்பத்தேர்வாக இருந்து வருகிறது. இருப்பினும், அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதோடு தொடர்புடைய உடல்நல ஆபத்துகள் பற்றிய கவலைகளை சமீபத்திய விவாதங்கள் உருவாக்கியிருக்கின்றன. நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் என்பது, இந்தியாவில் அதிக கவலை ஏற்படுத்துகின்ற சுகாதாரச் சுமையாக இருக்கிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் நீரிழிவு போன்ற இணை நோய்களின் காரணமாக, நாட்பட்ட சிறுநீரக நோயின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சராசரி இந்தியரின் சராசரி உப்பு உட்கொள்ளல் அளவு ஒரு நாளுக்கு சுமார் 11 கிராம் என்பதாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவான ஒரு நாளுக்கு 5 கிராம் என்பதை விட இது இரு மடங்கிற்கும் அதிகமாகும்.

நமது உணவில் அளவுக்கதிக உப்புக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நூடுல்ஸ், பர்கர்கள் மற்றும் இதுபோன்ற பல துரித உணவுகளே. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு, தண்ணீர், உப்பு மற்றும் பதப்பொருட்கள் ஆகிய மூலப்பொருட்களிலிருந்து வழக்கமாக தயாரிக்கப்படுகின்றன. அதன்பிறகு அவைகளுக்கே தனிமுத்திரையாக திகழும் வடிவமைப்பு மற்றும் துரிதமாக சமைக்கும் திறனை வழங்குவதற்கு எண்ணெயில் அவைகள் பொரிக்கப்படுகின்றன. பெரும்பாலான நூடுல்ஸ் வகைகளில் அதிக அளவிலான சோடியம் (உப்பு), செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் இடம்பெறுகின்றன. அதிகம் செறிவான உப்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளடங்கியதாக நூடுல்ஸ்கள் இருக்கின்றன. நூடுல்ஸின் ஒரு பரிமாறல் அளவு ஏறக்குறைய 1200-4400 மி.கி. சோடியத்தைக் கொண்டிருக்கிறது.

ஒரு நாளுக்கு 2 கிராம் சோடியம் என்ற பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை பரிந்துரைப்பை விட இது இரு மடங்காகும். பிற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில், இந்த நூடுல்ஸில் உயரளவிலான சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து, குறைவான புரத உள்ளடக்கம் மற்றும் மிகக் குறைவான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டிருக்கிறது. இதன் அதிக மாவுச்சத்து உள்ளடக்கத்தின் காரணமாக நூடுல்ஸ் விரைவான ஆற்றல் உணர்வை வழங்கக்கூடும், எனினும் நல்ல ஆரோக்கியத்தை பேணுவதற்கு அவசியமான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் இதில் மிகமிகக் குறைவாக இருக்கின்றன. சிறுநீரக ஆரோக்கியத்தின் மீது பாதிப்பு: உடலில் கழிவுப்பொருட்களை வடிகட்டுவதற்கும் மற்றும் சோடியம் உள்பட உடலில் எலக்ட்ரோலைட்ஸ்களின் சமநிலையை நெறிப்படுத்தவும் பொறுப்புடையதாகவும் நமது சிறுநீரகங்கள் இயங்குகின்றன.

ஒரு நபர் அளவுக்கதிக சோடியத்தை உட்கொள்ளும்போது உடலிலிருந்து மிகைப்பட்ட உப்பை வெளியேற்ற சிறுநீரகங்கள் மிக கடுமையாக செயலாற்றுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. காலப்போக்கில் இந்த கூடுதல் பணிச்சுமையானது சிறுநீரகங்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய்க்கு வழிவகுத்து விடும். பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும், புற்றுநோய்க்கான இடர்வாய்ப்புக்கும் இடையிலான பிணைப்பு: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்களை தொடர்ந்து அடிக்கடி உட்கொள்வதோடு தொடர்புடைய மற்றொரு பிரச்னை என்னவென்றால் புற்றுநோய்க்கு அதனோடு இருக்கும் ஒரு சாத்தியமுள்ள பிணைப்பாகும். நூடுல்ஸ் உள்பட பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பல்வேறு சேர்க்கை பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் இடம் பெறுகின்றன. இவைகளுள் சிலவற்றுக்கும், புற்றுநோய்க்கான அதிகரித்த இடர்வாய்ப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அறியப்படுகிறது.

