நன்றி குங்குமம் டாக்டர்
ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து அற்புதமான நடிப்பை வழங்கியதன் மூலம் கதாநாயகியாக இருந்தாலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நிமிஷா சஜயன். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் முதன்முதலில் மலையாளத்தில் வெளியான “தொண்டிமுதலும் திரட்சியும்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதையடுத்து, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் நாயகியாக நடித்து பலரின் கவனத்தை கவர்ந்தார். பின்னர், 2023 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2, ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர் 1 போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியான நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா நடித்திருந்த டி என் ஏ படத்தில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பால் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ள நிமிஷா சஜயன், தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாகவும் பார்க்கப்படுகிறார். நிமிஷா சஜயனின் ஃபிட்னெஸ் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஒர்க்கவுட்ஸ்: நான் மலையாள பெண்ணாக இருந்தாலும் அப்பாவின் பணி நிமித்தமாக மும்பையில்தான் வளர்ந்தேன். அங்கேதான் பள்ளி படிப்பையும் முடித்தேன். பள்ளியில் படிக்கும்போதே டேக்வாண்டோ எனும் தற்காப்பு கலை பயின்று பிளாக் பெல்ட் பெற்றுள்ளேன். மேலும் தேசிய அளவில் டேக்வாண்டோவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்காக போட்டியிட்டும் உள்ளேன். மேலும் மற்ற விளையாட்டுகளிலும் நான் மிகவும் சுறுசுறுப்பாகவே இருந்தேன், கால்பந்து மற்றும் கைப்பந்து அணிகள் இரண்டிற்கும் கேப்டனாகவும் இருந்துள்ளேன். இது தவிர ஸ்பிரின்ட், நீச்சல் மற்றும் ஸ்கேட்டிங் போன்றவற்றையும் பயின்றுள்ளேன்.
இன்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனவே, தனியாக ஜிம் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை. இருந்தாலும், என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதற்கேற்றவாறு உடல் எடையை கூட்டுவதையும், குறைப்பதையும் செய்துகொள்கிறேன். இந்த விஷயத்தில் எனது உடற்பயிற்சி மற்றும் அழகுக்கான ரகசியம் பற்றி கேட்டால், என் தோற்றத்தை கவனித்துக்கொள்வதில் என் அம்மாவுக்குதான் முக்கிய பங்கு உண்டு. அவர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே பின்பற்றிக் கொள்வேன்.
டயட்: எனது உணவு விஷயத்திலும் என்னை விட என் அம்மாவே அதிக கவனமாக இருக்கிறார். எனக்கு என்ன தேவை என்பதை பார்த்துப் பார்த்து செய்துத் தருகிறார். டயட் என்ற பெயரில் நான் எந்த உணவையும் ஒதுக்கி வைப்பது கிடையாது. எனக்கு பிடித்த உணவுகளை நான் விரும்பி சாப்பிடுவேன். அதேசமயம் கதாபாத்திரத்துக்கு தேவையென்றால், படம் முடியும் வரை உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். நான் மும்பையில் வளர்ந்திருந்தாலும் கேரளாவின் பாரம்பரிய உணவுகள் அனைத்தும் விரும்பி சாப்பிடுவேன். அந்தவகையில் மீன் உணவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு கிண்ணம் சூடான சாதத்துடன் காரமான அல்லது மொறுமொறுப்பான மீன் வறுவலை சுவைப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுபோன்று உள்ளூர் ‘தட்டுக்கடா’வில் இருந்து உணவை சாப்பிடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அழகு: நான் மிகவும் சென்சிடிவ்வான சருமம் கொண்டவள். அதனால், கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்களை நான் பயன்படுத்துவதில்லை. திரைப்படத்திற்காக அதிக மேக்கப் போட்டாலும் உடனே எனக்கு அலர்ஜியாகிவிடும். இதனால், முடிந்தவரை ஆயுர்வேத அழகுப் பொருட்களையே பயன்படுத்துகிறேன். நான் மும்பைவாசியாக இருந்தாலும், பார்லர் பக்கம் சென்றதே இல்லை. அப்படியே சென்றாலும் புருவங்களை சரி செய்வதற்காகவே செல்வேன்.
அடர்த்தியான எனது புருவமே எனது அடையாளமாகவும் கருதுகிறேன். இப்படிதான் ஒருமுறை மும்பையில் புருவங்களை சரி செய்வதற்காக அழகு நிலையத்திற்குச் சென்றேன். அங்குள்ள ஒரு அழகு நிபுணர் எனது புருவங்களை மிகவும் மெல்லியதாக மாற்றியபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். வீடு திரும்பும் வரை அழுது கொண்டே வந்தேன். அதன்பிறகு சில மாதங்களுக்கு புருவத்தில் கையே வைக்கவில்லை. மற்றபடி என்னுடைய சரும பராமரிப்பு மற்றும் தலை முடி பராமரிப்பு இரண்டையும் அம்மாதான் பார்த்துக்கொள்கிறார்.
அந்த வகையில் வாரத்திற்கு இரண்டு நாளாவது முட்டை வெள்ளை கரு மற்றும் வெந்தயத்தை சேர்த்த ஹேர் பேக்கைப் பயன்படுத்துகிறேன். அதுபோன்று தலைமுடிக்கு கறிவேப்பிலை சேர்த்து காய்ச்சிய தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகிறேன். அதுபோன்று ஆயுர்வேத ஷாம்பூ மட்டுமே பயன்படுத்துகிறேன். கண்டிஷனரை கூட பயன்படுத்துவதில்லை. சருமத்திற்கும் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துகிறேன்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்