Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புது அம்மாக்களின் உடல் எடை... உளைச்சல் வேண்டாம்... உற்சாகம் கொள்வோம்!

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் உலகம் முழுக்க முழுக்க ஹார்மோன் மாற்றங்களால் ஆனது. அதனால்தான் பெண்களின் மனதை புரிந்துகொள்வது கடினம் எனச் சொல்வார்கள். இப்படி ஹார்மோன் மாற்றங்களால் ஆனப் பெண்களில் புது அம்மாக்கள், தம் கையில் புதுக்குழந்தை இருப்பதைக் கூட எண்ணி ஆனந்தம் கொள்ளாமல், தமது உடல் எடை ஏன் அதிகரிக்கிறது, அவ்வாறு அதிகரிப்பதை எப்படி தடுப்பது, எப்போது தாம் பழைய ஜீரோ சைஸ் உடம்பிற்கு திரும்புவோம் என்றெல்லாம் நினைத்து நினைத்து வருந்துவார்கள். எனவே, குழந்தைப் பிறப்பிற்கு பின்னான உடல் எடை ஏன் கூடுகிறது, என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்வோம்.

போஸ்ட்பார்டம்...

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்தை தான் ‘போஸ்ட்பார்டம்’ என மருத்துவத்தில் சொல்வார்கள். இந்த காலமானது தாய் - சேய் இருவரின் உடல் மற்றும் மூளை சார்ந்த முக்கியமான நேரம். மேலும், தாய்க்கு இது மூன்றாம் உடல். அதாவது, குழந்தை பிறக்கும்முன் ஓர் உடல் வாகும், கர்ப்பமாய் இருக்கும்போது ஒரு உடல் வாகும், குழந்தை பிறந்த பிறகு ஒரு உடலாகவும் அவர்கள் மாறியிருப்பர். மனத்தளவிலும் எண்ணிலடங்கா மாற்றங்களும் இந்த மாதங்களில் நிகழும் என்பதால், குழந்தை மட்டும் பிறக்கவில்லை தாயும் கூடவே புதுப்பிறவி எடுத்திருப்பார்கள்.

பிரசவித்த வழிகள்...

சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த மருத்துவம்தான். எனினும் அறுவை சிகிச்சை என்றால் மொத்த ஆரோக்கியமும் போய்விடும் என்றும், சுகப்பிரசவம் எனில் உடலுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் பொதுவாக நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், இதில் உள்ள உண்மைகளை நாம் பார்க்கலாம்.

1.சுகப்பிரசவத்தில் விரைவில் குணமடையலாம். அதாவது, முதல் நாளே எழுந்து உட்கார முடியும். அதேபோல அனைத்து வேலைகளையும் மூன்று மாதம் கழித்து ஆரம்பிக்கலாம்.

2.சிசேரியன் அறுவை சிகிச்சை என்பது பெரிய மற்றும் முக்கிய அறுவை சிகிச்சைகளில் ஒன்று என்பதால், இதில் குணமடைவது சிறிது தாமதமாகும். ஆறு மாதத்திற்குப் பின் அனைத்து வேலை

களையும் செய்யலாம். இரண்டு வகை பிரசவத்திற்குப் பிறகும் அதிக எடை தூக்குவதை ஒரு வருடம் வரை தவிர்ப்பது நல்லது.

எடை அதிகரிக்க இயற்கை காரணம்...

மனிதன் குரங்காய் இருந்தபோதிலிருந்தே நிகழ்காலம் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் (அதாவது, குறைந்தது இரண்டு வருடமாவது) தாய்ப்பால் கொடுக்க உடலில் சத்து இருக்க வேண்டும் என்பதால், ரசாயன மாற்றங்கள் உதவியால் அதிக கொழுப்புச்சத்து சேரும்படி உடலில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரு வேலை பஞ்சம், வறுமை என எந்தச் சூழல் வந்தாலும், சேகரித்த சத்திலிருந்து தற்காப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கும். இவ்வகை பரிமாண அமைப்பு பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் இருப்பதால்தான் கர்ப்பமாய் இருக்கும் போதிலிருந்தே நமக்கு எடை கூடும். குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்பது நிறுத்தும் வரை இந்த ரசாயன மாற்றம் நிகழும்.

வருமுன் தடுப்போம்...

*தாய்ப்பால் சுரக்க அதிக உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவசியமில்லை. போதுமான சத்துகள் இருக்கும் உணவுகள் எது என்பதனை தெரிந்து எடுத்துக்கொண்டால் போதுமானது.