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மூன்றாம் நிலை பியூட்டில் ஹைட்ரோ குவினோன் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற பாதுகாப்பதற்கான பதப்படுத்தல் பொருட்கள் பெரும்பாலும் அடங்கியுள்ளன. இந்த உட்பொருட்கள், பாதுகாப்பானவை என்று உணவு பாதுகாப்பு அதிகார அமைப்புகளால் பொதுவாக அங்கீகரிக்கப்படுகின்றன என்றாலும் கூட உயரளவிலான சேர்க்கை பொருட்களுக்கும் மற்றும் புற்றுநோய்க்கான அதிகரித்த இடர்வாய்ப்புக்கும் இடையே சாத்தியமுள்ள ஒரு பிணைப்பு இருக்கிறது. மூன்றாம் நிலை-பியூட்டில்ஹைட்ரோகுவினோன்: நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஆயுள் காலத்தை நீடிப்பதற்காக வேதிப்பொருளான இந்த பதப்படுத்தல் பொருள் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாம் நிலை-பியூட்டில்ஹைட்ரோகுவினோன் நச்சுப் பண்பியல்புகள் மனிதர்களில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மீதான ஆய்வுகள் மிக குறைவாகவே நடத்தப்பட்டுள்ளன.

எனினும் அதிக அளவுகளில் பயன்படுத்தும்போது புற்றுநோயை விளைவிக்கும் இதன் சாத்தியத்திறன் குறித்து கவலைகளை விலங்குகள் மீதான ஆய்வுகள் எழுப்பியிருக்கின்றன. மோனோசோடியம் குளுட்டமேட்: குறிப்பிட்ட சில உணவுகளில் மோனோசோடியம் குளுட்டமேட் பயன்பாட்டை எப்எஸ்எஸ்ஏஐ அனுமதிக்கிற போதிலும் இதன் சாத்தியத்திறனுள்ள நரம்புவழி நச்சு பாதிப்புகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அளவுக்கதிக மோனோசோடியம் குளுட்டமேட் நுகர்வுக்கும் மற்றும் குறிப்பிட்ட சிலவகை புற்றுநோய்களின் அதிகரித்த ஆபத்துக்கும் இடையே சாத்தியமுள்ள தொடர்பு இருக்கலாம் என்பதை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. நூடுல்ஸ்களின் குறைவான ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் புத்தம் புதிய முழுமையான பொருட்கள் இல்லாமை ஆகிய அம்சங்கள் இதன் ஆரோக்கிய இடர்ப்பாடுகளை மேலும் அதிகமாக்குகின்றன.

நூடுல்ஸ் மீது மிக அதிகமாக சார்ந்திருக்கும் உணவானது, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு அத்தியாவசியமான எதிர் ஆக்சிகரணிகளையும் மற்றும் பிற ஊட்டச்சத்துகளையும் பெரும்பாலும் குறைவாகவே கொண்டிருக்கிறது.  புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றில், ஆக்சிஜனேற்ற அயற்சியை எதிர்த்து போராடவும், புற்றுநோய்க்கான ஆபத்தை குறைப்பதும் மிக அவசியமான வைட்டமின் சி மற்றும் இ வைட்டமின்கள் அடங்கியுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்துகளின் பாதிப்பும் மற்றும் இதய நோயும்: நூடுல்ஸ்கள் வழக்கமாகவே சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. முழு தானியங்களில் காணப்படுகிற நார்ச்சத்து மற்றும் பிற பயனளிக்கும் ஊட்டச்சத்துகள் இதில் குறைவாகவே இருக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து பொருட்களை அளவுக்கதிகமாக உட்கொள்வதனால் உடற்பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய் உள்பட பல நாட்பட்ட தீவிர பாதிப்புகள் வரக்கூடும் என்பது நன்கு அறியப்பட்டிருக்கிறது.

உடல்பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு: நூடுல்ஸில் அதிக கலோரிகளும், குறைவான ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. இதை அடிக்கடி உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பிற்கும், உடற்பருமனுக்கும் வழிவகுக்கும் என்பதே இதன் அர்த்தமாகும். இதன் தொடர்விளைவாக உடற்பருமன் என்பது சிறுநீரக செயல்பாட்டை மேலும் சேதப்படுத்தக்கூடிய வகை 2 நீரிழிவு உருவாவதற்கு ஒரு முக்கியமான இடர்காரணியாக இருக்கிறது. இதயநாள் நோய்க்கான இடரையும் உடற்பருமன் அதிகரிக்கிறது. இதய நோய்: சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகமாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறைவாகவும் இருக்கிற ஒரு உணவானது இதயநோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் பங்களிப்பை செய்யக்கூடியது. நூடுல்ஸில் உள்ள அதிக சோடிய உள்ளடக்கமானது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான முன்னணி காரணமாக உயர் ரத்தஅழுத்தமே இருக்கிறது. கூடுதலாக, அளவுக்கதிக சோடிய நுகர்வு, எலக்ட்ரோலைட்ஸ்களின் சமநிலையின்மைக்கு வழிவகுப்பதால் இதயத்தின் மீதான அழுத்தத்தை கூடுதலாக அதிகரித்து விடும்.