*கர்ப்பக் காலத்திலேயே பன்னிரண்டு கிலோவிற்கு மேல் எடை கூடியவர்கள் குழந்தை பிறந்த பின் உணவினில் கட்டாயம் அளவுகளை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் கர்ப்பமாய் இருந்தபோது இருந்த எடையை குறைக்க முடியும்.

*போதுமான ஓய்வு அவசியம்தான். எனினும் எந்த ஒரு சிறு வேலையும் செய்யாமல் இருந்தால் நிச்சயம் எடை கூடும். எனவே, துணி மடிப்பது, மெதுவாக இருபது நிமிடம் நடப்பது, வீடு பெருக்குவது, துடைப்பது என நம் உடம்பினை சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவசியம்.

*தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் கொடுப்பதால் அதில் கலோரிகள் கரையும் என்பதால் இயல்பாய் எடை குறையும்.

*ஆரம்பம் முதலே பவுடர் பால் மட்டும் கொடுக்கும் சூழல் உள்ளவர்கள் உடல் எடையை உணவின் வழியில் தாராளமாய் குறைக்கலாம். ஆனால், உடற் பயிற்சிகளுக்கு மேலே சொன்ன நிர்பந்தங்கள் பொருந்தும்.

இயன்முறை மருத்துவம்...

உடல் எடை குறைக்க உணவில் 50 சதவிகிதம் என்றால் உடற்பயிற்சியில் 50 சதவிகிதம் குறைக்க முடியும். எனவே, அருகில் உள்ள இயன்முறை மருத்துவ மையம் அல்லது ஆன்லைன் மூலம் உரிய இயன்முறை மருத்துவரை அணுகி எடையைக் குறைக்கலாம். மேலும் எடை கூடாமல் தடுக்கவும் செய்யலாம்.தசை தளர்வு பயிற்சிகள், தலை வலிமை பயிற்சிகள், இதயம், நுரையீரல் தாங்கும் திறன் பயிற்சிகள் என அனைத்தும் அவரவரின் உடல் நிலைக்கும், எந்த வகையான பிரசவத்தை பொருத்தும் கற்றுக் கொடுப்பர். யூடியூப், டிவி பார்த்து நம் விருப்பம் போல் செய்தால் தசை காயம், குடல் இறக்கம் (Hernia) போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

விளைவுகள்...

*எடை அதிகரித்துக்கொண்டே போவது வெறும் வெளியில் இருந்து பார்க்க வெளித்தோற்றம் மட்டும் பாதிக்கப்படுவது இல்லாமல், உடல் நிறைய சிக்கல்களை உருவாக்கும். குறிப்பாக குழந்தை பிறந்த பின் கூடும் எடையானது வயிற்றை சுற்றி படிவதால் குறைப்பது கடினம்.

*அடுத்த குழந்தைக்கு கருத்தரிக்க தாமதமாகும்.

*அடுத்த குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பக்கால சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

*அதிக எடையுள்ள தாய்க்கு எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

*நம் வீட்டில் தாய்ப்பால் கொடுக்கும் புது தாய்மார் அடிக்கடி ஏதேனும் சாப்பிட வேண்டும் என சொல்வார்.

இதனால் நாமும் இடைவெளி இல்லாமல் சாப்பிடுவோம். இதன் விளைவாய் நமக்கு இன்சுலின் எதிர்ப்புத் தன்மை உருவாகி பிற்காலத்தில் சர்க்கரை நோய் நிச்சயம் வரும்.

*அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும் தாய் எது இருக்கிறதோ அந்த உணவை அந்த நிமிட பசிக்கு சாப்பிட வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்வர். இதனால் காலை உணவாய் இட்லி சாப்பிட்டும், மீண்டும் பதினொரு மணி அளவில் இட்லி, தோசை, பிஸ்கெட் என மறுபடியும் மாவுச் சத்தினை உட்கொள்ளும் படி ஆகும். இதனாலும் சர்க்கரை நோய் வரும்.

மொத்தத்தில் எடையை நினைத்து வருந்தாமல், ஆறு மாதம் கழித்து உடற்பயிற்சிகள் தொடங்கலாம். ஆறு மாதம் வரை உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடைப்பயிற்சி செல்வது, உணவினில்

கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை செய்து வர வேண்டும். ஆகவே பிறந்திருக்கும் இந்த இனிய புத்தாண்டை குழப்பங்கள் இல்லாமல் இனிதாய்க் கடக்க இயன்முறை மருத்துவம் துணை கொண்டு செயல்படுங்கள். உங்கள் குழந்தையுடன் சிறகடியுங்கள்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்