தினசரி உணவாக நூடுல்ஸ் உண்பதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக எப்போதாவது சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக அதை வைக்கவும். சமச்சீரான உணவை தினசரி சேர்த்துக் கொள்வது மீது கவனம் செலுத்தவும். ஒரு நாளில் 2-3 தடவைகள் நூடுல்ஸ் சாப்பிடுவது புற்றுநோய் அல்லது சிறுநீரக செயலிழப்பை நேரடியாக விளைவிக்காது என்றாலும்கூட காலப்போக்கில் கடுமையான உடல்நல பிரச்னைகளுக்கு இது இட்டுச் செல்லக்கூடும்.  அதிக சோடிய உள்ளடக்கம், அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறைவாக இருப்பதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தும் பொருட்கள் அதிகமாக இருப்பதும் நூடுல்ஸின் நுகர்வை நீண்டகால ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு ஆபத்தாக ஆக்குகிறது. எனவே மிதமான அளவில் எப்போதாவது நூடுல்ஸ் உண்பதும், உங்கள் உணவில் ஊட்டச்சத்து செறிவாக உள்ள பல்வேறு உணவுகளை தினசரி உட்கொள்வதும் முக்கியமானது.

இவ்வாறு செய்வதன் மூலம் நூடுல்ஸ் உடன் தொடர்புடைய இடர்களை குறைக்க முடியும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை இன்னும் சிறப்பாக ஆக்க முடியும் என தெரிவித்தார்.

சோடியத்தால் ஏற்படும் பாதிப்புகள்

மிகை ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் என்பது சிறுநீரக நோய்க்கு ஒரு முக்கியமான இடர்காரணியாகும். நீடித்த காலஅளவிற்கு அதிக ரத்த அழுத்தத்திற்கு சிறுநீரகங்கள் உட்படுத்தப்படும்போது அவைகள் சேதமடையக்கூடும். இதன் காரணமாக கழிவை திறம்பட வடிகட்டும் அவைகளின் திறன் பாதிக்கப்படும்.

திரவ தக்கவைப்பு: சோடியம் அளவுகள் மிக அதிகமாக இருக்கும்போது உடலானது கூடுதல் நீரை வெளியேற்றாமல் தக்கவைத்துக் கொள்வதனால் வீக்கம் ஏற்பட வழிவகுக்கும். உடலில் திரவ அளவுகள் நெறிப்படுத்தும் பணியை சிறுநீரகங்கள் திறம்பட செய்வதை இது கடினமாக்கி விடும்.

சமச்சீரான உணவு

ஒரு வாரத்தில் எப்போதாவது 2 அல்லது 3 முறை ஒரு கோப்பை நூடுல்ஸ் சாப்பிடுவது குறிப்பிடத்தக்க உடல்நிலை ஆபத்தை விளைவிக்காது என்றாலும், ஒரு நாளுக்கு 2 அல்லது 3 தடவை தவறாமல் இதை உட்கொள்வது நல்லதல்ல. நூடுல்ஸ் விரும்பி சாப்பிடும் நபர்கள், பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் உள்பட பல்வேறு வகையான ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களது உணவை சமச்சீரானதாக ஆக்குவது அவசியம்.

புரதங்களை சேர்க்கலாம்

நூடுல்ஸ் உணவுக்கு மாற்றாக குறைந்த சோடியம் இருக்கிற அல்லது வீட்டிலேயே தயாரிக்கப்படுகிற நூடுல்ஸ்-ஐ தேர்வு செய்வது, சோடியம் குறைவாக உள்ள நூடுல்ஸ் பிராண்டுகளை தேர்வு செய்யவது, நூடுல்ஸின் ஊட்டச்சத்து மதிப்பை உயர்த்துவதற்காக அதில் கீரை, கேரட்கள் மற்றும் பிராக்கோலி போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். கோழிக்கறி அல்லது டோபு போன்ற மெல்லிய புரதங்களை சேர்த்துக் கொள்வதும் உணவின் சமநிலையை மேம்படுத்தும்.

சிறுநீரகம் பாதிக்கும்

அதிக சோடியத்தை உள்ளடக்கிய உணர்வு, சிறுநீரில் கால்சியம் வெளியேற்றலையும் அதிகரித்து விடும். சிறுநீரக கற்கள் உருவாவதற்கு இது காரணமாக அமைந்து விடும். ஒரு நாளுக்கு 2-3 முறைகள் தவறாமல் நூடுல்ஸ் உட்கொள்வது நீண்ட கால சிறுநீரக சேதத்திற்கு இட்டுச் செல்லும், தொடர்ந்து நீண்டகாலத்திற்கு அதிகளவு சோடியம் உட்கொள்ளலுக்கும், சிறுநீரக நோய்க்கான அதிகரித்த இடர்வாய்ப்புக்கும் தொடர்பிருக்கிறது. குறிப்பாக நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்பு நிலைகள் ஏற்கனவே இருக்கிற நபர்களில் சிறுநீரக நோய்க்கான ஆபத்து அதிகமாக இருக்கும்.